அரசியல் தந்திரம்?

0
445

(எம்.எம்.ஏ.ஸமட்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மக்களிடையே செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்கும், வாக்குகளைப் பெறுவதற்குமான சகல அரசியல் தந்திரங்களையும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். தென்னிலங்கை அரசியல் களம் எவ்வாறு சூடுபிடித்திருக்கிறதோ அவ்வாறே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களிலும் இத்தேர்தல் களம் சூடேறியிருக்கிறது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை கட்சிகளான ஸ்ரீலங்காக சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கருத்துச்சமரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசியல் சூழலில், நல்லாட்சி நீடிக்குமா இல்லை என்ற கேள்விகளும். அரசியல் தந்திரங்கள் மூலம் வாக்குகளைப் பெறுவதற்கு இவ்விரு பிரதான கட்சிகளும் முனைகிறதா என்ற சந்தேகமும் தென்னிலைங்கையில் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறன அரசியல் கள நிலவரங்களுக்க மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் முஸ்லிம் சமூகம்சார் கட்சிகள்; தத்தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவதற்கான பிராயச்சித்தங்களை முன்னெடுத்து வருவதுடன், உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான தந்திரங்களையும் மேற்கொண்டுள்ளன. இருந்தபோதிலும்; கடந்த கால தேர்தல்களில் கிழக்கு முஸ்லிம்களின் அதிகப்படியான ஆதரப் பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தல் களத்தில் அரசியல் நெருக்கடிகளை அதிகளில் எதிர்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள், காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அவற்றோடு சுயேட்சைக்குழுக்களினதும் தேர்தல் பிரச்சாரங்களுக்கும், வாக்குகளை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளுக்கும் ஈகொடுத்து கிழக்கின்; இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு தாய்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ்; அனைத்துச் சாணக்கியங்களையும் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ{க்கான ஆதரவு அதிகம் கொண்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும், யானைச் சின்னத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களில் யானை, மரம் மற்றும் தராசு சின்னங்களிலும், திருகோணமலை மாவட்டத்தில் மரச்சின்னத்திலும் போட்டிகிறது. கிழக்கில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இவ்வாறு பல கட்சிகளில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெறுவதன் ஊடாக கிழக்கு முஸ்லிம்களின் செல்வாக்கைப்; பெற்ற கட்சி என்பதை மீணடும் ஒருமுறை தேசிய அரசியலிலும், முஸ்லிம் தேசியத்திலும்; புடம்போட வேண்டிய தேவையும் முஸ்லிம் காங்கிரஷுக்கு உள்ளது மறுக்க முடியாது.

இவ்வாறான களநிலையில், இக்கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்டீன் கடந்த திங்கள் கிழமை அவரது முகநூலில் கிழக்குப் பிராந்திய நபர் ஒருவரின் கேள்விகளுக்கு பதிலயளித்த விதம் கிழக்கின் உணர்வுகளில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

உணர்வுகளின் அதிர்வு

கிழக்கு மக்கள் குறித்து தாழ்வான, பிராந்தியவாதக் கருத்துக்களை பதிவிட்ட அவருக்கு எதிராக பல தரப்புக்களிலுமிருந்து கண்டனங்கள்; பல்வேறு முனைகளில் எதிரொலித்தன. அவரது கருத்து கிழக்கு மக்களின் உணர்வுகளை அதிரச் செய்தது. இதனால் முழுக் கிழக்கும் அதிர்ந்தது. மாற்றுக்கட்சிகளின் எதிர்; பிரச்சாரங்களுக்கும் இம்முகநூல் இப்பதிவானது துணைபோனது. இந்நாள் வரையிலும் இப்பதிவும் அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளும் பேசு பொருள்களாக தேர்தல் பிரச்சார மேடைகளில் கனதியாக ஒலித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்ற விதியை அறியாதவராக வெளிப்படுத்திய பதிவுகள் கட்சிப் பொறுப்பு குறித்து அவரிடம் போதிய தெளிவிருக்கவில்லை எனப் பேசப்படுகிறது.
கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டிருக்கும் இத்தருணத்;தில் சும்மாவிருந்த சங்கை ஊதிக்ககெடுத்த நிலைக்கு தள்ளிய ராஜப்டீனின் கருத்துப் பதிவேற்றமும் ஓர் அரசியல் தந்திரமா என்ற சந்தேகத்தையும் மாற்றுக் கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
கிழக்கில் வாக்குகளைப் பெறுவதற்கு தான்சார்ந்த கட்சி மரணப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இவ்வேளையில், ஒரு சாதாரண கட்சி தொண்டனும் வெளிப்படுத்த தயங்கும் இக்கருத்துக்களை கட்சியின் முக்கிய பதவியிலிருந்து கொண்டு அவர் பதிவிட்டமை விளைவுகளை அறியாமலா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அத்தோடு, இக்கட்சியை வளர்த்ததெடுப்பதில் மறைந்த தலைவர் அஷ்ரப் புரிந்த அர்ப்பணிப்புக்களும், இக்கட்சியை வளர்ப்பதற்காக கிழக்கு மக்கள் செய்த தியாகங்களையும் புரிந்துகொள்ளாத நபரிடம்; முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமை உயர் பதவியையும், வரப்பிரசாதங்களையும் வழங்கி அழகுபார்த்ததன் விளைவா என்ற வினாவையும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடத்திலும்; ஏற்படுத்தியது.

“கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், அரசியல் செல்வாக்குடன்; தொழில்களை பிச்சையாக் கேட்டு அலைபவர்கள், கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல் படிக்கட்டில் கிழக்கு மாகாணத்தவர்கள் வந்து கிடப்பீர்” போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் முகநூலில் பதிவிட்டவதன் மூலம் அவரது ஆழ் மனத்தில் ஊரியப்போயிருந்த கிழக்கு மக்கள் குறித்தான சிந்தனையை புரிந்துகொள்ள முடிந்துள்ளது எனக் கிழக்கு மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், ஒரு நபரின் சிந்தனையின் வெளிப்பாடுதான் அவரது பேச்சும், நடத்தையுமென உளவியல் தத்துவம் சொல்கிறது. அந்தவகையில் நோக்குகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரின் பதிவானது கிழக்கு மக்கள் தொடர்பில் அவர் நீண்ட காலமாகக் கொண்டிருந்த சிந்தனையின் வெளிப்பாடுதான். இந்நிலையில், அவரது ஆழ் மனதிலிருந்து வெளிப்பட்ட இக்கருத்துப் பதிவுக்கெதிரான அதிர்வுகள் கிழக்கில் மாத்திரமின்றி, கிழக்கிற்கு வெயிலலும் ஏற்படடன.
சபீக் ராஜப்டீனின் சுயசிந்தனையற்ற பதிவுக்கு எதிராக கிழக்கைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்களினால் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட பதிவுகள் எரிமலை குழம்பை வெளியில் கக்கியது போன்று இருந்ததை அவதானிக்க முடிந்தது. “கிழக்கான் வேறுபாடு பார்ப்பவன் அல்ல. வந்தாரை வாழ வைப்பவன், கிழக்கின் மத்தியில் முளைத்த மரத்திற்கு கிழக்கிற்கு வெளியே காவற்காரன் இருப்பதே அதற்கு உதாரணம் ‘கிழக்கான் ஆளத்தகுதியில்லாதவன். ஆளப்பட வேண்டியவன், என்கிறீர்கள் அப்படியென்றால் அஷ்ரப் என்ன மலைநாட்டின் மலை உச்சியில் பிறந்தவனா”

“அரசியல் விழிப்புணர்வுமிக்க ஒரு சமூகம் இருக்குமானால் அது கிழக்கு மாகாண முஸ்லிம்கள்தான். சாதாரண தரம் வரை படித்த ஒருவரும் கட்சியொன்றப் பதிவு செய்து ஆரம்பிக்கும் அளவிற்கு அரசியல் அறிவு பெற்றவர்கள்’. இப்படியிருக்க கிழக்கு மாகாணத்தைச் சாராத ஒருவரை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவதிற்கு அமர்த்தி அழகு பார்க்கிறார்கள் என்றால் அது கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைமைத்துவம் வழங்க பொருத்தமானவர்கள் இல்லை என்று தப்பாக அபிப்பிராயம் கொள்ளக் கூடாது. மாறாக, அது அவர்களின் பெரும்தன்மை என்ற மனப்பாங்கை பறைசாட்டுகிறது” இவ்வாறு பல்வேறு கண்டணக் கருத்துக்கள கிழக்கிலிருந்தும், கிழக்கிற்கு வெயிலிருந்தும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டன. இப்பதிவுகளை ஒற்றுமொத்தமாக நோக்குகின்றபோது சும்மாக இருந்த சங்கை ஷபீர் ரஜாப்டீன் ஊதிக்கெடுத்தார் என்றே கூற கருத வேண்டியுள்ளது.

முகநூல் பதிவும் காணோலிப் பதிலும்

ஷபீக் ரஜாப்டீன் கிழக்கு மக்கள் தொடர்பாக முகநூலில் பதிவேற்றிய கருத்துக்களுக்கு கிழக்கின் எண்திசையெங்குமிருந்து கண்டனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அவரால் பதிவிட்ட கருத்துகள் தொடர்பில் கிழக்கு மக்களுக்கு காணொலி மூலம் அவர் பதிலளித்துள்ளார். இக்காணொலியில், “கிழக்கைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் விமர்சித்தபோதுதான் நான் அத்தகைய கருத்தை வெளியிட்டனே தவிர, கிழக்கு மக்கள் எல்லோரையும் நான் அவ்வாறு சொல்லவில்லை. நான் இவ்வாறு பதிவிட்ட கருத்து கிழக்கு மக்களைப் பாதித்திருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்கின்றேன். கிழக்கு மக்களுக்கு நான் பல உதவிகளைச் செய்துள்ளேன். கிழக்கு மக்களில் பலர்; என்னுடன் நெருங்கி பலகிறார்கள். நானும் அவர்களுடன் நன்றாகவே பழகுகிறேன். குறித்த நபருடன் ஏற்பட்ட கருத்துத் தர்க்கத்திலேதான் இக்கருத்தை நான் வெளியிட்டேன் இதனை சிலர் அரசியலாக்கப்பார்க்கிறார்கள் என காணொலி வாயிலா தெரிவித்திருந்தார்.

அவர் காணொலியினூடக கிழக்கு மக்களிடத்தில் பொது மன்னிப்பைக் கோரியிருந்தாலும் இப்பதிவுகள் குறித்து கட்சிக்குள்ளும் வெளியிலும் எழுந்த கண்டனங்கள்; தன் வினை தன்னைச் சுடும் என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீர் வழங்கல் வடிகாலமைப்பச் சபையின் பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் பதவி விலகச் செய்திருக்கிறது. இக்கட்சியின் வளர்ச்சியையும், கட்சியினுடனான சமூகப் பொறுப்பையும் முறையாகப் புரிந்து கொள்ளாதவர்களை தனக்கு நம்பிக்கையானவர்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காக கட்சியின் உயர் பதவிகளையும் தேசியப் பட்டியல் நியமனங்களையும் ஏனைய வரப்பிரசாதங்களையும் தற்போதைய தலைமை வழங்கி வருவதனால்தான் இக்கட்சிக்கான கிழக்கின் தியாகம் அத்தகையவர்களினால் புரியப்படுவதில்லை என்று நீண்ட காலமாக கிழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டும்..

முஸ்லிம் அரசியலும் கிழக்கும்.

இந்நாடு சுதந்திரடைந்த காலம் தொட்டு தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் இருக்க வேண்டுமென்று சிந்திக்காது பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் இந்நாட்டு முஸ்லிம்கள் தொங்கிக் கொண்டிருந்தனர். அக்கட்சிகளின் தலைவர்கள் கூறும் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக தங்களது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக்கொண்டு தங்களுக்கு முடிந்தவற்றை தாம் அங்கம் வகிக்கும் சமூகத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருந்தார்கள்.
அக்கட்சிகளினால் வழங்கப்படுகின்ற சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றிற்கு மேல்சென்று எவற்றையும் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியாதொரு நிலையில் அக்கட்சிகளில் அவர்கள் அங்கம் வகித்தனர்.

ஒரு தேசத்தின் தனித்துவ இனத்திற்கான அரசியல் உரிமைககள் எவை என்பதையும், ஜனநாயக அரசாங்மொன்றிமிருந்து அரசியல் சானத்திற்கு உட்பட்ட ரீதியில் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் மக்கள் மயப்படுத்தாமல் அவை தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ஒரு சிறைப்பட்ட அரசியல் வட்டத்திற்குள் நின்று தங்களால் முடிந்தவற்றை தாங்கள் அங்கம் வகிக்கும் பிரதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிக் கொண்டிருந்ததொரு அரசியல் சூழலில்தான் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமானதொரு அரசியல் அடையாளாம் இருக்க வேண்டுமென்று அஷ்ரப் சிந்தித்தார்.

அதற்காக பல்வேறு முயற்சிகளை தனது இளமைப் பருத்திலிருந்தே மேற்கொண்டார். உலகின் பல்வேறு சமூகங்களில் வாழ்ந்த அரசியல் தலைமைகள் தங்களுடைய சமூகங்களுக்காக பெற்றுக்கொடுத்த அரசியல் உரிமைகளைப் பற்றியும், உரிமைகளைப் பெறுவதற்காக அவர்கள் வகுத்துச் செயற்பட்ட வழிமுறைகள் பற்றியும் தேடிக் கற்றுக்கொண்ட அஷ்ரப், கற்றல் அனுபவத்தினூடாக செயற்படுவதற்கும், செயற்படுத்துவதற்கும் முனைந்தார்.
முஸ்லிம்களின் இலட்சியங்களை அடையவும், இழந்த உரிமைகளை மீட்கவும், உரித்தான உரிமைகளை நிலைநிறுத்துவதற்குமாகவே தனது வாழ்வையும், உயிரையும்; பொறுப்படுத்தாது அரசியலுக்குள் அடிவைத்த நாள்; முதல் தனது அகால மரணம் வரை தன்னை அர்ப்பணிப்புச் செய்த அன்னாரின் அர்ப்பணிப்பும், தியாகமும் கிழக்கு மக்கள் தோளோடு தோள் நின்று முஸ்லிம் காங்கிரகஷ் உழைத்தமையும் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியில் வாழ்வோரினால் உணர முடியாது என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்வதில் தவறிருக்காது.

அதுதவிர, காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஷூக்கு கிழக்கில் அளிக்கப்படும் வாக்குகளின் ஊடாக அரசியல் அதிகாரங்களையும் அதனுடன் கூடிய வரப்பிரசாதங்களையும் தென்னிலங்கையில் பெற்றுக்கொள்கின்றவர்கள்; கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை உரிய தளத்திலிருந்து மேற்கொள்வதில்லை என்ற குற்றச் சாட்டையும் பதிவிடுவது அவசியமாகும்.
அது மாத்திரமின்ற, மக்களின் வாக்குகளினால் கிடைப்பெற்ற பதவிகள் உரியவர்களுக்கு வழக்கபடாததுவும், முஸ்லிம் காங்கிரஸ் மீது கிழக்கில் சமகாலத்தில் எழுந்துள்ள அதிருப்திகளுக்குக் காரணமாகவுள்ளன. அவற்றிற்கு உதாரணமாக, கடந்த பொதுத் தேர்தலினூடாக முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்ற இரு தேசிய பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் தேர்தல் காலங்களில் வாக்களிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்படாது, விசுவாசத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்குகிற்கு வெளியே வழங்கப்பட்டதாகத் தலைமையினால் கடந்த காலங்களில் கூறப்பட்டமை கிழக்கில் தலைமைக்கு நம்பிக்கைக்குரியவர்கள் எவரும் இல்லை என்பதையே சுட்டிக்காட்டியது.

இவ்வாறு கட்சியனால் கிடைக்கப்பெறுகின்ற தேசிய பட்டடியல் பாராளுமன்றப் பதவி நியமனம் உட்பட ஏனைய வரப்பிரசாதங்கள் கிழக்கிற்கு வெளியில் கட்சியினால் வழங்கப்பட்டபோதிலும்  கிழக்கு மக்கள் வீருகொண்டு எழவில்லை. ஆனால், சபீக் ராஜப்டீனின் கருத்து கிழக்கில் பிறந்த ஒவ்வொருவரினதும் உள்ளதைப் பதம்பார்த்தது. தன்மானத்தைத் தட்டியெழுப்பியது, உணர்வுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிப்பது கிழக்கு மக்கள் என்பதை உணரதாவர்கள் தாழ்வான கருத்துக்களை வெளிப்படுத்தி விட்டு பதவி துறப்பதானல் அல்லது ஆள் மாற்றப்படுவதனால் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பயணத்திற்கு ஆரோக்கியமாக அமையாது. மாறாகத் இத்தவறுகள் மீளவும் இடம்பெறாமல் இருப்பதற்கான உறுதிமொழி தலைமையினால் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.
சர்ச்சைக்குரிய பதிவையிட்டதன் விளைவாக தலைமைக்கு ஏற்பட்ட அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக தேசிய அமைப்பாளர் பதவியையும் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவர் பதவியையும் அவர் இராஜினாமா செய்த விடயம் ஒற்றுமொத்த கிழக்கிற்கும் சென்றடைவதற்கிடையில் அண்மையில் தேசிய பட்டியல் பாரளுமன்ற நியமனத்தை இராஜினாமா செய்த எம்.எச்.எம். சல்மான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்; பிரதித் தலைவராக அவசர அவசரமாக அமைச்சர் ரவூப் ஹக்கிமினால் நியமிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

ஷபீக் ரஜாப்டீனின் சர்ச்சை குறித்த விடயத்தின் கொந்தளிப்புக்களின் அனல் அடங்குவதற்கிடையில்; இந்நியமனம் வழங்கப்பட்டமையினை இத் தேர்தல் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்  இதுவும் ஒரு சாணக்கியம் எனக் கருதப்படும் அரசியல் தந்திரமாக இருக்குமா? என சமூக வலைத்தளங்கள் ஊடாக வினவப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

“சல்மான் தேசிய பட்டியல் பாராளுமன்றப் பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் வேறு ஒரு உயர் பதவிக்கு அவரை நியமிக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற சபீக் ரஜாப்டீன் பலியாக்கப்பட்டிருக்கிறார் எனவும் கிழக்கின் அதிர்வுகளை தனிப்பதற்காகவும், அம்பாறையின் அதிருப்தி அலைகளைக் குறைப்பதற்குமாக முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் நசீர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.

இராஜினாமாவும் நியமனமும்

ஒரு தசாப்ததிற்கும் அதிகமான காலம் முதல் அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் பாராளுமன்றப் பதவி நியமனம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அதிகளவிலான வாக்குகள் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ{க்கு கிடைத்திருக்கிறது.

இப்பிரதேசங்களில் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கியைத் தக்க வைக்க முஸ்லிம் காங்கிரஸிடமிருந்த ஒரேயொரு துரும்பு இந்த தேசியப் பட்டியல்தான்;. இதனால்தான், கட்சியின் உயர் பீடத்திலுள்ள பலருக்கும் தெரியாமல் கடந்த வாரம் எம்.எச்.எம் சல்மான் பாராளுமன்றப் பதவியை காரணங்கள் எதுமின்றி இராஜினாமச் செய்திருந்தார் என விமர்சிக்கப்படுகிறது.

அஷ்ரபின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நியமனம் தொழில் அதிபர் புகார்தீன் ஹாஜியாருக்கு வழங்கப்பட்டது. கட்சியின் பக்கம் மக்கள் அலையிருந்தபோதிலும், கட்சியை தேர்தல் கலத்தில் இறக்கி வெற்றியடைச் செய்வதற்கான நிதிப்பற்றாக்குறை காணப்பட்டதனால், அதனை நிவர்த்தி செய்வற்காக மறைந்த தொழில் அதிபர் புகாரிதீனுக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படடதாகவும். அதே ஒத்த காரணத்தை மையப்படுத்தி. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் மூலம் இக்கட்சிக்குக் கிடைக்பெற்ற தேசியப்பட்டியியல் நியமனம் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த அசித்த பெரராவுக்கு மறைந்த தலைவரினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

1994 ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைபெற்ற காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் முஸ்லிம் காங்கிரஷுக்குக் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நியமனங்கள் முன்னாள் கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூத்துக்கும் முன்னாள் செயலாளர் ஹசன் அலிக்கும் கட்சியின் மூத்த போராளிகள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களினூடாக கிடைக்கப்பெற்ற இரு தேசிய பட்டியல் நியமனங்களும் தற்போதைய தலைவரின் உடன் பிறந்த சகோதரருக்கும் உடன் பிற சகோதரருக்கும் வழங்கப்பட்டது. இவ்விருவருக்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டமை நம்பிக்கையின் அடிப்படையில் என தலைமையினால் 2015ல் தெரிவிப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியில் பயணத்தில் பாராளுமன்றத் தேர்தல் ஊடாகக் கிடைக்கப்பெறும் தேசியப் பட்டியல் நியமனங்கள் இவ்வாறு நிதிக்காகவும், நம்பிக்கைக்காகவும் வழங்கப்பட்டு வந்தபோதிலும் எம்.எச்.எம் சல்மானின் இராஜினாமாவை அடுத்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் நசீர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இத்தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்டிருப்பது அட்டானைச்சேனை உட்பட பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேங்களிலுள்ள 15 ஆயிரம் வாக்காளர்களினது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட தேர்தல் பரிசு என்று மாற்றுக் கட்சிக்காரர்களினால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் தேசிய அமைப்பாளர்; சபீக் ரஜாப்டீன் பதவி விலகியமையும் முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் நசீரிருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும்; அரசியல் தந்திரமாக இருக்குமாக என்ற சந்தேகத்துடன், இந்த இராஜினாமாவும், நியமனமும் கிழக்கின் பெரும்பான்மை முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களை வெற்றி கொள்வதில் எத்தகைய தாக்கத்தை முஸ்லிம் காங்கிரஷூக்கு ஏற்படுத்தும்; என்பதை அறிந்துகொள்ள இன்னும் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

வீரகேசரி – 27.01.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here