(ஷபீக் ரஜாப்தீனின் கருத்து) கிழக்கின், முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடக்கம் இரா. சம்பந்தன் வரை எல்லோரும் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளனா்

0
296

(ஊடகவியலாளா் ஏ.எல்.நிப்றாஸ்)

நாம் பதில் எழுதுமளவுக்கு ஷபீக் ரஜாப்தீன் பெரிய ஆள் கிடையாது என்று நினைத்தேன்.

ஆனாலும், இது ஒட்டுமொத்த கிழக்கு மக்களினதும் தன்மானப் பிரச்சினை.
எனவே சபீக் ரஜாப்தீனைப் போன்ற மனநிலையோடு மு.கா.வுக்குள்ளும் தேசிய கட்சிகளுக்குள்ளும் இருக்கின்ற பல முஸ்லிம் மேட்டுக்குடி அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் மனக்கணக்காகவே ஷபீக்கின் கருத்தை நோக்க வேண்டியிருக்கின்றது.

இக்கருத்து கிழக்கு மக்களின் மனதை புண்படுத்துவது மட்டுமல்ல, மு.கா. தலைவா், அந்தக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சா்கள், முன்னாள் முதலமைச்சா், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் எதிரானது என்பதுடன், கிழக்கில் இருந்து தமிழா்களை தலைமை தாங்குகின்ற சம்பந்தன் ஐயாவையும் கேலி செய்வதாக அமைந்துள்ளதாகவே கருதுகின்றேன்.
எனவே –
கிழக்கான் மடையன் என்று எண்ணிக் கொண்டிருப்பவா்களுக்கும் மட்டக்களப்பான் சோறுபோட்டா வந்து சாப்பிட்டுட்டு போறவங்க தானே என்று நக்கலாக கேட்கும் அரசியல் பேர்வழிகளுக்கும் பதிலளிப்பதற்கான சந்தர்ப்பமாக இதை கருத வேண்டியுள்ளது.

இந்த இடத்தில், வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் மக்கள் கிழக்கிலுள்ள எமது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். ஷபீக்கின் கருத்து உங்களின் ஒட்டுமொத்த கருத்தில்லை என்பதை நாமறிவோம். ஆனாலும் இதற்கு பதிலளிக்க வேண்டியிருக்கின்றது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றோம். எனவே இந்த கருத்திற்காக நாங்கள் உங்களை எவ்வாறு தவறாக நினைக்கவில்லையோ அதுபோல நீங்களும் இவ்வாறான பதில் பதிவுகளுக்காக எம்மை தவறாக நினைத்துவிடக் கூடாது. தொப்பியை – அளவானவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளட்டும்.

முகநூலில், கிழக்கு மக்கள் பற்றி இழிவாக குறிப்பிடுவதற்கு முன்னாள் மு.கா .எம்.பி.யான ஷபீக் ரஜாப்தீனுக்கு எந்த அருகதையும் இல்லை.
“கிழக்கு மக்கள் சந்தா்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்பிச்சை கேட்டு வருபவா்கள்”
”கிழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல் கதவடியில் நீங்கள் வந்து கிடப்பீர்கள்”
“உங்களுக்கு நல்ல தலைவா் இருந்தால் ஏன் எமக்குப் பின்னால் நிற்கின்றீர்கள்”
“நாம் ஆள்பவா்கள், கிழக்கானுகள் ஆளப்படுபவன்கள்”………. என்றெல்லாம் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பரம்பரை மன்னன், தனது நாட்டின் ஒரு மூலையில் பிச்சையெடுத்துக் கொண்டு வாழும் விளிம்புநிலை மக்களை, மன்னனே கெதி எனக் கிடக்கும் கொத்தடிமைகளை வர்ணிப்பது போல, இந்த சபீக் ரஜாப்தீன் கிழக்கு மக்களை வர்ணித்திருப்பது கண்டிக்கத் தக்கதும் கவலைக்குரியதும் ஆகும்.
இவ்வாறான பல ஷபீக் ரஜாப்தீன்களை நான் அறிவேன். அவர்கள் எல்லாம் சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு முஸ்லிம்கள் பிச்சை கேட்டு வரவில்லை. அவர்கள்தான் முஸ்லிம் காங்கிரஸை உதிரம் சிந்தி வளா்த்து அதன் தலைமையை கண்டியைச் சோ்ந்த ஒருவருக்கு கொடுத்திருக்கின்றார்கள். அதுதான் இன்று பலருக்கு வாழ்வளித்திருக்கின்றது. கிழக்கில் தலைமை இல்லை என்று அவர்கள் கொடுக்கவில்லை. விரும்பிக் கேட்கும் ஒருவர், மிகவும் பொருத்தமானவர் என அந்நாளில் கருதப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையிலேயே கொடுத்தார்களே தவிர அவரை விடச் சிறந்த தலைவர்கள் கிழக்கின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றார்கள்.

நீங்கள் “மட்டக்களப்பான்” என்று பார்ப்பது போல கிழக்கு முஸ்லிம்கள் கொழும்பான், கண்டியான் என்று பிரதேசவாதம் பார்த்திருந்தால் இப்போதிருக்கின்ற மு.கா. தலைவருக்கு தலைவா் என்ற மகுடத்தை சூட்டியிருக்க மாட்டார்கள். இன்று பலருக்கு இத்தனை பதவியும் வசதியும் கிடைத்திருக்கவும் மாட்டாது.

எனவே, நாம் வழங்கிய மடிப்பிச்சையின் மூலம், கிழக்கு மக்களின் வாக்குப்பலத்தைக் காட்டி மு.கா. பெற்றுக் கொண்ட பதவி பட்டங்களின் ஊடாக கிடைக்கும் தொழில்களை மக்கள் பிச்சையாக கேட்டு வரவில்லை. உரிமையோடுதான் கேட்டு வருகின்றார்கள். கொடுக்க வேண்டியது உங்களது கடப்பாடு. கிழக்கு மக்களின் வாக்குகளை பிச்சையாக பெற்று – நல்லவிலைக்கு விற்றவா்கள் யார் என்பதை தனியாக குறிப்பிட வேண்டியதில்லை.

இந்தக் கதையில் “நீங்கள்” ஆள்பவா்களாக இருக்கலாம். ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் ஆளப்படுவா்கள் அல்ல. உங்களுக்கும் உங்களைப் போன்றவா்களுக்கும் ஆமா சாமி போடும் கிழக்குஅரசியல்வாதிகள் சிலரைப் பார்த்து நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் வேண்டுமென்றால் உங்கள் காலடியில் கிடப்பவர்களாகவும் உங்களால் ஆளப்படுபவா்களாகவும் இருக்கலாம். ஆனால், கிழக்கு முஸ்லிம்களோ, தமிழர்களோ ஆளப்படுபவர்கள் அல்ல – ஆட்டுவிப்பவர்கள்.
இந்தக் கருத்து, புத்திகெட்ட தனம் என்பது மட்டுமல்ல நன்றிகெட்ட தனமும் கூட. இந்த 17 வருடங்களாக தலைமைப்பதவி எனும் கிரீடத்தையும் அதன் வழிவந்த தேசியப்பட்டியல் எம்.பி.உள்ளடங்கலாக பல வரப்பிரசாதங்களையும் விட்டுத் தந்த கிழக்கு மக்களை இவர் போன்றவா்கள் எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கிழக்கு மக்களும் தீவிர ஆதரவாளா்களும் விளங்கிக் கொள்ள இது வழிவகுத்திருக்கின்றது.

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப்பலத்தால் வளா்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கனிகளை ஓசியில் சுவைத்துக் கொண்டிருக்கும் இவர் போன்றவா்கள் தெரிவிக்கின்ற கருத்து, கிழக்கு மக்களை முற்றாக மடையர்களாகவும் அடிமாடுகளாகவும் கருதுவதற்கு சமமானது.

கிழக்கில் இருந்து நல்ல தலைவர்கள் வரவில்லை என்றும் கிழக்கான் ஆளப்படுவதற்கு பிறந்தவனே என்றும் அவர் சொல்லியுள்ளார்.
அவா் இதில் முஸ்லிம் என்று தனியாக குறிப்பிடவில்லை. எனவே, கிழக்கில் திருமலையில் பிறந்து இன்று ஒட்டுமொத்த தமிழா்களையும் ஆளுகின்ற தலைவரான சம்பந்தன் ஐயாவையும் இந்தக் கருத்து நையாண்டி செய்துள்ளது.
இது தவிர கிழக்கில் இருந்து கொண்டு கொழும்பையும் அதற்கப்பாலும் ஆட்டிவைத்த மர்ஹூம் அஷ்ரஃபை மற்றும், ஏ.ஆர்.மன்சூரை, மசூர்மௌலானாவை, சேகு இஸ்ஸதீனை, அதாவுல்லாவை, ஹசனலியை, பசீரை, ஹிஸ்புல்லாவை, அன்வர் இஸ்மாயிலை, மு.கா.வுடன் இன்னுமிருக்கின்ற முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட்டை, பிரதியமைச்சா்கள் ஹரீஸ் மற்றும் பைசலை, அலிசாஹிர் உள்ளிட்ட கிழக்கின் எம்.பி.க்களை, மாகாண சபை உறுப்பினர்களை எல்லோரையும்தான் இந்தக் கருத்து மட்டம் தட்டியிருக்கின்றது.

அதாவது, கிழக்கு மு.கா. அணியினர் உட்பட மேற்குறிப்பிட்ட எந்த தரப்பினரும் தலைமைத்துவத்திற்கு லாயக்கற்றவர்கள் என்ற, ஒரு சிலரின் நிலைப்பாட்டை மு.கா. தலைவரின் சகாவான சபீக் ரஜாப்தீன் ஒப்புவித்திருக்கின்றார்.
மிக, முக்கியமாக கிழக்கிற்கு தலைமை வேண்டும் என்ற கோஷங்கள் மேலெழுந்துள்ள நிலையில், அங்கு நல்ல தலைவர் இல்லை என்று சொல்வது, கிழக்கு மக்களை பிரதேசவாதமாக சிந்திக்க தூண்டிவிட்டு அதன்மூலம் மு.கா.தலைவரின் தலைமைப்பதவிக்கு ஆப்படிக்கும் வேலையாகக் கூட இருக்க நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

இவரது கருத்து தென்பகுதியில் வாழும் மக்களின் கருத்தாக அமையாது என்றாலும், மு.கா.வுக்குள் இருந்துகொண்டு, மு.கா.வின் தாய்வீட்டை கிண்டலடிப்பதற்கு எதிராக மு.கா. தலைவரும் அக்கட்சியில் உள்ள கிழக்கு மாகாண உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கிழக்கில் உள்ள முஸ்லிம் – தமிழ் – சிங்கள மக்களிடத்தே மன்னிப்புக் கேட்டு, இக்கருத்தை வாபஸ் பெறச் செய்யப்பட வேண்டும்.
அடிமையாக இருக்க விரும்புவோர், அமைதியாக இருக்கலாம்.

(பிற்குறிப்பு – ஆனால், இவரோடு முகநூலில் வாதிட்ட நிப்றாஸ் நான் அல்ல)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here