எங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ

0
202

இவ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியில், அபரிதமான பங்களிப்பை செய்துள்ள சிறுபான்மை மக்களிடம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதோடு, எங்களை அவர்கள் நம்பிக்கை கொள்வதையிட்டு பெருமிதமடைகின்றோம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…

எங்களது கடந்தகால ஆட்சியில், நாங்கள் இயன்றளவு சிறுபான்மை மக்களை திருப்தி செய்யும் வகையில் நடந்திருந்தோம். எங்களது ஆட்சியை கவிழ்க்க, சிலர் சிறுபான்மை மக்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பும் கைங்கரியங்களில் ஈடுபட்டிருந்தனர். விசேடமாக, முஸ்லிம்களை எங்களை விட்டும் திசை திருப்ப, பாரிய கலவரங்களை கூட ஏற்படுத்தி இருந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு எங்கள் தலை மீது பழியை போட்டார்கள். அவர் சொன்ன விதம் உட்பட பல விடயங்கள் எங்களுக்கு எதிராக காணப்பட்டது.

கடந்த ஜனாதித் தேர்தலில், எங்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் முற்றாக திரும்பியிருந்தனர். நாங்கள் அவர்களால் தோற்றுவிட்டோம் என்பதை விட, நாங்கள் அவர்களை சரியான விதத்தில் புரிந்துகொள்ள தவறியிருந்தமை அதிகம் கவலை தந்திருந்தது. இந்த ஆட்சி அமைந்ததன் பின்னர், எங்களை அறிந்துகொண்ட முஸ்லிம்கள் எங்களை நாடி வந்திருந்திருந்தனர்.

சிறுபான்மை மக்கள் எங்களை சந்திக்க வருவதையெல்லாம், எங்களுக்கான அங்கீகாரமாக கொள்ள முடியாது. இத் தேர்தலின் மூலம் அந்த அங்கீகரத்தை பெற்றுள்ளோம். நாங்கள் அன்று கொண்ட கவலையானது, இத் தேர்தல் மூலம் சற்று தணிந்துள்ளது.

இத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியில், சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது. பல பகுதிகளில் இருந்தும் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.சிறுபான்மை மக்கள் எங்களோடு இணைந்து வருகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அதற்கு முதலில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இதனை முதற்படியாக கொண்டு எங்கள் எதிர்கால செயற்பாடுகளையும் திடமாக அமைக்கவுள்ளோம்.

இந்த மாபெரும் வெற்றிக்களிப்பில், எங்களோடு சிறுபான்மை மக்களும் பூரணமாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எங்களை விட்டும் சிறுபான்மை மக்களை பிரிக்க மேற்கொண்ட சதிகளை, சிறுபான்மை மக்கள் அறிந்து கொண்டு. எங்களோடு பூரணமாக கை கோப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here