தேசியப்பட்டியல் கதை

0
428

ஒரு தற்காலிகம், இரண்டரை வருடங்களுக்குப் பிறகு நிறைவுக்கு வந்திருக்கின்றது!
அதாவது, ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார். இவர் தனது இராஜினமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் அரசியல் அரங்கில் மட்டுமன்றி தேசிய அரசியல் பெருவெளியிலும் கடந்த இரு வருடங்களாக பெரும் பேசுபொருளாகவும் விமர்சனத்திற்குரிய விடயமாகவும் இருந்துவந்த இந்த தேசியப்பட்டியல் எம்.பி. விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது சிறந்ததே. அதற்காக மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமை பாராட்டவும் வேண்டும். ஆனால், சல்மான் இராஜினமாச் செய்திருக்கின்றார் என்ற செய்தி, அப்பதவி அடுத்ததாக யாருக்கு வழங்கப்படப் போகின்றது? என்ற கேள்வியோடுதான் வந்திருக்கின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை தேசியப்பட்டியல் வழங்கப்படக் கூடும் என்று பேசப்பட்டு வந்த மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரி.ஹசன்அலி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் போன்ற ஓரிருவர் நீங்கலாக, மீதமுள்ள யாரோ ஒருவருக்கு இப்பதவி வழங்கப்படலாம் என்ற அனுமானங்களும் எதிர்பார்ப்புக்களும் இப்போது மேலெழுந்திருக்கின்றன.

மூன்று வியூகங்கள்

இப்போது வெற்றிடமாகியிருக்கின்ற தேசியப்பட்டியல் பதவியை யாருக்கு கொடுப்பது என்று மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் இறுதிமுடிவு எடுத்த பிறகே, இராஜினாமா செய்வதற்கான உத்தரவை பிறப்பித்திருப்பார். அதன்படி அநேகமாக, அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படும் சாத்தியமிருக்கின்றது. ஏனெனில் மு.கா.வினால் நீண்டகாலமாக தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக இது இருப்பதுடன், அப்பதவி வழங்கப்படாமையால் மக்கள் கடுமையாக மனவெறுப்பும் அடைந்திருக்கின்றனர்.

இப்போது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மயில் சின்னத்தில் முஸ்லிம் கூட்டமைப்பும் அதேபோன்று தேசிய காங்கிரஸ் கட்சியும் அட்டாளைச்சேனையிலும் அதனையண்டிய பிரதேசங்களிலும் போட்டியிடுகின்ற ஒரு சூழலில் அங்கிருக்கின்ற மேலும் அதிகமான வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்கு மு.கா. தலைவரிடம் இருக்கின்ற மந்திரக் கோலாக இத் தேசியப்பட்டியலை குறிப்பிட முடியும். எனவே அதனை அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது. அதுதான் நியாயமானதும் கூட.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட்டுக்கு இப்பதவி சென்று சேர்வதற்கு ஏதுவான காரணிகளும் இருப்பதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தலைவருடன் அண்மைக்காலத்தில் சற்று ஊடல் கொண்டிருந்தாலும் இருவருக்கும் இடையில் வேறுபல விடயங்களில் இருக்கின்ற தொடர்பு இறுக்கமானது என்று கூறப்படுவதுண்டு.
அதுமட்டுமன்றி, நான் விரைவில் எம்.பி.யாகவும் அமைச்சராகவும் வருவேன் என்று நஸீர் அகமட் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கின்றார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசீர்வாதத்துடன் இப்பதவியை பெற்றுக் கொள்ள அவர் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன. இந்த அடிப்படையில் நோக்கினால் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை நஸீர் அகமட்டுக்கு வழங்கி விட்டு, அட்டாளைச்சேனைக்கு ஆறுதல் பரிசேனும் வழங்கப்படலாம் என்று கருதுவோரும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இன்னுமொரு அனுமானமும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, இப்போதைக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை வெற்றிடமாக்கி வைத்து, அதை பல தனிநபர்களுக்கும் சில ஊர்களுக்கும் தருவதாக மீண்டும் வாக்குறுதியளித்து வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கடைசி துருப்புச் சீட்டாக இதை மு.கா. தலைவர் பயன்படுத்தக்கூடும் என்று சிலர் அபிப்பிராயம் கொள்கின்றனர். உண்மையில் தேர்தல் முடியும் வரை அதை ஒரு பராக்குக் காட்டும் பொருள் போல பயன்படுத்த வாய்ப்புக்கள் இல்லாமலும் இல்லை.

ஆனால், முன்னர் கையாண்ட உத்தியையும் அதன் வழிவந்த சிக்கல்களையும் மறந்து மீண்டும் அதே சாணக்கியத்தை மு.கா. தலைவர் கையாள மாட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், கடந்த தேர்தலில் பல ஊர்களுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக சொல்லி, பின்னர் அதை நிறைவேற்ற முடியாமல் போனதால் ஏற்பட்ட பாதிப்புக்களை வைத்துப் பார்க்கின்ற போது, இம்முறை யாருக்காவது பொருத்தமானவருக்கு வழங்குவதற்கான சாத்தியங்களே அதிகமாக தென்படுகின்றன. ஆனால் எப்போது வழங்குவார் என்பதே தெரியாதுள்ளது.

மாற்றங்களை ஏற்படுத்திய பதவி

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி மு.கா.வுக்கு கொடுத்த தேசியப்பட்டியல் எம்.பி.கள், லேசுபட்டவை அல்ல. மாறாக, பல மாற்றங்களுக்கு வினையூக்கியாக இருந்திருக்கின்றன. இலங்கை முஸ்லிம்களின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இன்னுமொரு பிளவும், மாற்று அரசியல் சக்தியொன்றின் உருவாக்கமும் ஏற்பட அடிப்படைக் காரணிகளுள் ஒன்றாக இருந்தது. அல்லது, அவ்வாறான ஒரு கருவியாக மு.கா. தலைவரால் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறலாம்.
தேசியப்பட்டியல் கதை எங்கே தொடங்கி, எங்கே திருப்பத்திற்குள்ளாகி எங்கு வந்து நிற்கின்றது என்பதை யாவரும் நன்றாக அறிவார்கள். கடந்த 2015ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் அதற்கு முந்தைய ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்கு கைமாறாக இரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகள் மு.கா.வுக்கு வழங்கப்பட்டன.

அவற்றை ஹசன்அலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோருக்கு அல்லது அவர்களில் ஒருவருக்கும் அட்டாளைச்சேனைக்கும் வழங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப் பதவியை எனக்குத் தாருங்கள் என்று பலரும் தலைவருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். உண்மையிலேயே எவ்வளவு சாணக்கியமான ஒருவராக இருந்தாலும் அந்த நிலைமையில் ஹக்கீம் மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளானார் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியில் ஒரு முடிவை எடுத்தார்.
தனது சகோதரர் ஏ.ஆர்.ஏ.ஹபிஸிற்கும் நெருங்கிய சகா எம்.எச்.எம்.சல்மானுக்கும் அந்த தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகளை வழங்கினார். தற்காலிகமாக, சில வாரங்களுக்கே இதை வழங்குவதாக குறிப்பிட்ட தலைவர், தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் இருவரையும் இதற்காக தெரிவு செய்ததாக சொன்னார். அப்படியாயின், கட்சிக்காக பாடுபட்ட மூத்த செயற்பாட்டாளர்கள் யாரும் அந்த நம்பிக்கையை பெறவில்லை என்ற மறைமுக செய்தி ஒன்று அதில் இருந்ததை பலரும் கவனித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே அதிகாரக் குறைப்பு செய்யப்பட்டிருந்த செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி. கிடைக்காது என்ற நிலை உருவானது. தவிசாளர் பசீரும் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எனவே அட்டாளைச்சேனைக்கு இதோ எம்பி. கொடுபடப் போகின்றது… நாளை கொடுபடும் என்று ஏகப்பட்ட கதைகள் உலாவந்து கொண்டிருந்தன. இந்நிலையில், எம்.பி. பதவி வழங்கப்பட்ட சுமார் 5 மாதங்களின் பின்னர் ஏ.ஆர்.ஏ.ஹபிஸ் ராஜினாமாச் செய்ததும் அவ்விடத்திற்கு திருமலை எம்.எஸ்.தௌபீக் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், சல்மான் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அந்தப் பதவியில் நீடித்திருந்துää அதை சுகித்திருக்கின்றார்.

இலவுகாத்த கிளிகள்

இதற்கிடையில் தலைவருக்கும் ஹசனலி – பசீர் அணியினருக்கும் இடையில் முரண்பாடு வலுத்த போது, எம்.பி.பதவியை ஹசனலிக்கு கொடுத்து தம்வசப்படுத்துவதற்கு ஹக்கீம் ஒரு முயற்சியை மேற்கொண்டார். எம்.எச்.எம்.சல்மான் எம்.பி. ஒப்பமிட்ட, 16.12.2016 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை தலைவர் தனக்கு வழங்கியதாகவும் தொழுதுவிட்டு தனக்கு வாக்குறுதி அளித்ததாகவும் ஹசனலி பகிரங்கமாக கூறினார். ஆனால், அவருக்கு எம்.பி. கிடைக்கவில்லை. ‘ஹசனலி கேட்பதாலேயே உங்களுக்கு தரமுடியாதிருக்கின்றது’ என்று கூறப்பட்ட ஊர்கள், நபர்களுக்கும் அப்பதவி இதுவரையும் வழங்கப்படவில்லை. இது முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டதுடன், தலைவர் ஹக்கீம் மீதான விமர்சனங்களின் முக்கிய கூறாகவும் தேசியப்பட்டியல் விவகாரம் இருந்ததை மறுக்க முடியாது.

இதனால் சில ஊர்கள் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டன. வேறு சில தனிநபர்கள் அதைக் கேட்டால் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேற வேண்டியேற்படலாம் என்று எண்ணி வாழாவிருந்தனர். ஊடகவியலாளர்கள் இது பற்றி எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், வெளியில் தலைவர் றவ10ப் ஹக்கீமின் விசுவாசியாக, அமைதியான சுபாவத்தை வெளிப்படுத்தினர்.

மறுபுறத்தில், எம்.ரி.ஹசனலி, பசீர் சேகுதாவ10த் அணியினர் தொட்டு, கொஞ்சமாவது தேசியப்பட்டியல் உள்ளிட்ட விடயங்களை கட்சிக்குள் பேசிவந்த சிலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். எனவே, அப்பதவியை உடனடியாக மீளப் பெற்று வேறு யாருக்காவது வழங்க வேண்டிய தேவையோ நிர்ப்பந்தமோ மு.கா. தலைவருக்கு கடந்த ஒருவருடமாக இருக்கவில்லை. தேசியப்பட்டியல் தலையிடியில் இருந்து அவருக்கு ஒரு தற்காலிக விடுதலை கிடைத்திருந்தது என்றும் கூறலாம்.

களநிலை நிர்ப்பந்தம்

ஆனால். இப்போது களநிலையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் அவ்வாறான நிர்ப்பந்தமொன்றை மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் மீது ஏற்படுத்தியிருக்கின்றன என்பது கண்கூடு. முன்பிருந்தது போல நிலைமைகள் இப்போது இல்லை என்பதை கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களே ஓரளவுக்கு எடுத்துக்காட்டியிருந்தன.

மு.கா.வில் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்ற றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் எற்கனவே மு.கா.வை எதிர்த்து களமாடிக் கொண்டிருக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து ஹசனலி – பசீர் அணியினர் புதிய முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர். இந்த கூட்டமைப்பு எல்லா வாக்குகளையும் தம்பக்கம் கவர்ந்திழுத்துவிட்டது என்றோ, அதன் வேட்பாளர்கள் எல்லோரும் வெற்றி பெறுவார்கள் என்றோ கருத முடியாது. என்றாலும், மு.கா.வுக்கு இருந்த களச் சவால்கள் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளதை அடிமட்ட வாக்காளனும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களின் தாய்க் கட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அப்படியென்றால், முஸ்லிம் அரசியலின் பின்னடைவுகளுக்கும் இத்தனை புதிய கட்சிகள் தோற்றம் பெறுவதற்கும் இடம்விட்டுக் கொடுத்த தார்மீகப் பொறுப்பும் மு.கா.வையே சாரும். சுருங்கக் கூறின் அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு மு.கா. மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்பதுடன், அதன் அரசியல்வாதிகள் தமது போக்குகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியதாகவும் குறிப்பிட முடியாது.

இந்தக் கட்டத்திலேயே இம்முறை உள்ளுராட்சி சபை தேர்தலை மு.கா. எதிர்கொள்கின்றது. களநிலைகளும் முன்புபோல் இல்லை. எனவே, தம்மிடம் இருக்கின்ற கனதியான ஒரு துருப்புச்சீட்டாக தலைவர் ஹக்கீம் தேசியப்பட்டியல் எம்.பி.பதவியை கையாளலாம் என்ற ஊகங்கள் முன்னமே வெளியாகி இருந்தன.
அந்த அடிப்படையிலேயே இப்போது, சல்மான் தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார் எனலாம். இந்த இரண்டு வருடங்களும் மேற்படி எம்.பி. பதவியை குறைந்தது இரண்டு பேருக்கு அல்லது இரு ஊர்களுக்கு கொடுத்திருந்தால் இந்நேரம் இரண்டு தரப்பின் பிரச்சினை முடிவடைந்திருக்கும். தலைவர் ஹக்கீம் மீதான தேவையற்ற விமர்சனங்களையும் தவிர்த்திருக்கலாம். இப்போது எம்.பி.பதவியுடான சகல வரப்பிரசாதங்களையும் எடுத்துக் கொண்ட பின்னரே அதாவது சாறுபிழியப்பட்ட பின்னரே இப்பதவி இன்று காலியாக்கப்பட்டுள்ளது என்ற அங்கலாய்ப்புக்களும் உள்ளன.

பழைய உத்தியா?

எது எப்படியிருந்தாலும், தேர்தல் வியூகமாகவோ அல்லது துரும்புச் சீட்டோ என்ன அடிப்படையிலேனும் இப்பதவி இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இப்பதவியை கோரி ஹாபிஸ் நஸீர் அகமட் உள்ளடங்கலாக பலர் இப்போது தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டாலும் இவர்களுள் மிகவும் அருகதையுடைய பிரதேசமாக அட்டாளைச்சேனையையே கருத முடியும். அந்த ஊரிலும் மூன்று நான்கு பேரிடையே இப்பதவியை பெறுவதற்கான பனிப்போர் நிலவுகின்றது. அதையெல்லாம் தாண்டி கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்கே கொடுக்கப்படலாம் என்ற நம்பகமான தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

இதேவேளை, நாம் மேலே குறிப்பிட்து போன்று தேர்தல் முடியும் வரை இப்பதவியை காலியாக்கி வைத்திருந்து, அதை வேண்டிநிற்கும் எல்லாத் தரப்பினருக்கும் அதன்பால் ஆசைகாட்டி வாக்குகளை பெறுவதற்கு தலைவர் முயற்சிக்கலாம் என்ற அபிப்பிராயங்கள் கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கின்றன. இதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

தேசியப்பட்டியல் எம்.பி.பதவிகளை தற்காலிகம் என்ற பெயரில் இருவருக்கு கொடுத்ததும், பல தரப்பினருக்கு அதை தருவதாக வாக்குறுதி அளித்ததும் தவறுகள் நிறைந்த அரசியலாகும். இந்நிலையில் இப்போது சல்மானை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்திற்கு யாரையும் நியமிக்காமல் வைத்திருக்கும் பழைய உத்தியை மேற்கொள்வது இன்னும் மோசமான அரசியலாக அமையும் என்பதுடன் மீண்டும் ஒருமுறை பல தரப்பினர் நம்பி ஏமாறவும் வாய்ப்பிருக்கின்றது.

எனவே அட்டாளைச்சேனைக்கு அல்லது வேறு யாருக்கோ பொருத்தமானவருக்கு தேர்தல் நெருங்குவதற்கு முன்னதாகவே அப்பதவியை வழங்க மு.கா.வின் சாணக்கிய தலைவர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இது மிகவும் முக்கியமான பிராயச்சித்தம் என்பதுடன், நடைபெறவுள்ள தேர்தலில் சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும். ஆனால் தேர்தல் காலத்தில் அப்பதவியை வழங்குவதை தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு நோக்கும் என்பதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரித்தான இந்த தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை நீண்டகாலம் நிரப்பாமல் வைத்திருக்க அந்தக் கட்சி இடம்கொடுக்குமா என்ற முரண்பாட்டுக் கேள்விகளும் இருக்கின்றன.
எது எவ்வாறிருந்தாலும். பெரும் பிரளயங்களெல்லாம் ஏற்பட ஒருவகையில் காரணமாக இருந்த இந்த தேசியப்பட்டியல் எம்.பி.பதவி உடனடியாக பொருத்தமானவரை சென்றடைய வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. அவ்வாறில்லாமல், பழைய வியூகத்தை கையாண்டு, தேர்தல் முடியும் வரை இதை வைத்திருந்து, வாக்குகளை பெறுவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுமாக இருந்தால்…. அது கட்சியின் ஆதரவுத் தளமும் நம்பிக்கையும் கீழ்நோக்கி சரிவதற்கே இட்டுச் செல்லும் என்ற யதார்த்தத்தை விளங்காதவராக மு.கா. தலைவர் இருக்க மாட்டார்.

தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை, அழுகின்ற பிள்ளைக்கு பராக்கு காட்டும் விளையாட்டுப் பொருளாக இனியும் இருக்க முடியாது

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 21.01.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here