தேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ

Spread the love

தேர்தல் வருவதால், இத்தனை நாளும் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபணம் செய்யாது, சாதாரண பாமர மக்களைப் போன்று எம் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு இவ்வாட்சியினர் வருவார்கள் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த தேர்தலானது இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக அமையப்போகிறதென்பதில் ஐயமில்லை. எமது தோல்விக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாட்சியாளர்கள் மேற்கொண்ட போலிப் பிரச்சாரங்கள் தான் பிரதான காரணமாக இருந்தன.

நாங்கள் தான் ரக்பி வீரர் தாஜுதீனை கொலை செய்தோம் என்ற பெரும் குற்றச்சாட்டை கூறியிருந்தார்கள்.முதலில் எனது சகோதரரின் பெண் தோழிக்காக அக் கொலை நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.அதன் பின்னர் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவே எம் மீதான போலிக் குற்றச் சாட்டு என்பதற்கான போதுமான சான்றாகும்.

இதனை சாதாரணமாக சிந்திபோரும் அறிந்து கொள்வர். ரகர் விளையாட்டானது செஸ், கரம் விளையாட்டை போன்ற விளையாட்டல்ல.தள்ளிவிட்டு விளையாடும் விளையாட்டாகும். தேர்தல் வருவதால் மிக விரைவில் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மேடை ஏறுவார்கள்.

அது மட்டுமல்ல, நாங்கள் பாரிய பணக் கணக்குகளையும், நகைப் புதையல்களையும், லம்போகினி வாகனங்களையும், மாட மாளிகைகளையும் வைத்திருப்பதாக கூட பிரச்சாரச்சாரம் மேற்கொண்டனர்.இவர்கள் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இவர்கள் கூறியதில் ஒன்றையாவது நிரூபித்துள்ளார்களா? மூன்று வருடங்களில் எத்தனையோ விடயங்களை சாதித்திருக்கலாம். எனது தனத்தை ஆட்சிக்கு வந்து நான்கு வருடத்துக்குள் இலங்கை நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தையே முடித்து காட்டியிருந்தார்.

இவர்கள் எங்கள் மீது முன் வைத்த, ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியாதா? பானையில் இருந்தால் தானே, அகப்பையில் வரும். எமது தங்கப் புதையலை கண்டு பிடிக்க நீச்சல் தடாகங்களை தோன்றிய சம்பவங்களை கூட நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அவ்வாறு தோன்றியவ்ர்களுக்கு ஏமாற்றமே இறுதியில் எஞ்சியது. அவர்கள், தங்களது கற்பனையில் வரைந்து வைத்திருந்தவைகள் எப்படி உண்மையாகும்?

மூன்று வருடங்கள் கடந்தும், எதனையும் நிரூபிக்க முடியாதவர்கள், மக்கள் முன் வந்து, நாம் அதை செய்தோம், இதை செய்தோம் என கூற வெட்கப்பட வேண்டும். இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ளும் மக்களை போன்ற ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இவற்றை மக்கள் நம்பும் காலம் மலையேறிவிட்டது. இருந்தாலும், மக்களின் உள்ளத்தை உளவியல் ரீதியாக மாற்றும் வண்ணம் வருகை தந்து, இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம். அவை தொடர்பில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருப்பதோடு ஏனையோரை விழிப்படையச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

joint opposition tamil media unit

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*