தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Spread the love

சிறிய கட்சிகளின் தயவில்லாமல் ஆட்சியமைக்கும் நோக்கத்தில்தான் இந்த புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசிவருகிறேன். ஆனால், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போதையை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நல்லதொரு நிவாரணியை கொடுக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

திருகோணமலையில் மு.கா. சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (01) தம்பலகாமத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகமுள்ள இடங்களில் தங்களுடன் சேர்ந்து போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி எங்களிடம் பேசிவந்தது. எங்களது ஆதரவுள்ள சபைகளை யானைச் சின்னத்தில் வென்றுகொடுத்தால், வெளியில் அதை அவர்களது சபையாக காண்பிப்பார்கள். இதன்மூலம் ஆட்சியாளர்களிடமிருந்து எங்களுக்கு அனுசரணை கிடைக்கும்.

இதேபோன்று திருகோணமலையில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஓரிரு நாட்கள் இருக்கும்நிலையில் கூட ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். ஐ.தே.க. அமைப்பாளர்கள் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கே விருப்பப்பட்டார்கள்.

இந்நிலையில், மு.கா. மூலம் அரசியல் அதிகாரம் பெற்ற ஒரு அமைச்சர் அதற்கு அடம்பிடித்துக்கொண்டிருந்தார். கடைசியில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே நடந்தது. திருகோணமலையில் மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. எங்களது பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்.

மு.கா. மரச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதே, கட்சி ஆதரவாளர்களின் ஏகோபித்த ஆதரவாகவும் இருந்தது. மு.கா. தனித்துநின்று சபைகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கை கட்சியை மேலும் உற்சாகநிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

இயங்கும் அரசியலுக்குள் பெண்களை உள்ளீர்க்கவேண்டியது காலத்தின் தேவையாகும். பெண்களை பெயருக்கு வேட்பாளர்களாக நிறுத்தாமல், ஆளுமைமிக்க பெண்களை தேர்தலில் களமிறக்கவேண்டும். பெண்களின் அரசியல் வகிபாகம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். தேர்தலின் நிமித்தம் மகளிர் காங்கிரஸ் மாநாட்டை நடாத்துவதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*