பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

Spread the love

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நசீர் தெரிவித்தார்.

பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அன்பஸ் அமால்தீனின் உருவப்படத்துடன் கட்டப்பட்டிருந்த உயரமான கட்டவுட்டை மையமாக வைத்தே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும், மக்கள் காங்கிரஸுக்கான ஆதரவு இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வருவதனால், அதனை பொறுக்கமாட்டாத தீய சக்திகளே இவ்வாறான மோசமான செயலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொல்கஹவெல, ஒருலியத்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் காரியாலயம் நேற்று மாலையே (14) திறந்து வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கபட்ட இந்தக் காரியாலயத்தின் திறப்பு நிகழ்வில், பன்னூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தமது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இதனை பொறுக்கமாட்டாத சில தீய சக்திகள் கோழைத்தனமான முறையில் எமது செயற்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் குருநாகல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*