தேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

0
355

(பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாணத்திலுள்ள படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் இத்தேர்தல் முடிவுற்றதும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும், அவர்களுக்கான பணத்தையும் நான் அனுப்பி வைக்கின்றேன் என்று கிழக்கு மாகாண ஆளுநருக்கு கட்டளையிட்டிருக்கின்றேன். என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேசிய காங்கிரஸ் கட்சியில் குதிரைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (05) பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் யாரும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் போக வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கான கல்விக்கு அரசாங்கம் சரியான வேலை வாய்ப்புக்களை வழங்கும் என்பதை நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். அதுமாத்திரமல்லாமல் பெண்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளோம்.

தேர்தல் காலங்களில் எவ்விதமான வேலை வாய்ப்புக்களையும் வழங்க முடியாது. அதுமாத்திரமல்லாமல் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கவும் முடியாது. இவ்வாறு தேர்தல் காலங்களில் செய்கின்ற வேலைகள் யாவும் ஒரு இலஞ்சமாக அமைந்து காணப்படும். அதற்காக வேண்டியே தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் அவர்களின் விடயத்தை உடனடியாக முன்னெடுக்கும் படி கிழக்கு மாகாண ஆளுநருக்கு கட்டளை இட்டிருக்கின்றேன்.

கடந்த பயங்கரவாத யுத்தத்தில் வெற்றி பெற்றாலும் நாட்டில் ஒரு சமாதானம் இருக்கவில்லை. அதனை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவும், எமது மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவும் கடந்த 3 வருடகாலமாக என்று நான் பாடுபட்டுள்ளேன்.

நான் ஒரு இனத்துக்கு மட்டும் தலைவன் இல்லை நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் தலைவனாக இருக்கின்றேன். இதில் இன, மத மொழி போன்றவற்றாலும் கட்சி என்ற பாகுபாட்டினாலும் நாம் ஒருபோதும் பிரிந்திரக்கக் கூடாது.

தேர்தல் காலங்களில் எமது செயற்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் எமது மக்களுக்கான சேவையில் எந்த பாகுபாடுகளும் இல்லாமல் இருக்கவேண்டும், அதற்காக செயற்படவேண்டும். அப்போதுதான் எமது நாட்டை நல்லதொரு நாடாக கட்டியெழுப்ப முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளில் இருந்து பல உதவிகளை பெற்றுள்ளேன். எனக்கு உலக நாட்டில் நல்ல ஆதரவுகள் இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலிருந்து எமது நாட்டை முன்னெற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கடந்த ஆட்சியாளர்களின் காலங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் பணங்களை களவு செய்திருக்கின்றார்கள், அதுமாத்திரமல்லாமல் எமது மக்களின் உயிரைக்கூட பார்க்காமல் கொலையும் செய்துள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் எனது 3 வருட காலப்பகுதிக்குள் ஒன்றுமே இடம்பெறவில்லை. அதனால்தான் நான் நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவேன் என்று கூறுகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரம் உரித்தான கட்சியல்ல. சிங்கள, தழிழ், முஸ்லிம், மலாயர்கள், பரங்கியர்கள் போன்ற அனைத்து இனத்தவர்களின் கட்சிதான் இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இஸ்லாமிய நாடுகளுடன் அன்று தொடர்க்கம் இன்று வரை மிக நெருக்கமான நல்லுறவை பேனி வருகின்றது. அதுதான் எங்கள் கட்சியின் சரித்திரமாகும். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here