மட்டக்களப்பு தொடக்கம் காரமுனை வரையான பஸ் சேவை ஆரம்பம்

0
341

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையினால் மட்டக்களப்பு தொடக்கம் மீள்குடியேற்ற கிரமமான காரமுனை வரையான பஸ் சேவை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் மீள்குடியேற்ற கிரமமான காரமுனை மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய குறித்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பேரூந்து சாலையின் முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற பஸ் சேவை ஆரம்பிப்பு நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல், இணைப்பாளர் எச்.எம்.தௌபீக், வாழைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினர் எஸ்.தயீப், சாலை உதவி முகாமையாளர்களான எஸ்.கோபாலரெட்ணம், எஸ்.உதயகுமார், ரி.சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராம பிரமுகர்கள், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் சாலை உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு இடம்பெற்றதோடு இவ்பஸ் சேவையினை ஆலங்குளம் பாதையினூடாக சென்றால் அங்குள்ள மக்களும் பயனடைவதுடன், இப்பாதையையும் சீர் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்பஸ் சேவையானது வாழைச்சேனையில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு ஓட்டமாவடி பஸ் தரிப்பிடம் சென்று பின்னர் காரமுனையை சென்றடைந்து அங்கிருந்து 7.45க்கு மட்டக்களப்பு நோக்கி செல்லும், பின்னர் மட்டக்களப்பில் இருந்து 10.15க்கு ஓட்டமாவடி மற்றும் காரமுனைக்கு 12.15க்கு வந்து 1.00 மணியளவில் காரமுனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி செல்லும் எனவும், தினமும் இரண்டு முறை பஸ் சேவை இடம்பெறும் எனவும் சாலை முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here