புலிகள் மீதான தடையை நீக்க தமிழ் கூட்டமைப்பு விரும்பவில்லை அங்கஜன்

Spread the love

(பாறுக் ஷிஹான்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும் தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின் நான் அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் நேற்று(30) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் போது நித்திரையா தமிழா எனும் பாடலை ஒலிபரப்பியமை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியே தமிழரசுக்கட்சி என அதில் அங்கம் வகிக்கும் சிலர் கூறுகின்றனர், மேலும் சிலர் விடுதலைப்புலிகள் எமது கட்சியை உருவாக்கவில்லை என்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறும் போது இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் மாத்திரம் போர்க் குற்றம் செய்யவில்லை விடுதலைப்புலிகளும் போர்க் குற்றம் செய்தார்கள் என்று தெரிவித்ததாகவும் அங்கஜன் இராமநாதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆகவே புலிகள் மீதான பயங்கரவாதத்தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு கூட்டமைப்பினர் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

குறித்த கூட்டத்தில் நீண்ட காலமாக காணியின்றி வசிக்கும் அப்பகுதி மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்த அங்கஜன் இராமநாதன், நிரந்தரமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*