அரசியலில், பள்ளிவாசல்களின் வகிபாகம்

0
291

முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது தொழுகை நடாத்துவதுடன் முற்றுப் பெறுவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் மார்க்கத்தின் வழிகாட்டல் இருக்கின்றபோது பள்ளிவாசல்களின், உலமாக்களின் வகிபாகமும் இருக்கத்தான் செய்கின்றது. முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் பள்ளிகளை தங்களது வழிகாட்டும் மையங்களாக பேணி வந்திருக்கின்றார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில் அரசியல் இரண்டறக் கலந்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு மதக் கொள்கைபோல அரசியல் அம்மக்களை ஆட்கொண்டிருக்கின்றது. இச் சூழலில் அரசியலைப் பற்றி பேசுவதையிட்டும், அதற்காக மக்களை நெறிப்படுத்துவதில் இருந்தும் பள்ளிவாசல்களோ நிர்வாகங்களோ முற்று முழுதாக விலகி இருக்க முடியாது. 

இதன் அர்த்தம், பள்ளிவாசல்கள் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அரசியல்வாதிகளின் அலுவலகங்களை பள்ளியில் திறப்பதோ அல்ல. மாறாக, முன்மாதிரியான ஒரு அரசியல் கலாசாரத்திற்கு மக்களை நல்வழிப்படுத்துகின்ற பாரிய பொறுப்பை பள்ளிவாசல் நிர்வாகங்களும் உலமாக்கள் மற்றும் மார்க்கம் படித்தோரும் கொண்டிருக்கின்றனர் என்பதாகும். இதை மறுதலிக்க முடியாது.

துருக்கி தொப்பி போராட்டம்

இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக எழுச்சியில் பள்ளிவாசல்களுக்கு இருக்கின்ற பங்கின் அளவுக்கு வேறெந்த நிறுவனங்களுக்கும் இருப்பதாக குறிப்பிட முடியாது. முஸ்லிம்களின் உணர்வையும் ஒன்றுதிரண்ட பலத்தையும் பெருந்தேசியத்திற்கு வெளிப்படுத்திய ‘துருக்கி தொப்பி’ போராட்டம் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். 1905ஆம் ஆண்டு பல பள்ளிவாசல்களை மையப்படுத்தியதாக இதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு மருதானை பள்ளிவாசல் முன்றலில் மாபெரும் கூட்டமொன்று இடம்பெற்று பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. பல நாட்களாக தொடர்ந்த இந்தப் போராட்டம் கடைசியில் வெற்றிபெற்றது.

அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்னிறுத்திய கவனஈர்ப்பு பேரணிகள் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் இருந்தே ஆரம்பமாகின்றன. பல தீர்மானங்களுக்கும் நகர்வுகளுக்கான கருத்தியல் மையமாக பள்ளிவாசல்கள் இருந்திருக்கின்றன. மிக முக்கியமாக, இலங்கை முஸ்லிம்களுக்கு தனியான அடையாளத்துடனான ஒரு அரசியல் இயக்கம் வேண்டுமென்ற எண்ணத்தில் மர்ஹ_ம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தபோது அவர் பல சந்தர்ப்பங்களில் பள்ளிகளில் வறாந்தாக்களில் படுத்துறங்கி, சுபஹ_ தொழுதுவிட்டுச் சென்றுதான் தன்னுடைய அரசியல் பணியை மேற்கொண்டிருக்கின்றார் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம்.

யுத்தமேகம் வடக்கு, கிழக்கில் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்கள் தஞ்சம்புகும், பாதுகாப்புத் தேடியோடும் இடங்களாக இருந்தன. இராணுவமோ ஆயுத இயங்கங்களோ முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களை திருப்பிய வேளையிலும், இருந்த இடத்தை விட்டு வெளியேற்றிய தருணங்களிலும் தமது பிள்ளைகுட்டிகளோடு அடைக்கலம் தேடிய இடங்களாக பள்ளிவாசல் இருந்திருக்கின்றன. இயற்கை அனர்த்தங்களின் போதும் ஏனைய மதங்களின் மதஸ்தலங்களைப் போலவே பள்ளிவாசல்களும் ஒரு பாதுகாப்பு கூடாரமாக இருந்தன.

பிற்காலத்தில், பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்தமையாலும் பள்ளிக்குள் குண்டு வீசப்பட்டமையாலும் இனவாதம் நெருக்குவாரப்படுத்தியதாலும் பள்ளிகளில் கூட அச்சம் நிலவியது என்பது தனிக்கதை. ஆனால் இன்று வரைக்கும் முஸ்லிம்களின் சமூக, அரசியலில் பள்ளிவாசல்களுக்கும் உலமாக்களும் தனியிடமும் செல்வாக்கும் இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வழிப்படுத்த முடியாது

முஸ்லிம்களுக்குள் ஒருகேடுகெட்ட அரசியல் கலாசாரம் உருவான பிறகு பள்ளிவாசல்களால் அரசியல்வாதிகளை வழிப்படுத்த முடியாமல் போனது என்பதே நிதர்சனம். பள்ளிவாசலின் நிர்வாகங்களில் உள்ளுர் அரசியல்வாதியின் செல்வாக்கு ஏற்பட்டது. சில இடங்களில் அரசியல் தலையீடு இன்றி ஒரு நிர்வாக சபையை கூட தெரிவு செய்ய முடியாத நிலை உருவானது. ஆரசியல் தலைவர்களின் குற்றங்களை தட்டிக் கேட்க முடியாமல் போனது. அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டு சமுக அரசியலில் மக்களை நல்வழிப்படுத்தும் கடமையை சுயாதீனமாக செய்ய முடியாத நிலைக்கு பள்ளிவாசல்கள் தள்ளப்பட்டன.

ஏன், பள்ளிவாசல்களின் குத்பாப்  பிரசங்களில் அரசியல் ரீதியான அறிவுரைகளை வழங்குவது கூட யுத்த ஆலோசனை வழங்குவது போல ஒரு தவறான காரியமாக பார்க்கப்படுகின்றது. சில அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை விமர்சித்து மார்க்கச் சொற்பொழிவு நிகழ்;த்திய உலமாக்கள் அந்த அரசியல்வாதியின் ‘கோபப்;பார்வைக்கு’ ஆளாகவும் நேர்ந்தது.

இப்படியாக செயற்பாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக பள்ளிவாசல்கள் இருந்த நிலை மாறி, பள்ளிவாசல்களில் அரசியல்வாதிகள் அதிகாரத்தை பிரயோகிக்கும் நிலைவந்துவிட்ட சூழலிலே சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் அரசியல் களத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிக்கின்றது.

கேடுகெட்ட அரசியல்

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றை தருவதாக உள்ளுர் அரசியல்வாதிகள் முதற்கொண்டு, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தொட்டு, நாட்டின் பிரதமர் வரை எல்லோரும் நம்ப வைத்து ஏமாற்றியதை ஆட்சேபித்து அப்பிரதேச மக்கள் கொதித்தெழுந்தனர். இதனை கட்டுக்கோப்புடன் நெறிப்படுத்துவதில் சாய்ந்தமருது பள்ளிவாசல் வெற்றி கண்டது. வேறு எந்தக் கட்சிகளிலும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டதுடன், அவ்வூரின் பலத்தை கல்முனை மாநகர சபையில் தனித்து காண்பிப்பதற்காக ஒரு சுயேட்சைக்குழுவும் களமிறக்கப்பட்டது.  

இப்போது அந்த முன்னெடுப்பு பல்வேறு ஜனநாயக, சட்ட ரீதியான சிக்கல்களை தோற்றுவித்திருந்தாலும் கூட, அரசியல் ஒரு சாக்கடை என்று ஏனைய பள்ளிவாசல் நிர்வாகங்களும் உலமாக்களும் ஒதுங்கியிருக்கின்ற ஒரு சூழலில், சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூக அரசியலில் எடுத்துக்கொண்ட வகிபாகம் மிகுந்த அவதானிப்பை பெற்றதை மறுப்பதற்கில்லை.

முஸ்லிம் அரசியலில் இஸ்லாமிய மதத்திற்கு முரணான எத்தனையோ கைங்கரியங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்லினங்கள் வாழும் நாட்டில் யதார்த்தபூர்வமாக நோக்கினால் இஸ்லாமிய அரசியல்வாதியாக வாழ்வதென்பது மிகக் கடினமாகும். ஆயினும், ஒரு தலைமைத்துவம் அல்லது மக்களின் பிரதிநிதி கொண்டிருக்கக் கூடாத எத்தனையோ கெட்ட குணவியல்புகளை பெருமளவான முஸ்லிம் அரசியல்வாதிகள் கொண்டிருக்கின்ற போதிலும் அதனை தட்டிக்கேட்க முடியாத, அவர்களது தவறுகளை மார்க்க ரீதியாக தவறாக தீர்ப்பு (பத்வா) வழங்க முடியாதவையாகவே பள்ளிவாசல் சம்மேளனங்கள் இருந்து கொண்டிருக்கின்றன என்பதை சொல்லாமல் விட முடியாது.

ஏழைகளுக்கு வருகின்ற அரச உதவிகளை விற்று பணமாக்கும் அரசியல்வாதிகள், தொழில்களை வழங்க இலஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் வருடக்கணக்காக ஏமாற்றும் அரசியல்வாதிகள், அரசியலுக்குள் மதுப்பழக்கத்தை ஊடுருவச் செய்துள்ளதுடன் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ளவர்கள் எனக் கருதப்படும் மக்கள் பிரதிநிதிகள், ஊழல் பேர்வழிகள், இன்னும் எழுதுவதற்கு வெட்கக் கேடான காரியங்களில் ஈடுபட்ட எந்த அரசியல்வாதியையும் தட்டிக் கேட்க முடியாத நிலையிலேயே முஸ்லிம் சமூகமும் பள்ளிவாசல்களும் உலமா சபை போன்ற உயரிய மத நிறுவகங்களும் இருக்கின்றன என்பது மிகவும் கவலை தருவதாகும்.

இதேவேளை, சாய்ந்தமருது பள்ளிவாசல் போல நேரடியாக களத்திற்கு இறங்காவிட்டாலும் நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள பள்ளி நிர்வாகங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டை அவ்வப்போது எடுத்து வந்திருக்கின்றன. அதாவது, மறைமுகமாக ஓரிரு அரசியல்வாதிகளை ஆதரித்த பள்ளி நிர்வாகிகளும் பகிரங்கமாகவே ஆதரவாக பேசிய நிர்வாகிகளும் நமது சமூகத்தில் இல்லாமலில்லை.

சிலவேளைகளில் குறிப்பிட்ட அரசியல்வாதியின் மனதை வெல்வதற்காக இவ்வாறு அவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் பிழையாக அமைந்ததும் உண்டு. இவ்வாறான விடயங்களை சம்பந்தப்பட்டோர் மீள் பரிசீலனை செய்யவும் இல்லை. இந்த இடத்தில்தான் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலின் செயற்பாடுகள் மற்றும் அதன்பின்வந்த விளைவுகள் குறித்து பேச வேண்டியிருக்கின்றது.

கவனிக்க தவறியது

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு தமது அரசியல் தலைமைத்துவங்களால் நம்பவைக்கப்பட்டு பேய்க்காட்டப்படுகின்றார்கள் என்பதற்கு அட்டாளைச்சேனையும் சாய்ந்தமருதும் நல்ல உதாரணங்களாகும். அந்தவகையில் சாய்ந்தமருது சார்பாக வேறு எந்த அரசியல் கட்சியிலும் போட்டியிடக் கூடாது என்று ஊர் மக்கள் முடிவு எடுத்ததுடன் சுயேட்சைக்குழுவில் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து, அங்கு தமது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற முடிவை எடுத்தது. ஆனால், சாணக்கிய தலைவரின் கீழ் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் அங்கு வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த இடத்திலேயே ஊருக்குள் ஒரு முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டது எனலாம்.  

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளால் நிகழ்த்தப்படுகின்ற எந்தவொரு அநியாயத்திற்கு எதிராக எந்த ஊரிலும் பள்ளிவாசல் சமூகத்தினரால் மக்களை ஒன்றுதிரட்ட முடியாதிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், சாய்ந்தமருது மக்கள் பள்ளிவாசலின் தலைமையில் ஒருகுடையின் கீழ் வந்திருப்பதானது நவீன முஸ்லிம் அரசியலில் ஒரு முக்கியமான விடயமாகும். இந்த ஒற்றுமையை சாத்தியப்படுத்தியதை சரி பிழைகளுக்கு அப்பால் நின்று பாராட்டாமல் இருக்கவும் முடியாது.

அரசியலும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி என்று ஆகிவிட்ட பிறகு பள்ளிவாசல்கள் அதுவிடயத்தில் மக்களை வழிப்படுத்தாமல் இருக்க முடியாது. அத்துடன், சாணக்கியம் என்றும், வியூகம் என்றும் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அரசியல் தலைமைகளுக்கு இவ்வாறான ஒரு பாடத்தை புகட்ட வேண்டிய காலத்தின் அவசியமும் இருக்கின்றது. இதற்காக எல்லா பள்ளிவாசல் நிர்வாகங்களும் சம்மேளனங்களும் காத்திரமான திட்டங்களை வகுக்க வேண்டியும் இருக்கின்றது.

ஆனால், இங்கு ஒரு விடயத்தை மிகவும் கவனிக்க வேண்டும். அதாவது, இலங்கையில் இனவாதிகள் கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பெருந்தேசியவாதம் முஸ்லிம்களின் அரசியலை முடக்குவதற்கு பிரயாசைப்படுகின்றது. இந்த சூழலில் பள்ளிவாசலால் முன்னின்று நடத்தப்படுவதாக கருதப்படும் எல்லா செயற்பாடுகளும் சட்டத்தை மதிப்பதாக, ஜனநாயக ரீதியானதாக, ஒழுக்கவிழுமியங்கள் கொண்டதாக, வன்முறைகளுக்கு அப்பாற்பட்டதாக, சாத்வீகமானதாக அமைவதை பள்ளிவாசல் நிர்வாகங்கள் உறுதிப்படுத்துவது மிக மிக கட்டாயமானதாகும்.

இந்த அடிப்படையில் சாய்ந்தமருது நிலைவரத்தை நோக்கினால், அங்கு இடம்பெற்ற மக்கள் எழுச்சி வன்முறையாக மாறிவிடுமோ கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் சண்டை மூண்டுவிடுமோ அல்லது பாதுகாப்பு தரப்பினர் உயர்ந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி விடுவார்களோ என்று எண்ணம் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் மேலெழுந்தது.

ஜனநாயக நாடொன்றில் ஜனநாயக ரீதியான சாத்வீக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு உரிமையிருக்கின்றது. ஏமாற்று அரசியல்வாதிகளையும் அவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், அதனை ஜனநாயக விழுமியங்களுக்குள் நின்றுகொண்டே செய்ய வேண்டியிருக்கின்றது. அதுவும் பள்ளிவாசல் முன்னிற்கின்றது என்பதால் ஒரு சிறிய தவறு நடந்தாலும் அந்தப் பழி பள்ளி நிர்வாகத்தின் மீதே விழும். எனவே ஒவ்வொரு நகர்விலும்  உயர்ந்தபட்ச ஒழுக்கமும் விழுமியமும் பேணப்பட வேண்டியிருக்கின்றது.

அந்த வகையில், நிலைமைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் முயற்சி செய்தது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், துடிப்புள்ள இளைஞர்களின் எழுச்சியும் வெஞ்சினமும் எந்த நேரத்திலும் வேறு உருவெடுத்துவிடுமோ என்று சில சமூக நோக்குனர்கள் அச்சமடைந்தனர். குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அந்த  ஊருக்குள் வரமுடியாமல் ஆக்கப்பட்டமை, இளைஞர்கள் சிலர் கறுப்புக் கொடியேந்திருந்ததாக தகவல் வெளியாகியமை போன்ற அசம்பாவிதங்கள்…. சாய்ந்தமருது பள்ளிவாசலால் ஒவ்வொரு தனிநபரையும் கட்டுப்படுத்தி கண்காணிப்பது சாத்தியமில்லை என்ற யதார்தத்தை உணர்த்தியது.

மறுபுறத்தில், இது ஜனநாயக நாடு. தேர்தல் காலத்தில் எந்தவொரு பிரதேசத்திலும் எந்தக் கட்சியையும் போட்டியிடக் கூடாது என்று கூற முடியாது. பள்ளிவாசல் இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்கையில், ஒரு கட்சித் தலைவர் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் முடியாது. இவ்வாறான நிகழ்வுகள் எல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை ஆகும்.

மேலும் சிக்கல்

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் இவ்விவகாரத்தில் நடந்து கொண்டமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதால், அவரது நகர்வு சாய்ந்தமருதுக்குள் இன்னும் மு.கா. எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது என்றே தோன்றுகின்றது. இறக்காமத்தில் உரையாற்றிய மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம், ‘சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை எடுத்திருப்பதாக’ குறிப்பிட்டு புதியதொரு சர்ச்சையை தோற்றுவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உடனடியாக தான் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று அறிவித்தார். ஆனாலும், மதஸ்தலங்களை மையமாகக் கொண்டு அரசியல் செய்வதில் உள்ள சட்ட ஏற்பாடு பற்றி ஆணைக்குழு மறைமுகமாக வலியுறுத்தியது. அதிலிருந்து இரு தினங்களுக்குள் வக்பு சபையினால் சாய்ந்தமருது பள்ளிவாசலின் இடைக்கால நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளது. எனவே,  இதற்குப் பின்னால் மு.கா. செயற்பட்டிருப்பதாக சாய்ந்தமருதில் பேச்சடிபடுகின்றது. அம்பாறையில்  களநிலை சவால்களை சந்தித்திருக்கின்ற சூழ்நிலையில், இந்த புதிய சிக்கல் ஏற்படாதவாறு தடுப்பதற்கு மு.கா. தவறிவிட்டது.  

சாய்ந்தமருது பள்ளிவாசலின் நிர்வாக சபையின் ஆயுட்காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்காலிகமாக பதவிவகித்த இடைக்கால நிர்வாக சபையின் ஆயுட்காலமே இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றதே தவிர, பள்ளிவாசலின் நிரந்தர நிர்வாக சபை கலைக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இதனையடுத்து முன்னைய நிர்வாகத்தினர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து தமது கவலையை தெரிவித்திருக்கின்றனர்.

வாக்கு எனும் ஆயுதம்

பள்ளிவாசல் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்ட போதும் சாய்ந்தமருது மக்களின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பது இங்கு முக்கியமானது. எனவே, சாய்ந்தமருது மக்கள் நிதானமாக ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது, மக்களில் கிட்டத்தட்ட 90 வீதமானோர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்றால், எந்த கட்சியும் ஊருக்குள் வரக் கூடாது என்று தடைபோட தேவையில்லை, யாருடனும் முரண்பட்டு பள்ளிவாசலின் நன்மதிப்பு குறைய வழிவகுக்கவும் அவசியமில்லை. எதைச் செய்ய நினைக்கின்றீர்களோ அதை உங்களின் வாக்குகளின் ஊடாக மிக இலகுவாக செய்துவிட முடியும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

இதேவேளை, சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்னின்று நடத்திய இந்த வெகுஜனப் போராட்டத்தின் மீது சில விமர்சன ரீதியான பார்வைகள் இருந்தாலும் முஸ்லிம் அரசியலை சரியாக கட்டமைப்பதற்கு பள்ளிவாசல்கள் முக்கிய பங்கினை வகிக்க முடியும் என்பதை அது நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. அந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் கலாசாரத்தில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்தவும் மக்களை சமூக, அரசியல் வழித்தடத்தில் சரியாக வழிநடாத்தவும் பள்ளிவாசல் நிர்வாகங்கள், உலமாக்கள், உலமா சபை முன்வர வேண்டும்.

இதன் அர்த்தம், பள்ளிவாசல்களும் உலமாக்களும் நேரடியாக அரசியலில் இறங்க வேண்டும் என்பதல்ல. மாறாக, அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் முன்னர் கூடியிருந்து பிரார்த்தனை செய்யும் இடமாக மட்டுமன்றி, ஆன்மீகத்தை போதித்துக் கொண்டே அரசியல் மீதான மீள்வாசிப்பை நிகழ்த்தும் இடமாகவும் பள்ளிவாசல்கள் மாற்றப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் ஜனநாயக ரீதியானதாக, சட்டத்திற்கு உட்பட்டதாக, அளவோடு இருந்தால் நல்லது நடக்க வாய்ப்பிருக்கின்றது.

மக்களை நல்வழிப்படுத்தல் என்பது ஆன்மீக ரீதியானது மட்டுமல்ல!

எல்.நிப்றாஸ் (வீரகேசரி 14.01.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here