எமது முஸ்லிம் சமூகத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு எமக்கு ஆணையை தாருங்கள். – றிஸாட் பதியுதீன்

Spread the love

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

எமது முஸ்லிம் சமூகத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு எமக்கு ஆணையை தாருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வணிக மற்றும் வாணிபதுறை அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

கடந்த 17 வருடங்களாக முஸ்லிம் சமூகத்தை காட்டி அரசியல் செய்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எமது மக்களுக்கு அபிவிருத்தியும் செய்யவில்லை. உரிமை விடயத்திலும் பேசவில்லை. முஸ்லிம் சமூகத்திற்காக தீர்வைக் கூட இவர்களால் முன்வைக்க முடியவில்லை.

அரசியல் தீர்வுக்குழுவில் நாங்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் அங்கம் வகிக்கின்றனர். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று தைரியமாக கொடுத்து இருக்கின்றோம்.

எமது பழைய தலைவர் அஷ்ரப்பின் பாட்டுகள், கோசங்கள், வார்த்தைகளை சொல்லி எமது மக்களை ஏமாற்ற வருகின்ற அந்த தலைமைக்கு நீங்கள் நல்லதொரு பாடத்தை புகட்டுகின்ற தேர்தலாக இது இருக்க வேண்டும். எமது சமூகத்தை மடையர்களாக, எமது சமூகம் தூங்கிக் கொண்டு இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எமது சமூகத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு நீங்கள் தருகின்ற ஆணையாக எமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

பொத்துவில் முதல் புல்மோட்டை வரை எமது மக்களுக்கு சொந்தமான காணிகள் வனவளம் அல்லது வனவிலங்கு பகுதிகளுக்கு எழுதி இருக்கின்றது. எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது மக்களுக்கு காணிப் பிரச்சனை பாரியதொரு பிரச்சனையாக இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் தீர்வுகான வேண்டிய தேவை இருக்கின்றது.

பதினேழு வருடமாக உரிமைகளை பேசி மக்களுடைய வாக்குகளைப் பெற்ற கட்சி அபிவிருத்தி செய்ய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு உரிமைக்காக வந்தவர்கள் எங்களுடைய காணிகளைப் பற்றியோ, எல்லைகள் பற்றியோ, கிராம சேவகர் பிரிவுகளைப் பற்றியோ, தனியாக பிரதேச சபையை பற்றியோ, வீடு இல்லாதவர், எதிர்கால சந்தியினர் மற்றும் விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ பேசாதவர்கள்.

எதிர்காலத்தில் நீங்கள் தலை நிமிர்ந்து, தன்மானத்துடன் வாழ்வதற்கு, நீங்கள் எதிர்கால தலைமுறையும் காட்டிக் கொடுக்கப்படாமல் எந்தவொரு தீர்வுத் திட்டம் வந்தாலும் நமக்குரியதை பேசிக் பெற்றுக் கொண்டு எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நேர்மையாக செயற்படுகின்ற எமது கட்சியின் பலமாக நீங்கள் இந்த தேர்தலில் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*