ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலுள்ள விரிசல் சண்டையல்ல ; அர்ஜுன ரணதுங்க

Spread the love

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவையாக இருந்தபோதிலும் இரு கட்சிகளின் தலைவர்களும் தமது கட்சிக்காக செயற்பட்டதைவிட நாட்டுக்காகவே கடந்த மூன்று ஆண்டுகளும் செயற்பட்டுள்ளனரென பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதென பலர் தெரிவித்தாலும் அது உண்மையில் சண்டையல்ல. அவர் அவர் கருத்துக்களிலுள்ள வேறுபாடு மாத்திரமே எனவும் தெரிவித்தார்.

கொலன்னாவை ஸ்ரீ ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவிடாமல் தடுப்பதானது மக்கள் கொடுத்த தேர்தல் ஆணையை மீறும் செயற்பாடு.

உள்ளூராட்சித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டாலும் கடைசியில் நாடு என்ற ரீதியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைவர்.

கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தந்துள்ளோம். ஆனால் அதைவிட பெரிய வேலைகளும் உண்டு.

எதிர்வரும் இரண்டு வருடங்களே மிக முக்கியமான வருடங்களாகும். இந்தக் காலப்பகுதியில்தான் பல பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி இருப்பதுடன் இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து செயற்படவேண்டிய கட்டாயமும் உள்ளது.

இன்று பலர் செல்கின்றனர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று. ஆனால் உண்மையில் அது சண்டையல்ல. அவர் அவர் கருத்துக்களில் உள்ள வேறுபாடு மாத்திரமே.

வீட்டில் இருக்கும் தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரு கருத்து இருப்பதில்லை. அது போலவேதான் இதுவும். பிரச்சினைகள் வரும். ஜனாதிபதியும் பிரதமரும் சிறந்த மூளையுள்ள தலைவர்கள். அவர்கள் இந்த பிரச்சினைகளை சிறந்த முறையில் கையாளுவார்கள். அதைத்தான் நாட்டு மக்களும் விரும்புகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவை. இந்த இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்கள் தமது கட்சிக்காக செயற்பட்டதைவிட நாட்டுக்காகவே கடந்த மூன்று ஆண்டுகள் செயற்பட்டடுள்ளனர். இதை இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று ஊடக சுதந்திரம் உண்டு. சுதந்திரமாக வீதியில் நடந்து செல்ல முடியும். ஜனநாயகம் இங்கு கூடுதலாக உள்ளது. மக்களுக்கு சுதந்திரமாக இங்கு வழகூடியதாக உள்ளது. ஆனால் திருடர்களை பிடிப்போம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமையே எமக்கு கவலையாக உள்ளது. இதுவே இன்று பிரச்சினையாக உள்ளது. ஆனால் நாடு என்ற ரீதியில் நாங்கள் செய்ததை எண்ணி மகிழ்சியடைகின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளை மையமாக கொண்டு மக்கள் வாக்களிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் இந்த இரு பிரதான கட்சிகளுக்கு பெரும்பான்மை பலத்தை கொடுக்கவில்லை.

ஆனால் இரண்டு கட்சியும் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யவே மக்கள் வாக்களித்துள்ளனர்.

தற்போது எமக்கு முக்கியமானது கட்சி அரசியல் அல்ல. எமக்கு எந்த வேளையிலும் கட்சி ஒன்றை உருவாக்க முடியும். ஆனால் சிறந்த நாட்டை உருவாக்க முடியாது. ஆகவே இரண்டு கட்சிகளும் இணைந்து இனிவரும் காலத்தில் நாட்டுக்காக வேலைசெய்யவேண்டிய தேவையுள்ளது. இதை செய்யாவிட்டால் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை மீறுவதாகுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*