இன்னும் இந்த நாட்டில் சுதந்திரம் இல்லாத இனமாக தமிழினம் இருந்து கொண்டிருக்கிறது – யோகேஸ்வரன்

0
252

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

இந்த நாட்டில் இன்னும் சுதந்திரம் இல்லாத இனமாக தமிழினம் இருந்து கொண்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க.கமலநேசனை ஆதரித்து நாசிவந்தீவு கிராமத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்து மட்டக்களப்பு மக்களுக்கு அவப்பெயரை தேடித் தந்த, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிள்ளையானை முதலமைச்சராக மகிந்த கொண்டு வந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடும் போது மிகவும் வறியவர்களாக இருந்தார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் வந்த பின் அவரது போராளிகளுக்கு எங்களது மக்களுக்கு வந்த பணத்தின் மூலம் மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

முதலமைச்சராக இருக்கும் போதே பலர் காணாமலாக்கப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள் இவர்களது விபரங்கள் இன்றுவரை இல்லை. மகிந்தவின் இராணுவத்தோடு ஒட்டுண்ணிக் குழுக்களாக இருந்த நீங்கள் தான் இதைச் செய்தீர்கள்.

இராணுவத்தின் கீழ் புலனாய்வு பிரிவு இயங்கியது. அதிலுள்ள புலனாய்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இதற்கான சம்பளத்தை கிழக்கு மாகாணத்தில் புனலாய்வு பிரிவு பொறுப்பாளராக இருந்த பிள்ளையானிடம் வழங்கினார்கள். இலட்சக்கணக்கான சம்பளத்தை பெற்றவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு வாக்களிப்பது அவர்கள் செய்த கொலைகள், கொள்ளைகள், கப்பம் பெற்றதற்கு அதரவு வழங்குகின்றோம் என்பது தான்.

பிள்ளையானை மேடையில் அமர்த்தி மாண்புமிகு முதலமைச்சரே என்று நூறு முஸ்லிம்கள் வந்து சொன்னதும் உச்சி மட்டும் குளிர்ந்து விடும். ஆங்கிலத்தில் கடிதம் கொடுத்ததும் வாசிக்காமல், பார்க்காமல் கையொப்பம் வைத்து விடுவார். அவர் விட்ட கையொப்பம் தான் காத்தான்குடியில் நடுவில் உள்ள ஈச்ச மரம்.

கற்றுக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோரை குற்றவாளிகளாக குறித்திருக்கின்றது. அது விசாரணைக்கு வரும் போது நீதிக்கு பதில் சொல்ல வேண்டும். தற்போது பிள்ளையான் சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கின்றார் நீதி விசாரணை இடம்பெற்றால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கப்பட்டாலும், இந்த நாட்டில் இன்னும் சுதந்திரம் இல்லாத இனமாக தமிழினம் இருந்து கொண்டிருக்கின்றோம். எங்களது சுதந்திரத்துக்காக தான் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கின்றோம். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பால் மாத்திரம் தான் பெற முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here