பிழைதிருத்தம்!

0
289

(எம்.எம்.ஏ.ஸமட்)

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கும் சந்தர்ப்பத்தில், தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் அபார வெற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அவற்றுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுடன் தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக் முடிகிறது. தேசிய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளாக ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தத்தமது அரசியல் நடவடிக்கைகளில் காணப்படும் பிழைகளைத் திருத்திருக்கொள்ள வேண்டும் என்ற அபாய அறிவிப்பையும் தென்னிலங்கை மக்கள் வாக்களிப்பின் ஊடாக அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறுதான், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம்சார் கட்சிகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் பல்வேறு பாடங்களை அக்கட்சிகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளதுடன் அக்கட்சிகளின் செயற்பாடுகளில் பிழைதிருத்தம் செய்ய வேண்டிய அறிவிப்பையும் வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், வடக்குக், கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 38 உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும்; சில உள்ளுராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்கைளப் பெற்றுள்ளபோதிலும், அறுதிப்;பெரும்பான்மையுடன் அச்சபைகளை ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்தும், யானை, மரம், தராசு, ஏணி, இரட்டை இலை ஆகிய சின்னங்களில் போட்டியிட்டு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கனிசமான ஆசனங்களைப் பெற்றுள்ளபோதிலும்,  பல சபைகளில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியாத திருசங்கு நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதை வெளிவந்துள்ள இத்தேர்தல் முடிவுகளின் மூலமாக அறியமுடிகிறது. ஆதலால்,  தொங்கு சபைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுவருவதாகவும் அதற்கான அழைப்புக்களை விடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் ; அதிக ஆதரவைப் பெற்ற கட்சி என்ற பெறுமையுடன் அரசியல் பயணம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் அதன் கோட்டையெனக் கருதப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளின்; பிரகாரம் 5 சபைகளைக் கைப்பற்றியிருந்தது.
இருப்பினும், நடந்து முடிந்த தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் இம்மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச சபையைத் தவிர, ஏனைய எந்த சபையையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸினால் கைப்பற்ற முடியவில்லை என்பது முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் வீழ்ச்சியைக் காட்டுகின்றது.

கல்முனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், பொத்துவில், சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை ஆட்சி செய்வதற்கான அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத நிலையில் இச்சபைகளில்; தொங்கு சபையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால், அதனைச் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

அழைப்பும் நிராகரிப்பும்

இந்நிலையில்தான், கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைக்க சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவிற்கு ஆதரவு என்ற அழைப்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையினால் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிறுவாகத்தின் வழிகாட்டலுடன் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு 9 உறுப்பினர்களைப்; பெற்றுள்ள சுயேட்சைக்குழுவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அழைப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் தனி உள்ளுராட்சி மன்ற கோரிக்கை வெற்றி பெறும் வரை ஆட்சி, அதிகாரங்களுக்காக எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை என்ற முடிவை அச்சுயேட்சைக்குழு எடுத்திருப்பதாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இஸ்லாம், சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகிறது. அதற்கான வழிகாட்டல்களையும் தெளிவாக விளக்குகிறது. சகோதரத்துவத்தை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாகத் தடை செய்திருப்பதோடு, அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உணடு, எனவும் எச்சரிக்கிறது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும், ஒற்றுமையையும் வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்றாகும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதை வரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்(ஆதாரம்:முஸ்லிம்)

பிரதேச முஸ்லிம்களிடையில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அத்தோடு பல கட்சிகளாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து சின்னாபின்னமாகப் போய் அதனால் இழப்புக்களைச் சந்தித்துள்ள சமகாலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபி மொழியில் அடங்கியுள்ள எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதேயாகும் என சுட்டிக்காட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது அதற்காக சாத்வீகப் போராட்டங்களை மேற்கொண்டு அவ்வுரிமைகளைப் பெறுவதற்கு முயற்சி எடுப்பதும் அச்சமூகம்சார் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை..
கடந்த காலங்களில் சமூகங்களின் சார்பில் உருவாக்கப்பட்ட கட்சிகளின் தலைமைகள் சமூக உணர்வோடு செயற்பட்டிருக்கிறார்கள். மறைந்த தலைவர் தந்தை செல்வா, அமரர் சௌமீய மூர்த்தி தொண்டமான், மர்ஹ{ம் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற சிறுபான்மை சமூகங்களின் தலைமைகள் தங்களது சமூகங்களின் உரிமைகளுக்காக மாத்திரமின்றி, பிற சமூகங்களின் உரிமைகளுக்காவும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுத்திருக்கிறார்கள், அவற்றைப் பெறுவதற்காகச் சாத்வீகப் போராட்டங்களைக் கூட மேற்கொண்டிருக்கிறார்கள்.
இத்தலைவர்கள் அரசியலையும், அதனால் கிடைத்த பதவிகளையும் கொண்டு தங்களை வளர்த்துக்கொள்வதிலும் பார்க்க, மக்கள் நலன்களுக்காகவே அவற்றைப் பயன்படுத்தினார்கள். அதனால்தான், இன்றுவரை அத்தலைவர்கள் நினைவு கூறப்படுவது மாத்திரமின்றி தேர்தல் காலங்களில் கட்சி ரீதியாக வாக்குகளைப் பெறுவதற்கான மூலதனமாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள்;.

ஆனால், சமகால அரசியல் என்பது அதிகம் இலாபமீட்டும் தொழிலாக மாற்றப்பட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகின்ற தேர்தல் வெற்றிக்காக முதலீடு செய்யப்படும் பணத்தின் அல்லது சொத்தின் அளவை விட, அதிக இலாபத்தை அரசியல் வெற்றியின் மூலம் கிடைக்கும் பதவிகளினூடகப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பலர்; வேட்பாளர்களாக தேர்தல்களில் களமிறங்குவதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்பெற்றவர்களில் பலரின் அரசியலுக்கு முந்திய தனிநபர் அல்லது குடும்ப வாழ்வின் பொருளாதார நிலைமையையும், அரசியல் பிரவேசத்தின் பின்னரான வாழ்வின் நிலைமையையும் ஆய்வு செய்தால் அரசியல் அவதானிகளின் மேற்கூறிய கூற்றை உண்மைப்படுத்த முடியும்.

அரசியல் இலாபமீட்டக் கூடிய தொழிலாக மாறியதன் காரணத்தினால்தான் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நுட்பாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வர்த்தகத்தையும் விருத்தி செய்வதற்கு பல்வேறு வர்த்தக நுணுக்கங்கள் அல்லது தந்திரங்கள் இருப்பது போன்று அரசியல் வியாபாரத்திற்கான தந்திரமாக மக்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகளைக் கருத வேண்டியுள்ளது.

சிங்கள பெரும்பான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சித் தலைமைகளும், அதேபோல் தமிழ் மக்களைச் சார்ந்த தமிழ் கட்சிகளும் தேர்தல் காலங்களில் அக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும்; சமூகங்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது போன்றே முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைமைகளும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குறுதிகளை வழங்குகின்றன.

உரிமை அரசியலை மறந்து, அபிவிருத்தி அரசியலையும், சலுகை அரசியலையும் முதன்மைப்படுத்தி அவற்றின் மூலம் தமது நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகொள்ளும் பொருட்டு தேர்தல் காலங்களில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேவ்வேறு வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் கலாசாரம் முஸ்லிம் அரசியலில் கடந்த 17 வருடங்கலமாக குறிப்பாக கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இடம்பெற்று வருவதைக் காணலாம்.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இழந்த உரிமைகளையும், உரித்தான உரிமைகளையும் பெறுவதைத் இலக்காக் கொணடே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால். அவ்விலக்குத்; தவறிய முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பயணமானது தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் மக்களால் மிகவும் விமர்சனத்திற்குரிய கட்சியாக மாறியதன் விளைவை இத்தேர்தல் பெறுபேறுகள் புடம்போட்டிருக்கின்றன.

அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உருவான தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் தலைமைகள் அளித்த வாக்குறுதிகளை விடவும் 2000ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் பிரதேச மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு பிரதேங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகமாகும்.

அவ்வாறு அளிக்கப்பட்ட வாகுறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதுள்ளன என்பதை ஆய்வு செய்யதால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை விட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே அதிகம்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையும் ஒன்றாகும். கல்முனையின் ஏனைய பிரதேச மக்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார சிக்கல் நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகள் செய்யப்படாது அல்லது அம்மக்களது கருத்துக்களைக் கருத்திற்கொள்ளாது மாற்றுக் கட்சிகள் தமது கோட்டைக்குள் நுழைந்து விடாது தடுக்க வேண்டும் என்பதற்காக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தினைப் பெற்றுத் தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி கல்முனைப் பிராந்தியத்தில் சமூக ஒருமைப்பாட்டில்; சிக்கல்களையும், பிரதேச ஒற்றுமையையும், பல்வேறு கருத்து முரண்பாடுகளையும், போராட்டங்களையும், அவமானங்களையும் என பல வரலாற்றுக் காயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுதலிக்க முடியாது.

வாக்குறுதிகளின் விளைவுகளும் பிழைதிருத்தமும்.

சாந்தமருது அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் 9 சதுரமைல் பரப்பில் 29, 825 சனத்தொகையையும் 19, 306 வாக்காளர்களையும் கொண்டுள்ளது.
இப்பிரதேச மக்களின் நிர்வாகத் தேவையை நிறைவு செய்வதற்காக 2001ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி பிரதேச செயலகம் இம்மண்ணுக்கு கிடைத்துள்ளது. இம்மண்ணுக்கு பிரதேச செயலகம் கிடைத்து ஏறக்குறைய 17 வருடங்களாகியும் தங்களை தாங்களாகவே ஆளும் உள்ளுராட்சி மன்ற அதிகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம், அதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் ஏமாற்றங்கள்; அதை நிறைவேற்றிக்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளின் தோல்விகள்; என்பன சாய்ந்தமருது மக்களை போராட்டங்களுக்கு இழுத்துச் சென்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது

சாய்ந்தமருதூருக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் என்ற கோஷம்; கடந்த பல ஆண்டுகளாக முனனெடுக்கப்பட்டு வந்தபோதிலும், அக்கோஷமானது வீரியம் பெறவில்லை. இருப்பினும்  1994ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஷூக்கு வாக்களிக்க வேண்டுமானால் சாய்ந்தமருதூருக்கான பிரதேச சபை பெற்றுத்தர வேண்டும் அல்லது பிரதேச செயலகம் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை சாய்ந்தமருதூர் மக்களினால் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்ரபிடம் முன்வைக்கப்பட்டற்கமைய பிரதேச செயலகத்தை அஷ்ரப் பெற்றுக்கொடுத்தார்.

தனியான உள்ளராட்சி மன்றம் என்ற இலக்குக்கான கோஷம் கிடைக்கப் பெற்ற பிரதேச செயலகத்தின் மூலம் தளர்ந்திருந்த போதிலும், 2001ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் சாய்ந்தமருதூர் மக்களின் வாக்குகளைப் பெறுவதை நோக்காகக் கொண்டு தனியான உள்ளுராட்சி மன்றம் என்ற விடயம் உள்ளுர் பிரதேச அரசியல்வாதிகளினால் மூலதனப்படுத்தப்பட்டது.
இப்பிரதேச அரசியல்வாதிகள் தமது வாக்குகளுக்காக இவ்விடயத்தை தூக்கிப்பிடித்து வாக்குகளைப் பெற்று பெற்றி கண்ட பின்னர் இதனை மறந்துவிட்டு தங்களுக்குத் கிடைத்த அரசியல் நலன்களோடு அமைதியடைந்த வரலாற்று பின்னணியில்  2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் இவ்விடயம் மீண்டும் மூலதனமாக்கப்பட்டு அதற்கான வாக்குறுதி முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது.

இவ்வாறு இக்கோஷம் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்து அடங்கிப் போயிருந்த வேளையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புக்களுக்கான ஆயத்தம் கடந்த வருடம் ஆகஸ்ட்; மாதளவில் முன்னெடுக்கப்பட்டபோதுதான், இக்கோஷம் மீண்டும் வீரியம் பெற்றது.
இருப்பினும், இவ்விலக்குக்;கான நடவடிக்கைகள் இஸ்லாமிய சகோதரத்துவத்தை கேள்விக்குறியாக்கியதுடன், வழிகாட்டும் பள்ளிவாசல் நிர்வாகமும் விமர்சனங்களுக்கும், கண்டனத்துக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது.

தனியான உள்ளுராட்சி மன்றம் சாய்ந்தமருதுக்கு வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வது போன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இன ரீதியான சிந்தனையையும், முஸ்லிம் சகோதரத்துவத்துக்கிடையிலான மனக்கசப்புக்களையும், மற்றவர்கள் என்னகேடுகெட்டாலும் பருவாயில்லை தாங்கள் பிரச்சினையில்லாமல் வாழ்ந்தால்போதும் என்ற குறுகிய மனப்பாங்மையையும், வளரும் கட்டிளமைப் பருவத்தினரிடத்தில் பிரதேசவாதத்தையும் தோற்றுவித்தமை ஊர் மீது அதிதீவிர பற்றுகொண்டவர்களின் செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என நடுநிலை சிந்தனையாளர்கள் தெரிவிப்பதையும் மறுக்க முடியாது.

தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வதற்காக சாய்ந்தமருது மக்களினால் முன்னெடுக்கப்பட்ட பிரதேசம் தளுவிய ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், மாட்டு வண்டிப் பேராட்டம்; என இப்போராட்டமானது பல வடிவமெடுத்த நிலையில், சாய்ந்தமருதூரில் எந்தவொரு அரசியல் கட்சியும் தமது அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என்ற பிரகடனத்தையும் பிறப்பிக்கச் செய்து பள்ளிவாசல் நிறுவாகத்தின் வழிகாட்டலுடன் சுயேட்சைக்குழு தேர்தலில்; களமிறங்கி மொத்தமாக 13, 148 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களும் பெறப்பட்டுள்ளமை ஒற்றுமைக்குக் கிடைத்த பலன் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இருந்தபோதிலும், உரிமைப் ;போராட்டமானது இஸ்லாமிய அறநெறிகளையும் மீறி கொடும்பாவி எரித்தல், பாதை ஒழுங்கிற்கு இடையூறு விளைவித்தல், எதிர்கட்சிக்காரர்களின் சொத்துடைமைகளுக்கு சேதம் விளைவித்தல் என்று தொடாந்து அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கி கல்லெறியவும் செய்தது என்பதையும்; சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஜனநாயகத் தேசமொன்றில் அரசியல் உரிமைகளை மீறும் வகையில் பிரதேசவாரியான பிரகடனம் குற்றமெனக் கருதப்படும் நிலையில் சாய்ந்தமருதுவில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தையும் மீறி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்கியது பெரும் சவால்களுக்கு முஸ்லிம் காங்கிரஸை சாய்ந்தமருதூரில் முகம் கொடுக்கச் செய்தமை அறிந்த விடயமாகும்.

இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில்; கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற ‘மாண்புறும் சாய்ந்தமருது எழுச்சி மகாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கும் வரை கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும், அதுவரைக்கும் கல்முனை – சாய்ந்தமருது மாநகரம் எனப் பெயரிடப்படும் என்பவை அந்த வாக்குறுதிகளாகும்.
இக்கூட்டத்தில் இவ்வாக்குறுதிகளை வழங்கிய தலைவர் ஹக்கீம் வாழைச்சேனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்கிரமசிங்கவினால் 2015 பொதுத்தேர்தலின்போது சாய்ந்தமருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி குறித்து நகைச்சுவையாகப் பேசியமையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வாறான நிலையில்தான், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவு தனித்து ஆட்சி அமைப்பதற்கான பலத்தை முஸ்லிம் காங்கிரசுக்கு இழக்கச் செய்திருப்பதுடன் ஆட்சியமைப்புக்கான பகிரங்க அழைப்பை விடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சாய்ந்தமருதூரின் 6 வட்டாரங்களுக்குமாக 2, 278 வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில், கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்காது முன்னெடுக்கப்பட்ட அரசியல் பயணத்தின்; விளைவு 28 வருடங்களாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த கல்முனை மாநகரின் ஆட்சியை மீண்டும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய முடியாத துரஷ்டவசமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

பிழைகள் திருத்தப்படாது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் எதிர்காலத் தேர்தல் பெறுபேறுகள் மேலும் பாதகமான விளைவுகளை முஸ்லிம் காங்கிரஷுக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. “நிச்சயமாக அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுங்கள். அது பற்றி தீர்ப்பு நாளில் உங்களிடம் விசாரிக்கப்படும்” (அல்குர்ஆன் 17:34)
விடிவெள்ளி – 15.02.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here