மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபீக் ரஜாப்தீனின் பிரச்சினை

0
182

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள், தங்களது ஆதரவாளர்கள், “ஆ” “ஊ” வென கூப்பாடு போடும் விதமான, சில அதிரடி நிகழ்வுகளை நடாத்திக்காட்டும். அதனையெல்லாம் நம்பாது நேரிய வகையில் சிந்திப்பவர்களே புத்திசாலிகள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாய்ந்தமருது மகளுக்கு உள்ளூராட்சி மன்ற விடயம் சம்பந்தமாக வழங்கிய வாக்குறுதியை கூட, அமைச்சர் ஹக்கீம் தேர்தலை மையப்படுத்திய வாக்குறுதியாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மு.கா அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி இரு விடயங்களை செய்திருந்தது. ஒன்று அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல். இரண்டாவது சபீக் ராஜாப்தீன் மு.கா சம்பந்தப்பட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விளகியிருந்தமை. இத் தேர்தல் முறையினூடாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு சபையில் கூட தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை வரும் என்பதை அமைச்சர் ஹக்கீம் நன்கு உணர்ந்து, ஏற்கனவே மு.காவுக்கு பலமான ஆதரவிருந்த அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுத்து, இன்னும் பலமாக்கியிருந்தார். இருந்தாலும், அமைச்சர் ஹக்கீமின் பருப்பு அதிகமான அட்டாளைச்சேனை மக்களிடத்தில் வேகவில்லை. இதனை அவர்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

அது போன்று தான், சபீக் ராஜாப்தீனின் இராஜினாமா விடயமானதும், தேர்தலை மையப்படுத்திய ஒன்று என்பதை அறிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நேற்று மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வில், அமைச்சர் ஹக்கீமுக்கு வலது புறமாக, முன் வரிசையில் அமர்ந்துள்ளார். அமைச்சர் ஹக்கீமுக்கு இடது புறமாக பா.உ தௌபீக்கும், பிரதி அமைச்சர் பைசால் காசீமும் அமர்ந்திருந்தார்கள். இதிலிருந்தே, அமைச்சர் ஹக்கீம் சபீக் ரஜாப்தீனுக்கு வழங்கியுள்ள இடத்தை மட்டிட்டுக்கொள்ளலாம். பதவி பட்டம் முக்கியமில்லை. அவருக்கு ஒரு இடத்தில் வழங்கப்படுகின்ற மரியாதையே முக்கியமானதாகும். ஜெயலிதாவின் வேலைக்காரியே சசிகலா. இன்று அவரது நிலை..? அங்கிருந்தவர்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே! அவர்கள் என்ன செய்தார்கள்? கிழக்கு மாகாண மக்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனை எதிர்த்து கருத்து தெரிவித்த, போராளிகள் எங்கே? அவர் பதவி விலகியதும், தங்களது தலைவர் கிழக்கு மாகாண மக்களை கண்ணியப்படுத்தியதாக கூப்பாடு போட்ட போராளிகள் எங்கே?

இன்னும் தேர்தல் நடந்த சூடு கூட ஆறவில்லை. அதற்குள்லேயே அமைச்சர் ஹக்கீம் அனைத்தையும் மறந்துவிட்டார். இது தான், அவர் கிழக்கு மாகாண மக்கள் மீது கொண்டுள்ள அன்பு. சபீக் ரஜாப்தீனின் இராஜினாமாவானது தேர்தலை மையப்படுத்திய ஒன்று என்பதை அறிந்துகொள்ள, இதனை விட பெரிதான சான்றுகள் தேவையில்லை. இதுவரை அமைச்சர் ஹக்கீம், சபீக் ரஜாப்தீனின் குறித்த கருத்து தொடர்பில் எந்தவிதமான கருத்து தெரிவிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை. சபீக் ரஜாப்தீன், தானாகவே பதவி விலகி இருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயங்களாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here