சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க

0
88

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையை ஏற்படுத்தி சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

இனங்களுக்கிடையில் அன்று பாரிய பிரச்சனைகள் காணப்பட்டது. முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதேபோன்று மகாநாயக்க தேரர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இன்று அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வெள்ளை வேனை அனுப்பவில்லை. கொழும்பை எடுத்துக் கொண்டால் எந்த நாளும் ஆர்ப்பாட்டம். ஆனால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. இந்த சுதந்திரம் கடந்த காலத்தில் காணப்படவில்லை. இன்று தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

நாங்கள் பாராளுமன்ற தேர்தலை வென்றது இந்த நாட்டுக்கு சிறந்த பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக, கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களது பொருளாதாரம் சுமையாக இருந்த காரணத்தினால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு காணப்பட்டது. எங்களது நாடுபட்ட கடனை செலுத்துவதற்கு எந்தவித வருமானமும் இல்லாமல் இருந்தது. இப்போது நாட்டின் வருமானம் அதிகரித்து இருக்கின்றது. கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட கடனை கட்டுவதற்கு வருமான மூலங்களை நாங்கள் தேடி இருக்கின்றோம்.

கடந்த வருடம் எமது நாட்டில் ஆகக் கூடுதலான ஏற்றுமதி வருமானமாக பதினைந்து பில்லியன் டொலரை பெற்றுக் கொண்டோம். இந்த நிகழ்வை வைத்து நான் திருப்திப்படவில்லை. அதாவது எங்களுடைய ஏற்றுமதியும், அபிவிருத்தியும் இரண்டு மடங்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

தென் பகுதி போன்று வடக்கிலும் கிழக்கிலும் எந்த அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்பட வேண்டுமோ அந்த அபிவிருத்தி வேலைகளையும் திறம்பட செய்து வருகின்றோம். திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்தி பொருளாதார மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஜப்பான் சிங்கப்பூர் நாட்டுடன் நடாத்தி அந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் எங்களால் முன்னெடுக்கப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாய சமூகத்தையும், மீன்பிடி சமூகத்தையும் முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இது விவசாய சமூகத்தை கொண்டுள்ள பிரதேசம் இதனை நாங்கள் இன்னும் அபிவிருத்தி செய்ய முடியும். அது மாத்திரமல்ல புதிய பொருளாதார அபிவிருத்தியைப் பெறக் கூடிய வழிவகைகளை உங்களுக்கு காட்ட இருக்கின்றோம்.

திருகோணமலையில் இருந்து அருகம்பை வரையும் எங்களது உல்லாசப் பயணத்துறை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டங்களை வகுத்து செயற்படுகின்றோம். வாகரை, மாங்கேணி, பாசிக்குடா, கல்குடா போன்ற பிரதேசங்களும் இதன் மூலம் பாரிய அபிவிருத்தியை செய்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த பிரதேசத்தில் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகம் போதுமானதாக இருக்கின்றது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். கைத்தொழிலையும் இங்கு அபிவிருத்தி செய்ய முடியும். இந்த அபிவிருத்திகளை செய்வதற்கான முனைப்புக்களை நாங்கள் செய்து வருகின்றோம்.

இந்த பிரதேசத்தில் மீன் பிடி மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் மிருக வளர்ப்பை ஊக்குவிப்பதற்குமாக வேலைத் திட்டங்களை இங்கு செய்து தருவேன். இப்போதே சொல்லுகின்றேன் தயாகமகே அமைச்சர் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அமைச்சினூடாக வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் கட்டளை வழங்குகின்றேன். வாகனேரிக் குளத்தை புனரமைத்து இந்த பிரதேசத்தின் விவசாயத்தை முன்னேற்றுவதற்கு வழியமைத்து தருவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here