போதை பொருள் வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியை கொலை செய்தேன்- 21 வயது இளைஞன் வாக்குமூலம்

0
224

(பாறுக் ஷிஹான்)

போதைப் பொருள் வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்று அவரை அடித்துக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையிட்டேன்.
இவ்வாறு ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்ற ஜெகநாதன் சத்தியபாமா என்ற 72 வயது பெண் படுகொலை தொடர்பில் கைதான 21 வயது இளைஞன் பொலிஸாருக்கு அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கொலைச் சந்தேக நபரான இளைஞன், மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவராவார்.
அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ள விபரங்கள் வருமாறு,

நான் போதைப் பொருளுக்கு அடிமையானவன். யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் போதை மாத்திரை வாங்கி அதனை அடிக்கடி பயன்படுத்துவேன்.
சம்பவ தினம் நான் போதையில் இருந்தேன். எனினும் எனக்கு மேலும் போதைப்பொருள் தேவைப்பட்டது. அதை வாங்க பணம் இல்லை.
கொலை செய்த மூதாட்டியின் வீட்டுக்கு அருகிலேயே எங்கள் வீடு உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் மூதாட்டி தனியாக வசித்த வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் அறைக்குள் ரி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரது அருகில் இருந்த ஸ்டூலை எடுத்து அவரை அடித்துக் கொன்றேன். அதன்பின் அவர் அணிந்திருந்த 2 மோதிரங்கள், காப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். நகைகளை எடுத்துகொண்டு சண்டிலிப்பாய் – கோணாவளை பகுதியில் உள்ள நண்பன் வீட்டுக்குச் சென்றேன்.

கொள்ளையிட்ட நகைகளை அவரிடம் கொடுத்து 15 ஆயிரம் ரூபா தருமாறு கேட்டேன். ஆனால் தன்னிடம் 5ஆயிரம் ரூபா உள்ளதாக கூறி தந்தார். மீதி பணத்தை மறுநாள் தருவதாக கூறினார் எனவும் கொலையாளி வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூமற்றொரு_கொள்ளையுடன்_தொடர்பு
இதேவேளை, கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் – செப்பல் வீதியில் தனிமையில் இருந்த வயோதிபர்கள் இருவரை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 2 சோடி காப்பு, பவுண் மோதிரம் ஆகியவற்றையும் தானே கொள்ளையிட்டதாகவும் கொலையாளி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த நகைகளை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் விற்று அந்தப் பணத்துக்கு போதைப்பொருள் வாங்கியதாக தனது வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கொலைச் சந்தேக நபர், குறிப்பிட்ட நகைக் கடையின் உரிமையாளர் ஆகியோரை நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கொலை 4.15 மணிக்கு இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றபோதும் இரவு 7 மணிக்கே தமக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாகவே நாங்கள் விசாரணையில் இறங்கினோம். கொலை இடம்பெற்ற பகுதியில் வீடொன்றில் இருந்த இரகசிய கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டோம். இதன்போது சந்தேக நபரான 21 வயதான இளைஞனை அடையாளம் கண்டோம். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாளவர் என தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரைக் கண்காணித்தோம். பொம்மைவெளிப் பகுதியில் உள்ள போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு அருகில் வைத்து 24 ஆம் திகதி புதன்கிழமை அவரை மடக்கிப் பிடித்தோம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிர விசாரணையின் பின்னர் கொலைச் சந்தேக நபர் தனது குற்றத்தினை ஏற்றுக்கொண்டார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றப் புலனய்வு பிரிவு பொறுப்பதிகாரி முதித்த றுவாண் பண்டார தலைமையில் 5 போ் கொண்ட பொலிஸ் குழுவினர் துரிதமாகச் செயற்பட்டு இக்கொலை தொடர்பான முடிச்சுக்களை அவிழ்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here