பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு தொடர்பில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் விஷேட கலந்துரையாடல்

0
288

பஸ் கொள்வனவுத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் கடந்த 26.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் கட்டார் அபூ ஹமூரில் அமைந்துள்ள லக்பிம இலங்கை உணவகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பேரூந்தொன்றைக் கொள்வனவு செய்யும் நோக்குடன் செயற்படும் கட்டார் பழைய மாணவர் சங்கக்கிளையினர் நலன்விரும்பிகள் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்களுடன் இணைந்து சுமார் 18 இலட்சம் ரூபாய் வரைச்சேகரித்து வைப்பிலிடப்பட்டுள்ளமை யாவருமறிந்ததே.

பஸ் வண்டியினைக் கொள்வனவு செய்து வழங்க மிகுதியாகத் தேவைப்படும் நிதியினைச் சேகரித்துக் கொள்ளல் தொடர்பில் ஆலோசனைகளைப்பெறும் நோக்கிலும், இப்பாரிய நிதியுதவிகளைத் தந்துதவிய, நிதி சேகரிப்பில் ஈடுபட்டு உதவி புரிந்த சகோதரர்களையும் எம்மால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுத்தொடரின் போது உதவி ஒத்தாசை புரிந்த, போட்டியில் கலந்து கொண்டு பாரிய பங்களிப்பினை வழங்கிய கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், எதிர்காலத்தில் எமது திட்டத்தில் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ள சகோதரர்களையும் அழைத்து கெளரவிக்கும் நன்றி தெரிவிக்கும் நோக்கிலும் மேற்படி விஷேட சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இவ்விஷேட கலந்துரையாடலில் எமது குறுகிய கால அழைப்பையேற்று கட்டாரில் பணி புரியும் வசிக்கும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் தங்களது பெறுமதியான நேரங்களைத் தியாகம் செய்து கலந்து கொண்டதுடன், ஒரு வெற்றிகரமான கலந்துரையாடலாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கான இலங்கைத்தூதரக உதவித்தூதுவர் மதிப்பிற்குரிய சகோதரர் எம்.எம்.அனஸ் அவர்களின் இராப்போசன அனுசரணையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் ஏற்பாட்டில் தலைவர் மெளலவி எம்.ஐ.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், எமது பஸ் கொள்வனவு நிதி சேகரிப்புத் திட்டத்தை முன் கொண்டு செல்லல் தொடர்பிலும் மிகுதியாகத் தேவைப்படும் நிதியினைச் சேகரித்துக் கொள்ளல் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அஸ்ஹர் மெளலவியின் கிராஅத்துடன் ஆரம்பமான கலந்துரையாடலில் தலைவர் மெளலவி எம்.ஐ.அஜ்மீர் தலைமையுரையைத் தொடர்ந்து, எமது திட்டத்தின் ஆரம்பம் இதுவரை நாம் எட்டியுள்ள இலக்கு மற்றும் எதிர்காலத்திட்டம் தொடர்பில் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் கணக்காளர் சகோதரர் எம்.பி.எம்.இஸ்ஸத் விரிவான விளக்கத்தையும், கிரிக்கெட் சுற்றுத்தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் சகோதரர் ஆரிப் மெளலானா ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்து சிறப்புரையாற்றினர்.

தற்போது கட்டாரிலுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு புதிய வழிமுறைகளைக் கையாண்டு எமக்குத் தேவையாகவுள்ள மீதி நிதியினைச் சேகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வத்துடனும் ஆத்மார்த்தமாகவும் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், கட்டாரிலுள்ள கிரிக்கெட் கழகங்களை ஒன்றிணைத்து மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரினை சிறப்பான முறையில் நடாத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, அனுசரணையாளர்களைப் பெற்றுக்கொள்ளல், மைதான ஒழுங்குகள், கழகங்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பிலும் ஆரோக்கியமான சிறப்பான ஆலோசனைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் சகோதரர்கள் முபாறக், அனஸ் மெளலவி, சமீம், றியாஸ், நியாஸ் பலாஹி, துவான், இம்றான், றிபாய்தீன் ஆகியோர் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, கலந்து கொண்ட சகோதரர்களில் முபாறக், நாசர், காசிம் உட்பட பலர் தங்களது உடனடிப்பங்களிப்புக்களை நிகழ்வின் போது வழங்கி நிதி சேகரிப்புத்திட்டத்திற்கு வலுச்சேர்த்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், எமது திட்டம் தொடர்பிலான அறிக்கை, நிதி சேகரிப்புக்களை மேற்கொள்ள வசதியாக அதற்கான கையேடு, இதுவரை சேகரிக்கப்பட்டு வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள நிதி இறுதி இருப்பு அறிக்கை என்பன கலந்துரையாடலில் கலந்து கொண்டோருக்கு வழங்கி வைக்கப்பட்டது. செயலாளர் சகோதரர் பஷீர் அஹ்மத் அவர்களின் நன்றியுரையுடன் திட்டமிட்டபடி விசேட கலந்துரையாடல் இனிதே நிறைவுபெற்றது.

ஊடகப்பிரிவு-OBA Qatar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here