அன்று ஹக்கீமை தலையில் சுமந்தவர்கள், இன்று தலையெடுக்க காத்திருக்கும் நிலை!

0
219

ஒரு காலம் இருந்தது. அமைச்சர் ஹக்கீம் வரும் நேரத்தை எதிர்பார்த்து, மக்கள் கால் கடுக்க காத்து நிற்பார்கள். பல மணி நேரம் கூட எடுக்கும். அதுவெல்லாம் யாருக்கும் ஒரு பொருட்டாகவே தெரியாது. அவர் வந்துவிட்டால், அவரது கால் தரையில் படாத வண்ணம், தலை மீது சுமந்து சென்று மேடையில் அமரச் செய்வார்கள். இப்படியான ஒருவரின் இன்றைய நிலைமை, பாதுகாப்பு படை வீரர்களின் உதவியோடு கூட்டங்களையும், மிகத் தூரமான மாற்று வழிகளை பயன்படுத்தி, இன்னுமொரு இடத்துக்கும் செல்ல வேண்டியும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அமைச்சர் ஹக்கீமுக்கு அக்கரைப்பற்றே சவாலாக அமைந்திருந்தது. இருந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற சவால் அங்கும் ஏற்படவில்லை எனலாம். அமைச்சர் ஹக்கீமின் நேற்றைய அம்பாறை மாவட்ட பயணத்தில் சாய்ந்தமருது மற்றும் பாலமுனை இடங்களில் அமைச்சர் ஹக்கீமுக்கு பெரும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

பாலமுனை கூட்டத்தில் மக்கள் திரண்டு பாரிய எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் பாலமுனை கூட்டமெல்லாம் எந்த வித எதிர்ப்புக்களுமின்றி நடந்தேறியவைகள். அந்த கூட்டத்துக்கே சென்று, மக்கள் எதிர்ப்புக்களை வெளியிடுகிறார்கள் என்றால், அமைச்சர் ஹக்கீமுக்கு எந்தளவு எதிர்ப்புக்கள் இருக்குமென சிந்தித்து பாருங்கள். இது அன்சிலின் செயற்பாடு என சிலர் கூறுகின்றனர். அமைச்சர் ஹக்கீமை களம் சென்று எதிர்க்குமளவு அன்சில் பலம் வாய்ந்தவரா? ஒரு காலம் இருந்தது. பாலமுனை போன்ற இடங்களில் கூட்டத்தை குழப்பத் தேவையில்லை. மு.கா பற்றி யாராவது தவறாக கதைத்தால் போதும், அவர்களது மண்டை உடைந்து விடும்.

நேற்று மு.காவின் கூட்டமொன்று மருதமுனையில் ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன்னர் பாலமுனை கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டிருந்தார். சாய்ந்தமருதினூடாக சென்றால் பாலமுனையில் இருந்து மருதமுனை 21km ஆகும். அவ்வாறு செல்ல முடியாதவாறு மக்கள் தடையை ஏற்படுத்தி இருந்தனர். இதன் காரணமாகஇ அமைச்சர் ஹக்கீம் சம்மாந்துறையினூடாக மறைந்து சென்றதாக கூறப்படுகிறது. இது சுமார் 34 km தூரமுடையது. இப்படி அமைச்சர் ஹக்கீம் தனது வாழ் நாளிலே மறைந்து சென்ற சரித்திரம் இருக்காது. தனது கோட்டையினுள், அதுவும் தன்னை நேசித்த மக்கள், எதிர்ப்பதென்பது சாதாரணமானதொரு விடயமல்ல.

இந்த இரு ஊர்களும் அமைச்சர் ஹக்கீமை தலையில் சுமந்த ஊர். இந்த ஊர்களில் அமைச்சர் ஹக்கீமுக்கு இப்படி எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளமையானது, அவரது அரசியல் வாழ்வை பொசிக்கிடப்போகிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here