நிறைவேற்றுப் பணிப்பாளராக பதவியுயர்வை பெற்ற எச்.எம்.எம்.றியாழால் பெருமை கொள்ளும் கல்குடாத் தொகுதி – கல்குடா வாழ் புலமையாளர் சமூகம்

0
268

இலங்கையின் முன்னணி கோதுமை மா ஆலைகளுள் ஒன்றான செரண்டிப் கோதுமை மா ஆலை 2018 இல் அதன் பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்ற நிலையில் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளராக வணிக நிபுணர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களை நியமித்துள்ளது. கம்பனியின் இலக்குகள் மற்றும் விரிவாக்கல் திட்டங்களை அடைய புத்தாக்க சிந்தனை கொண்ட வணிக மூலோபாய நிபுணராக எச்.எம்.எம்.றியாழை அக்கம்பனி இனங்கண்டு இப்பதவியுயர்வினை வழங்கியுள்ளது. இந்த பதவியுயர்வானது எமது கல்குடா பிரதேசத்திற்கு கிடைத்துள்ள மிக அரிதான ஒரு வாய்ப்பாகும். மீராவோடையில் பிறந்த ஒரு மகன் இன்று உலகளாவிய கம்பனி ஒன்றிற்கு இளம் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது எமக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

ஐக்கிய அரபு எமிரைட்ஸின் அல் குரைர் பூட்ஸ் (ஏ.ஜீ.எப்) மற்றும் எமிரைட்ஸ் ரேட்டிங் ஏஜென்ஸி (ஈ.டீ.ஏ) ஆகியவற்றுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட செரண்டிப் மா ஆலை புதிய தரம் கொண்ட செவன் ஸ்டார் கோதுமை மாவினை இலங்கையில் வெற்றிகரமாக விற்பனை செய்துவருகின்றது.

புத்தாக்க தலைவரான எச்.எம்.எம்.றியாழ், ஐக்கிய அரபு எமிரைட்ஸ், சவூதி அரேபியா, ஆபிரிக்கா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் பல்வேறு வர்த்தக பிரிவுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தல் ஓடி, வோல்ஸ்வேகன் ஆகிய வர்த்தக நாமங்களை இரண்டு வருடங்களுக்குள் சந்தைப் பங்கை விஞ்சி சாதனை படைக்க வைத்தமை இவரது அடைவுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும்.

அல் குரைர்  பூட்ஸ் கம்பனியில் திட்டமிடல் மற்றும் பஜ்ஜெட் முகாமையாளராக அவர் பணியாற்றிவந்தார். குழு அறிக்கையை தயாரிப்பதிலும், வணிகப் பகுப்பாய்வு மற்றும் பல்வேறு வணிக பிரிவுகளை உருவாக்குவதற்கான திட்டங்களை வழங்கின்ற மகத்தான பணியை செய்தார். 2010ம் ஆண்டில் செரண்டிப் கோதுமை மா ஆலையின் தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தராக பதவி வகிக்க இலங்கை வந்தடைந்தார். முதலீட்டாளர்களின் இலாபகரமான இலக்குகளை அடைவதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார்.

இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்தவராகவும் சான்றழிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்கியல் நிறுவனத்தின் அங்கத்தவராகவும் இவர் அங்கம்வகிக்கின்றார். வணிக மூலோபாயத்தில் தனது முதுநிலை வணிக நிருவாக கற்கையை இங்கிலாந்தின் ரொபி பல்கலைக்கழகத்தில் பெற்றார். தனது ஆரம்பக் கல்வியை மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பயின்று புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று கொழும்பு ரோயல் கல்லூரிக்கு தெரிவானார். அங்கு தனது உயர்கல்வியையும்  பூர்த்தி செய்தார்.

எமது பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்த இளம் நிறைவேற்றுப் பணிப்பாரான வணிக நிபுணர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களை எமது இளம் தலைமுறையினர் சிறந்த முன்னுதாரணமாக கொண்டு கல்விபயில வேண்டும். அவரது வாழ்வில் பல உயர்வுகளை அடைய நாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.

இவ்வண்ணம்
கல்குடா வாழ் புலமையாளர் சமூகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here