அரசியல் சாக்கடையை நாம் சுத்தம் செய்வோம்! NFGG பிரதி தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

0
587

அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இந்த சாக்கடையை யார் சுத்தம் செய்வது? இந்த சாக்கடையை சுத்தம் செய்ய நாம் இறங்கியிருக்கிறோம். அதன்போது நம் மீது படும் அழுக்குகளை கழுவி விட்டு நம் இலக்கை நோக்கி முன்னே செல்வோம் என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.

நேற்று (7) அக்கரைப்பற்றில் நடைபெற்ற NFGG யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்:

நாம் யாரும் வானத்திலிருந்து வீழ்ந்த அமரர்கள் கிடையாது. மனிதர்கள் தவறிழைக்கக்கூடியவர்கள்தான். ஆனால், நாம் ஒருபோதும் வரலாற்றுத் தவறுகளை இழைக்க மாட்டோம். நாம் தவறிழைத்தால் சுட்டிக்காட்டுங்கள். அதனை சீர்செய்துகொண்டு பயணிப்போம்.

நாம் முழுமையாக ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் செயற்படுகின்றோம். இதுவரையில் நாம் எந்தவொரு தேர்தலுக்காகவும் போஸ்டர்கள் ஒட்டியது கிடையாது. இப்படி போஸ்டர்கள் ஒட்டாமல், மக்கள் மத்தியில் NFGG யின் சின்னத்தை எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.

ஆனால், நாம் ஒருபோதும் தேர்தல் சட்டங்களை மீறி போஸ்டர்கள் ஒட்ட மாட்டோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு போஸ்டரும் ஒட்டாமல், நமது கட்சியின் வேட்பாளர் வைத்தியர் சாஹிர் 14, 500 வாக்குகளை திருகோணமலையில் பெற்றார். நாம் எப்போதும் சட்டங்களை மதித்து செயற்படுகின்றோம்.

நாம் மக்களை நேரடியாக வீடுகளுக்குச் சென்று அணுகி, நமது கொள்கைகளையும் திட்டங்களையும் அவர்களுக்கு விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அவர்களை அறிவுபூர்வமாக சிந்திக்க வைத்தே, அரசியலில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றோம். – என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here