சிறுபான்மையினருக்கு பாதிப்பின்றி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Spread the love

“நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் எவ்வித இன – மத பிரச்சினைகளுமின்றி தங்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற போது சகல சமூகங்களும் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தங்களது பிரதேசங்களில் வாழ்வதற்கான பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்கள் உள்ளிட்ட சகல பிரதேசங்களும் முறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கட்சியின் முஸ்லிம் பிரிவு பிரதித் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்ததுடன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகல்லாகம மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினல் குரே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

சகல இன மக்களையும் இணைத்துக்கொண்டு இனவாதமற்ற கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னெடுத்துச் செல்கின்ற பாரிய பொறுப்பு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது. அவர் கட்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காவும் முன்னெடுக்கின்ற சகல விடயங்களுக்கும் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் என இப்பிரதேச மக்கள் சார்பில் உறுதியளிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டம் என்பது யுத்தம் மற்றும் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். இதனால் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றுக்குத் தீர்வு கண்டு சுபீட்சமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
30 வருட யுத்தத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களையும், வீடுகளையும், சொத்துக்களையும் இம்மாவட்டம் இழந்துள்ளது. எனவே, ஏனைய மாவட்டங்கள் பெற்றுள்ள சகல வசதிகளும் – வாய்ப்புக்களும் இந்த மாவட்டத்துக்கும் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்களுக்கு நாங்கள் தெளிவான பதில்களை வழங்கியுள்ளோம். அவர்கள் கடந்த தேர்தலில் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கடந்த தேர்தலில் எமது பிரதிநிதித்துவத்தை தோற்கடித்து எங்களது மக்களை அரசியல் அனாதையாக்கினார்கள்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த காத்தான்குடி மண்ணுக்கு தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி. பதவியொன்றை வழங்கியது மட்டுமல்லாது இராஜாங்க அமைச்சுப் பதவியையும் வழங்கியுள்ளார். அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் எவ்வித மத – இன பிரச்சினைகளின்றி சகல மக்களும் தங்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். அத்தோடு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அந்தந்த சமூகம் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு அரசியல் சூழ்நிலை உங்களது ( ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்) தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற போது சகல சமூகங்களும் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தங்களது பிரதேசங்களில் வாழ்வதற்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே, சகல இன மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒவ்வொரு மதத்தையும் புரிந்து கொண்டு சகோதரர்களாக சகல இன மக்களும், சகல பிரதேச மக்களும் இன, மத. மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த நாட்டினுடைய பிள்ளைகள் தனது குழந்தைகள் தனது மக்கள் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் இந்த நாட்டு மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 15 உள்ளுராட்சி சபைகளிலும் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தங்களுடைய பிரதேசங்கள் கடந்த காலங்களில் அரசியல் செய்தவர்களால் வெறுமனே அரசியல் கோஷங்களை வைத்து தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்ட குறைகளை இன்று மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு அபிவிருத்தியை முழுமையாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்காலத்திலே அந்த மக்களின் – பிரதேசத்தின் அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்வதற்காக உங்களுடைய தலைமைத்துவத்தை ஏற்று எதிர்வருகின்ற தேர்தலில் தமிழ் பிரதேசங்களில் அதிகளவான மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். –என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*