கட்சியையும், கொள்கைகளையும் இம்முறையாவது ஓரமாக்குவோம்

ஜெம்சித்(ஏ)றகுமான்
மருதமுனை.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கின்றது.இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யபட உள்ளனர் என்பதை நாம் அறிவோம். இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் வட்டார அடிப்படையில் போட்டி இடுகின்றனர். சில வேட்பாளர்கள் முதன்மை கட்சிகள் மூலமாகவும், சில வேட்பாளர்கள் சுயேட்சைக்குழுக்கள் மூலமாகவும் போட்டி இடுகின்றனர். ஒரு வட்டாரத்தில் ஆறு வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர் என உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இந்த ஆறு வேட்பாளர்களுள் யாரை தெரிவு செய்வது என்ற சங்கடத்திற்குள் நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.அதற்கான காரணம் அந்த வட்டாரத்தில் போட்டியிடும் அனைவரும் ஏதோ ஓர் வகையில் எமக்கு தெரிந்தவர்களாக அல்லது உறவினர்களாக இருக்க கூடும்.எது எவ்வாறாயினும் ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு அவ்வட்டார மக்களிடம் உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களானது முற்றுமுழுதாக கிராமிய அபிவிருத்தியை மையமாக கொண்டவை.கிராமிய அடிப்படையான அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் உள்ளூராட்சி மன்றங்களினாலேயே கையாளப்படுகின்றது.ஆனால் நாம் இதை ஒரு போதும் கருத்தில் கொள்வதில்லை.அதன் காரணமாகவே தகுதியும் ஆளுமையும் தன்னகத்தே கொண்ட பலர் உள்ளுராட்சி மன்றங்களிற்கு தெரிவு செய்யப்படுவதிவல்லை.கடந்த காலங்களில் சரியான பிரதிநிதிகளை தவறவிட்டுவிட்டு கைசேதப்பட்டதை போன்று இம்முறையும் நாம் கைசேதப்பட்டுவிடக் கூடாது என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வட்டார அடிப்படையான பிரதிநிதித்துவத் தெரிவின் போது ஒப்பீட்டுக் கொள்கையை பிரதானமாக கையாள வேண்டும். வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை குறித்த சில காரணிகளை கொண்டு ஒப்பீடு செய்ய வேண்டும்.அதனடிப்படையில் உங்களது வாக்குகள் சரியான நபருக்கு அளிக்கப்பட வேண்டும்.ஒப்பீடு செய்யக் கூடிய சில பண்புகளை குறிப்பிடுகின்றேன்.

1. ஒழுக்க விழுமியங்கள் உள்ளவர்
2. மார்க்க பற்றுள்ளவர்
3. சமூக சிந்தனை உள்ளவர்
4. மக்கள் மனங்களை நேசிப்பவர்
5.வட்டார சுகாதாரத்தில் அக்கறை கொண்டவர்.
6.பொது நலமானவர்.
7.பிரச்சினைகளை காது தாழ்த்தி கேட்க கூடியவர்.
8.துணிந்து பேசக் கூடியவர்.
போன்ற பண்புகளை வேட்பாளர்கள் மத்தியில் ஒப்பீடு செய்ய வேண்டும்.

வட்டாரத் தேர்தல் முறையில் சின்னம், கட்சி, குழு, கொள்கை என்பது எம்மிடையே இருந்து இம்முறை ஓரங்கட்டப்பட வேண்டும்.சமூகம் என்பது ஒவ்வொரு தனி நபரையும் சாரக் கூடியது. தனிநபர்களிலிருந்து எடுக்கும் தீர்மானங்களே சமூகத்தை தீர்மானிக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் சிறந்த சிந்தனையாளர்களாக மாற வேண்டும். வாக்கு எனும் ஆயுதத்தை இம்முறையாவது சரியாக பயன்படுத்துவோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*