தொங்கு நிலையிலுள்ள சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி ஆதரவு

Spread the love

(பாரூக் ஷிஹான்) 

தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடையூறு இன்றி ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.தொங்கு நிலையில் உள்ள சபைகளில் எந்தக் கட்சிக்கும் இடையூறு இன்றி செயற்பட இடமளிக்கவும் மக்கள் நல செயற்பாடுகளின் போது ஆதரவு வழங்கவும் இருப்பதாக ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். ஈ.பி.டி.பி பொதுக் கூட்டம் கட்சி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா எம்.பியின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலளார்கள், உள்ளூராட்சி தேர்தலில் வென்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

உள்ளூராட்சி தேர்தல் முடிவு தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பெரும்பான்மையான சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ள ​போதும் இவற்றில் பல சபைகளில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகள் ஈ.பி.டி.பியின் ஆதரவை கோரியுள்ளதோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளதாக ஈ.பி.டி.பி பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மக்கள் ஆணை வழங்கியுள்ள ஆனால் தொங்கு நிலையிலுள்ள சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியமைக்க இடமளிப்பதற்கு ஈ.பி.டி.பி முடிவு செய்துள்ளது.ஒரு வாக்கினாலேனும் முன்நிலையில் உள்ள கட்சிக்கு மக்களின் ஆணைப்பிரகாரம் ஆட்சியை முன்னெடுக்க வழிவிட்டு அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் நல சேவைகளுக்கு ஆதரவு வழங்குவதென நேற்றைய விசேட கூட்டத்தில் முடிவாகியுள்ளது.

எந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ வெளியில் இருந்தோ ஆதரவு வழங்க இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து பேச்சுகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை 6 மாத காலங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க ஈ.பி.டி.பி முடிவு செய்திருப்பதாகவும் வடக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 41 சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான தமிழரசுக்கட்சி கைப்பற்றியிருந்தது.பல சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி என்பன அதிக ஆசனங்களை பெற்றிருந்தன

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*