சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை சிக்கல் நிறைந்ததா?

0
479

எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05

கடந்த 24.01.2018இல் ஒளிபரப்பான வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பல்வேறு விடயங்கள் பற்றி தமது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்திய சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினை தாபிப்பது தொடர்பான அறிவிப்பாளரின் வினாவுக்கு விடையளிக்கையில் பின்வரும் கருத்துப்பட தமது விளக்கங்களை முன்வைத்திருந்தார்.

”சாய்ந்தமருது மக்களுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவது தொடர்பில் நீண்டகாலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தொடர்பை வைத்திருந்தது. இந்நிலையில், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை நாம் சந்தித்து இவ்விடயத்தை துரிதப்படுத்தும் வகையில் அவ்வூரைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிற்பாடு எதிர்வரும் 28.08.2017 இல் வர்த்தமானி அறிவித்தல் வெளிவர இருப்பதாக அறிவித்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கல்முனைக்குடி சமூகத்தை சேர்ந்த பல புத்திஜீவிகள் என்னை சந்தித்து இந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

அவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர்தான் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் பிரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு பிரச்சினை அதில் இருப்பதுபற்றி நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. அதனுடைய ஆழத்தை புரியாது ஜெமீலின் வேண்டுகோளுக்காக நான் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்த தவறை செய்திருப்பதாகவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.அத்தோடு அம்மக்களின் விருப்பத்திற்கிணங்க நாம் நடைபெறப்போகின்ற இந்த உள்ளூராட்சி (2018) தேர்தலில் நேரடியாக போட்டி வேட்பாளர்களை நிறுத்தாதுஇ தவிர்ந்து கொண்டேன். நான் ஒரு அமைச்சர் என்ற வகையிலோ அல்லது நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலோ அந்த மக்களின் வேண்டுகோளுக்கு எதிராக எனது கட்சியை நிறுத்தி அங்கு ஒரு கலவர சூழலை தோற்றுவிக்க நான் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கடந்த 18.01.2018 இல் இங்கு வருகை தந்த உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, “சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் இன்றும் ஜனாதிபதியுடன் பேசிவிட்டு வந்திருக்கின்றேன். இது உங்களுக்கு கிடைக்கும். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எனக்கில்லை. உங்கள் மத்தியில் வந்து அரசியல் செய்கின்ற அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றோர்கள்தான் இவ்விடயத்தில் அரசியல் செய்கின்றனர்.

அவர்கள் இருவரும் ஒருமித்துச் சொன்னால் நான் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தை வழங்குகின்றேன் என்று கூறியும் அவர்கள் அதற்கு இணங்கி செயற்படவில்லை. எங்களிடம் ஒன்றையும், உங்களிடம் இன்னொரு கருத்தையும் சொல்லுகின்ற அவர்களைத்தான் நீங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும்.” என்கின்ற தோரணையில் தமது கருத்தை விரித்து சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அமைச்சர்களும் சாய்ந்தமருதுக்கென்று தனியாக உள்ளூராட்சி சபையை முன்னிலைப்படுத்தி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கல்முனைக்குடி தரப்பினர்கள் முன்வைத்த கருத்தை சரிகண்டும், அவர்களின் புதிய கோரிக்கையான கல்முனை மாநகர சபை ஒரே நேரத்தில் நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் ஏற்றுக்கொண்டவர்களாகவே இவர்களது மேற்படிய கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கென உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதில் பாரிய சிக்கல் இருப்பதாக அல்லது கல்முனை முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்ற கருத்தாடலின் மீது உண்மை இருக்கின்றது. என்பதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதைத்தான் இது ஆதாரப்படுத்துகின்றது. அப்படியென்றால், இதற்குமுன்னர் 21.10.2016இல் இவ்விரு அமைச்சர்களும் சாய்ந்தமருதுக்கு வருகைதந்து ஒரே மேடையில் ”சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை நான் விரைவில் தருவேன் என்னை நம்புங்கள்” என அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், ”உள்ளூராட்சி மன்றத்தேர்தல் ஒன்று நடக்குமானால், அது சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்பட்டு அதற்குமான ஒரு தேர்தலாகவே நாம் கொண்டுவருவோம்” என திட்டவட்டமாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், அறிவித்திருந்தனர்.

அந்தநேரத்தில் இவ்விரு அமைச்சர்களுக்கும் சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி மன்றத்தை வழங்கினால், கல்முனையில் பாதிப்புக்கள் வருமென்பது தங்களுக்கு தெரியாதென்று இன்று சொல்வது இவ்விரு அமைச்சர்களுக்கும் பொருத்தமான செயற்பாடல்ல. ஏனெனில், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் புதிதாக வட்டார எல்லை நிர்ணயங்கள் வகுக்கப்பட்டபோது, கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து சென்றால், கல்முனை நகரின் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் கைவிட்டுப்போய்விடும் என்கின்ற அம்சம் விளங்காத ஒருவராக தன்னை இன்று காண்பிப்பதென்பது தனது அமைச்சின் துறை சார்ந்த விடயத்தில் தனக்கு போதிய விளக்கமின்மை இருந்தது என்பதை ஒப்புவிப்பதாக ஆகாதா? அதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் மீதான தனிப்பட்ட அக்கறை இல்லாதவர் என்ற மதிப்பீட்டை அவர் மீது பதிவாக்காதா?

முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக அல்லது இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியல் செய்வதற்கென்று அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற ஒரு தனிக்கட்சி இருக்கின்ற நிலையில், அவை தனது கடமைகளை சரியாக செய்யவில்லை என்பதற்காக மாற்றுத் தலைமையை வழங்குவதற்கு முன்வந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது தனியாகப் பிரிந்து சென்றால் முஸ்லிம் மக்களின் அரசியல் ஆதிக்கம் கல்முனை மாநகர சபையிலிருந்து பறிபோய்விடும் என்கின்ற புள்ளிவிபர அடிப்படை தகவல்கள் கூட இல்லாமலிருந்தார் என்று அர்த்தப்படாதா?

இவரது கட்சி சார்ந்த இன்னொரு பிரதி அமைச்சரான அமீர் அலி அவர்கள் கூட கடந்த 03.01.2018இல் ஒளிபரப்பான அதிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு, கல்முனையில் இத்தகைய சிக்கல்கள், பிரச்சினைகள் இருப்பதை நாம் முன்னர் விளங்கவில்லை என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தமையும் இவ்விடத்தில் நாம் எடுத்து நோக்கத்தக்கதாகும்.

உண்மையில் பிரதி அமைச்சர் அமீர் அலி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவராவார். இவருக்கு மிக அண்மிய பகுதியாகவே கல்முனை மாநகர சபை எல்லை அமைந்திருக்கின்றது. அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் செயற்படுகின்ற அதிகாரத்தையும் அக்கட்சி அவருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால், தனது பராமரிப்புக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்முனை மாநகர சபை எல்லையிலிருந்து சாய்ந்தமருது தனியாக பிரிந்து சென்றால் ஆபத்து நேருமென்பதை அவரும் அறியாமலிருந்தார் என்பதையே இவை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

சாய்ந்தமருது பிரிந்தால் தமிழ் மக்களிடம் கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரம் சென்றுவிடும் என்பதை இன்று ஏற்றுக்கொள்ளும் இவர்கள் அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் எந்த புள்ளிவிபரங்களையோ, ஆய்வு ரீதியான கருத்துக்களையோ இதுவரை முன்வைக்கவில்லை. இவர்கள் இன்று முடிவுக்கு வருவதற்கு காரணமாக அமைந்த கல்முனைக்குடி சமூகத்தினர்கள் கூட இவ்வாறு அறிவுபூர்வமாக எந்த ஆதாரங்களையும் முன்வைக்காது வெறுமனே பாதிப்பு வருமென்கின்ற அவர்களின் வார்த்தையை நம்பி அவர்களை சரி காண்கின்ற நிலைக்கு இன்று இவர்கள் வந்திருப்பது ஒரு விவேகமான வழிமுறையாகவோ அல்லது நியாயமானதாகவோ இராது என்பதை மிக எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்.

சாய்ந்தமருது மக்கள் யார்? அவர்களும் முஸ்லிம்கள்தான். தமக்கு அருகில் வாழ்கின்ற கல்முனைக்குடி முஸ்லிம் மக்களுக்கு பாதகத்தை அல்லது கல்முனை முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்து, தமிழர்களின் அரசியல் ஆதிக்கத்தை கொண்டுவருவதற்கு துணைபோக கூடியவர்கள் என்று சாய்ந்தமருது மக்களை பார்ப்பது எந்த வகையில் சரியானது என்கின்ற ஒரு கேள்வி இவ்விடத்தில் இருப்பதை புரிந்தால் இம்மக்களின் வேண்டுகோள் பாதகமானது அல்ல என்பதை விளங்கிக்கொள்வதில் எந்தக்குறுக்கீடும் இராது என்பது மிகப் பிரத்தியட்சமானது.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு அதனை ஏற்று சிபாரிசு செய்த நிலையில், அவ்வாறு வழங்கப்படக்கூடாது வழங்குவதாக இருந்தால் கல்முனை மாநகர சபை ஒரே நேரத்தில் நான்காக பிரிக்கப்படல் வேண்டும் என்கின்ற ஒரு கூற்றை கல்முனைக்குடி சமூகத்தினர்கள் முன்வைத்து, பிரகடனப்படுத்த இருந்த சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை தடுத்து நிறுத்தியதைத்தான் இன்று மேற்சுட்டிக்காட்டிய இரு முழு மந்திரிகளும் ஒரு அரை மந்திரியும் சரி காண்கின்றனர். இது ஒரு தலைப்பட்சமான சரிகாணுதல் என்பதை அவர்களின் அரசியல் அறிவு, அரசியல் அனுபவம், குறித்த விடயதான விளக்கம் என்பனவற்றை கேள்விக்குட்படுத்துமேயன்றி மாறாக அவர்களின் முடிவு சரி என்று ஆகாது.

கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பதென்பது அன்று (2017இல்) சடுதியாக முன்வைக்கப்பட்ட கல்முனைக்குடி தரப்பினர்களின் முன்னெடுப்பாகும். இதற்கு முன்னர் கடந்த 2009கள் தொடக்கம் இன்றுவரை கல்முனை மாநகர சபை நான்கு சபைகளாக மாற்றப்பட வேண்டும் என்கின்ற சிந்தனையை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் முன்வைத்து வந்திருந்தும்இ 2010ஆம் ஆண்டுக்குரிய நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக அதாவுல்லாஹ் இருந்தும் அவரிடம் சென்று கல்முனைக்குடி தரப்பினர் நான்காக பிரித்து தாருங்கள் என்று கேட்கவில்லை. அதுவே அவர்கள் கல்முனை மாநகர சபை நான்காக பிரிவதை விரும்பியிருக்கவில்லை என்பதை நிரூபிக்க போதுமானது. அப்படியாயின் இவ்விடத்தில் நான்காக பிரிப்பதை முன்வைத்தது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக கையாண்ட முறைகேடான முறைமை என்பது மிகத்தெளிவான ஒன்றாகும்.

எது எப்படியிருந்தாலும் கல்முனை மாநகர சபை நான்காக பிரிக்கப்படுதல் என்பது இரண்டு பிரதேச செயலகங்களை முன்னிறுத்தியதாகும். அதில், சாய்ந்தமருது பிரதேச செயலகமும் அதன் எல்லைகளும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு இன்று காணப்படுகின்றது. அதேநேரம் கல்முனை பிரதேச செயலகத்தின் எல்லைக்குள்தான் அவர்கள் கூறுகின்ற ஏனைய மூன்று பிரிப்புக்களும் உள்ளடங்கும்.

நான்காக பிரிக்கப்படுவதில் கல்முனைக்குடி தரப்பினர்களுக்கு உண்மைக்கு உண்மையான விருப்பம் இருப்பின் சாய்ந்தமருது முதலில் பிரிந்து செல்வதினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் எவை என்பதை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருத்தல் வேண்டும். கல்முனை பிரதேச செயலகத்தை மையப்படுத்தி மூன்று சபைகளை உருவாக்குவதில் சாய்ந்தமருது எப்படி தொடர்புபடுகின்றதென்பதை ஆதாரப்படுத்தியிருக்க வேண்டும். இவை எதுவுமே நடைபெறாது ஒரே நேரத்தில் நான்காக பிரிய வேண்டும் என்று மட்டும் அடம்பிடிப்பதற்கு சாய்ந்தமருது எவ்வாறு வலுப்படுத்தும் என்பதையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறான நிலைப்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாது சாய்ந்தமருதுக்கு மட்டும் தனித்து உள்ளூராட்சி மன்றம் உருவக்கப்படுவது சாத்தியம் இல்லை என்று சொல்வதில் எந்த நியாயங்களும் இல்லாத ஒன்றையே மேற்குறித்த அமைச்சர்கள் ஏற்றிருப்பதானது நியாயத்திற்கு புறம்பானது மட்டுமன்றி விடயதானத்துக்கும் ஒவ்வாதவை என்பதைத்தான் சாய்ந்தமருது மக்கள் முன்வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி அரசியலின் நலன் கருதி சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையில் தவறாக செயற்படுகின்றனர் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றது.

சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் தனிக்கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட காலம் தொட்டு இறுதியாக நடைபெற்ற 2015 பொதுத்தேர்தல் வரை அக்கட்சியே தமது கட்சியாக ஏற்றுகொண்டு அதற்காகவே பெரும்பாலான வாக்குகளையும் அளித்து வந்திருக்கின்ற மக்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிலும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை பொறுத்து இவ்வூரின் ப்ல அமைப்புக்களும் குறிப்பாக ஜும்மா பள்ளிவாசல் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலமாக நம்பி அக்கட்சியிடம் இம்மக்களின் வேண்டுகோளை முன்வைத்து, நீங்கள்தான் பெற்றுத்தர வேண்டுமென்று நீண்டகாலமாக அவர்களோடு பயணித்திருந்தனர்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு முகங்களை இம்மக்களுக்கு காட்டியிருக்கின்றது. அதன் உச்ச பட்சமாக எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருதில் போட்டி வேட்பாளர்களை களமிறக்கியது மட்டுமன்றி அதன் தலைமைத்துவம் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அதனை மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு செய்யவேண்டிய பொறுபு இருப்பதாகவும் இன்று கூறி வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிடுகின்ற விடயங்களில் மூன்று அம்சம் காணப்படுகின்றது. (01) கல்முனை அரசியலில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் இழக்கப்படுவது. (02) கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக ஓர் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவது, (03) நற்பிட்டிமுனை மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதாகும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முதலாவது ஐயம் அவரது கட்சி நலன் சார்ந்ததேயன்றி முஸ்லிம் மக்களுடைய பிரச்சினை அல்ல. ஏனெனில், சாய்ந்தமருது நீங்கலான கல்முனை மாநகர சபை எல்லையினுள் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய வட்டாரங்களின் அடிப்படையிலும் கட்சிகள் பெறுகின்ற மொத்த முஸ்லிம் வாக்குகளின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் தமிழர்களை விடவும் அதிகரித்த ஆசனங்களை பெற்று முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை கல்முனையில் நிலைநிறுத்த முடியும். இவற்றினை இங்கு வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்களின் எண்ணிக்கையும் இங்கு இருப்புக்கொண்டுள்ள வாக்காளர் தொகையும் நிரூபிக்க போதுமானதாகும்.

அமைச்சர் ஹக்கீமின் இரண்டாவது ஐயப்பாடான கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கான ஒரு சபையை உருவாக்குவது என்பது அம்மக்கள் இன்று முன்வைக்காத ஒரு விடயத்தினுள் வலிந்து நாமாகவே சென்று உருவாக்கிகொண்ட பிரச்சினையேயன்றி சுயமாக எழுந்த ஒன்றல்ல. ஆயினும், இந்த தமிழ் சபை உருவாக்கத்திற்கும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதில் தாமத்தை ஏற்படுத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஏனெனில், கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கான சபை என்பது கல்முனை பிரதேச செயலகத்தை மையப்படுத்தி தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நற்பட்டிமுனை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற ஐயப்பாடானது வெளிப்படையில் நியாயம் போன்று தோன்றினாலும், அடிப்படையில் அவ்வாறு பாதிப்பாகாது. ஏனெனில், புதிய சபைகள் தோற்றுவிக்கப்படுகின்றபோது இவ்வாறு சில பகுதிகள் அங்குமிங்குமாக மாறி அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில் மத்திய முகாம், சவளக்கடை பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட இறக்காமம் பிரதேச சபையில் மாணிக்கமடு சார்ந்த தமிழர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதும் இதற்குச் சில உதாரணமாகும். அது வேறான ஒரு நாடாகவோ, அரசாங்கமாகவோ இருப்பதுபோல் சித்தரிக்காது, இலங்கை என்ற ஒரு நாட்டில் அந்நாட்டின் அரசாங்கத்துக்கு கீழ் இயங்குகின்ற ஒரு விடயம் என்றுதான் இது பார்க்கப்படல் வேண்டும்.

இவ்வாறு அச்சப்பட வேண்டிய தேவை என்பது கூட கல்முனை மாநகர சபைகள் நான்காக பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எத்தரப்பினர்கள் முன்வைக்கின்றனரோ அதற்கு யார்யாரெல்லாம் ஆதரவு வழங்குகின்றனரோ அவர்களால் உருவாக்கப்படுகின்றதேயன்றி சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை இவற்றினை தோற்றுவிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான் ஒன்றாகும்.

ஆகவே, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நசுக்குவதற்கும், இல்லாமல் செய்வதற்கும் வேண்டுமென்று முன்வைக்கப்படுகின்ற போலியான காரணங்களையும், பிழையான தரவுகளையும் வைத்து இம்மக்களை வதை செய்வதாகவே பார்க்க வைக்கின்றது. ஆக மொத்தத்தில் கல்முனை அரசியலில் தொடர்புடையதாக இருக்கின்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லாஹ் ஆகியோர்கள் சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிரானவர்களாகவும், துரோகமிழைத்தவர்களாகவுமே வரலாறு எதிர்காலத்தில் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here