நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய பிரமாண்டமான ‘உண்மை’ மாநாடு!

Spread the love

2018 உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ‘ உண்மை’ மாநாடு 02.02.18 வெள்ளிக்கிழமை பி.ப.8.00 மணி முதல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியிலாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான் அவர்களினால் இரண்டரை மணிநேர விளக்கவுரை நிகழத்தப்பட்டதுடன், ஊழல்களை நிரூபிக்கும் ஆவணங்களும் மக்கள் மன்றில் வெளியிடப்பட்டது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, இந்த நாட்டின் தேசிய அரசியலிலும், பிரதேச அரசியலிலும் ஊழலுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுத்து வருகின்ற ஒரு கட்சியாகும். அந்த வகையில் கடந்த பல வருட காலங்களில் பல்வேறு அரசியல் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வந்த பல ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, தொடர்ச்சியாக தனது பிரச்சார மேடைகளில் மக்களுக்கு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக மக்கள் தற்போது உண்மைகளை உணரவும், அரசியல் துஸ்பிரயோகங்கள், ஊழல் மோசடிகள் பற்றிய விழிப்புணர்வினை பெற்றுக்கொண்டுமுள்ளனர்.

இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்  அவர்களினால் கடந்த 27.01.18 அன்று ‘ஊழல்’ என்ற தலைப்பிலான மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. கடந்த காலங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால்; இவர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர், அவரின் மீதும் அவரது சகாக்கள் மீதும் சுமத்தப்பட்ட 8 ஊழல் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரமே விளக்கமளித்தார். இந்நிகழ்வானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும் பல உண்மைகளை மூடி மறைப்பதாகவும் இருந்ததனை புரிந்து கொண்ட பல புத்திஜீவிகளும், பிரதேச மக்களும் இது தொடர்பான உண்மைகளை நிரூபிக்கும் மாநாடு ஒன்றினை நடாத்துமாறு NFGGக்கு தொடர்ச்சியான கோரிக்கையினை விடுத்து வந்தனர். இந்த பின்னணியிலேயே ‘உண்மை’ என்எற பெயரில் இந்த பிரமாண்டமான மாநாடு குறித்த தினம் நடாத்தப்பட்டது.

காத்தான்குடி வரலாற்றில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வாக இம்மாநாடு நோக்கப்படுகின்றது. NFGGயின் தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினர்கள், ஸ்தாபக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச புத்திஜீவிகள், உலமாக்கள், ஆண், பெண் ஆதரவாளர் உள்ளடங்களாக சுமார் ஐயாயிரம் பேர்வரை இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஊழல் மாநாட்டில் மறுத்துரைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மிகத்தெளிவான விளக்கங்களை முன்வைத்ததுடன் நிறூபிக்கப்பட்ட ஆதாரங்களையும் ஒளித்திரையூடாக மக்களுக்கு காண்பித்தார்.

குறித்த இம்மாநாடானது, இம்முறை உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலம் காலமாக அரசியல்வாதிகளினால் தேர்தல் மேடைகளில் பல பொய் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதன்மூலம் பெறப்படும் அரசியல் அதிகாரங்கள் பின்னர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டு, மக்களின் பணம் இவ்வரசியல்வாதிகளினால் எவ்வாறு மோசடி செய்யப்படுகின்றது என்கின்ற பூரண விளக்கத்தினையும் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் எடுத்துரைத்தார். இம்மாநாட்டின் மூலம் மக்கள் பல திடுக்கிடும் உண்மைகளை அறிந்து கொண்டனர். இம்மாநாட்டினை பல்லாயிரக் கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ashkar Thasleem  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*