முஸ்லிம்கள் என்றாலே கசக்கும் ஜனாதிபதிக்கு, அவர்களின் உதவிகள் மட்டும் இனிக்கிறது !!

Spread the love

இலங்கை நாட்டின் அவசர தேவைகளுக்கு முஸ்லிம் நாடுகளே உதவி செய்கின்ற போதும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இலங்கை முஸ்லிம்களை புறக்கணித்து செயற்படுவதிலிருந்து, அவர் முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்த முயற்சிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கை நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை யாராலும் மறுத்திட முடியாது. இலங்கையில் புரையோடிப்போயிருந்த யுத்தத்தை ஒழிப்பதற்கு, ஆயுத ரீதியான உதவி வழங்கியதில் பாக்கிஸ்தான் நாட்டின் பங்களிப்பு இன்றும் நினைவு கூறப்படுகிறது.அது போன்று இன்றும் பல அவசர சந்தர்ப்பங்களின் போது முஸ்லிம் நாடுகளே உதவி செய்வதை நாம் கண்ணூடாக அவதானிக்க முடிகிறது.

அண்மையில் இலங்கை நாடானது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உர விநியோகத்தில் பாரிய சவாலை எதிர்நோக்கியது. பெற்றோல் தட்டுப்பாட்டால் நாடே சில நாட்கள் ஸ்தம்பிதமுற்றது. எமது அருகாமையில் உள்ள இந்திய நாடானது, இதனை சாதகமாய் பயன்படுத்தி தரமற்ற எரிபொருளை விற்பனை செய்ய முயற்சித்தது. இதன் போது, இலங்கை நாட்டுக்கு துபாய் அரசே அவாசரமாக எரிபொருளை அனுப்பி உதவி செய்தது.

தற்போது நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த உரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூட, பாக்கிஸ்தான் நாடே உதவி செய்கிறது. அதுவும் ஒரு தொலைபேசி அழைப்பினூடான கோரிக்கைக்கு. ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்பார்கள். இலங்கைக்கு மிகவும் இக்கட்டான சந்தர்ப்பங்களின் போது, முஸ்லிம் நாடுகள் உதவி செய்கின்ற போதும், இலங்கை முஸ்லிம்களை இலங்கை ஜனாதிபதி சற்றேனும் கவனத்தில் கொள்வதாக இல்லை.

கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி இன்னும் வாய் திறக்கவில்லை.முஸ்லிம் முக்கியஸ்தர்கள் பலரும் அழைத்தும், தேசிய மீலாத் விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை.இப்படி ஜனாதிபதி முஸ்லிம்களை புறக்கணிப்பதற்கு பல ஆதாரங்களை காட்டலாம்.முஸ்லிம் நாடுகளின் உதவி மட்டும் தேவை, முஸ்லிம்கள் தேவையில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டை, அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் மேலாக, இவ்வாட்சி அமைத்தலில் முஸ்லிம்களின் அபரிதமான பங்களிப்பு உள்ளமை, இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அ அஹமட்,

ஊடக செயலாளர்

முஸ்லிம் முற்போக்கு முன்னனி .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*