சமன்பாடுகள்

0
289

பொதுவாக அநேகருக்கு சில சமன்பாடுகளும் கணக்குகளும் விளங்குவதே இல்லை. ‘தெரியாக் கணியம்’ என்று பிழையான ஒன்றை கண்டுபிடித்து விட்டு துள்ளிக் குதிப்பார்கள். அதனை சமன்பாட்டில் பிரதியிட்டுப் பார்த்து விடை பிழையென தெரிந்த பிறகு, சோகமாகிக் கிடப்பார்கள். தாம் நினைத்திருந்த விடை வரவில்லை என்றதும் சிலர் கணக்கே பிழை என்று கூறுபவர்களும் உள்ளனர்.
சில வேளைகளில் விடைகாண முடியாதபோது ஒரு சமன்பாட்டில் பெறப்படும் விடையில் இருந்து இன்னுமொரு சமன்பாடு உருவாகும். சமன்பாடுகளில் தெரியாக் கணியங்களை கண்டறிவதாயின் முதலில் கணக்கு செய்யும் படிமுறைகளும் அதன் கோட்பாட்டு முறையும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமன்பாடுகள் மண்டையைக் குழப்பி, ஒரு இடத்திலேயே அசையாமல் நிறுத்தி வைத்துவிடும்.
உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பின்னரான இலங்கையின் தேசிய அரசியலிலும், முஸ்லிம் அரசியலிலும் கிட்டத்தட்ட அதுதான் நடந்து கொண்டிருப்பதாக தெரிகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டாலும் கூட, அந்த முடிவுகளை வைத்து சமன்பாட்டில் பிரதியீடு செய்து கணக்கை தீர்க்க முடியாதுள்ளது. எப்படிச் செய்து பார்த்தாலும் ஒரு தெரியாக் கணியத்திற்கு விடையை கண்டறிந்து கொள்ள முடியாத ஒரு இக்கட்டான அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

கலப்பு தேர்தல் முறை

இம்முறை உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்தனர். அப்போது புதிய தேர்தல் முறைமை தொடர்பாக கட்சி செயலாளர்கள் ஆயிரத்தெட்டு சந்தேகங்களை எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘உங்களது சந்தேகங்களுக்கு எல்லாம் நான் பதிலளிப்பேன். ஆனால் உங்களுக்கு சரியாக விளங்காது. எனவே இன்னும் ஒன்றிரண்டு தேர்தல்களை சந்தித்ததும் இது எப்பேர்ப்பட்ட தேர்தல் முறைமை என்பதை நீங்களே தானாக விளங்கிக் கொள்வீர்கள்’ என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தார். அதன் உள்ளர்;த்தம் என்னவென்பது இப்போதுதான் புலனாகின்றது.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல், இலங்கை வரலாற்றில் பல அடிப்படைகளில் முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது. முதலாவது விடயம், இந்த தேர்தல் கலப்பு முறையில் நடைபெற்றமை ஆகும். இரண்டாவது விடயம், உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு மத்திய அரசாங்கத்தின் அத்திபாரங்கள் அசைக்கப்படுகின்றமையாகும். மூன்றாவது தனித்து ஆட்சியமைப்பதில் உள்ள சிக்கலாகும். அந்த வகையில், உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒன்றுக்குப் பின்னர் எழக் கூடிய சாதாரண அரசியல் சூழ்நிலையில் இருந்தும் மாறுபட்டதொரு அரசியல் நெருக்கடி இம்முறை ஏற்பட்டிருக்கின்றது.

புதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கண்ணைமூடிக் கொண்டு கையை உயர்த்தியிருந்தாலும் அது முஸ்லிம்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டில் இருக்கின்ற அரசியல் சூழமைவைப் பொறுத்தமட்டில் எந்தவொரு நிலப்பரப்பிலும் சிறுபான்மையாக வாழ்கின்ற எந்தவொரு இனக் குழுமத்தின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த முறைமை அமையவில்லை. இரட்டை வாக்குச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் ஒருவேளை அது சாத்தியப்பட்டிருக்கலாம்.
எனவே, வட்டாரமும் விகிதாசாரமும் உள்ளங்கிய 60 இற்கு 40 என்ற கலப்பு தேர்தல் முறைமை சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்களை வீழ்ச்சியடையச் செய்யும் என்று கூறப்பட்டது. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் பலத்தை சிதறடிக்க வேண்டும் என்பதற்காகவே பெருந்தேசியக் கட்சிகள் இப்படியான தேர்தல் முறைமை ஒன்றை கொண்டு வந்தது என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. ஆனால், அவர்கள் கொண்டுவந்த தேர்தல் முறைமையின் கீழ் வெளியான முடிவுகள், அவர்களையே பெரும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.

மஹிந்தவின் முன்னேற்றம்

தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சி 239 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியிருக்கின்றது. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலம் இலங்கையின் ஆட்சியை பகிர்ந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதைவிடவும் மிகக் குறைவான சபைகளையே வெற்றி கொண்டுள்ளன. இது ஒரு சாதாரண விடயமல்ல.
பொதுஜன பெரமுணவுக்கு வாக்களித்த மக்கள் கடுமையான சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள் என்று கருதுவதை விட அதை வேறு மாதிரியாக நோக்கலாம். குறிப்பாக, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதாலேயே ஐ.தே.கவுக்கு வாக்குகள் குறைந்ததாக காமடித்தனமாக பேசும் அரசியல்வாதிகள், வேறு கோணத்தில் இதற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய தவறிவிட்டனர்.
உண்மையில், சிங்கள மக்கள் ஊழலை விரும்பாததன் காரணமாகவே முன்னைய ஆட்சியாளருக்கு எதிராக வாக்களித்தார்கள். இப்போது நல்லாட்சியிலும், பிணைமுறி ஊடாக பெருந்தொகை நிதிமோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அபிப்பிராயம் பரவலாக காணப்படுகின்றது. சுழற்றப்படுகின்ற கத்திகளும் யாரையும் பதம்பார்த்த மாதிரி தெரியவில்லை. எனவே அவர்கள் நல்லாட்சியாளர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல நினைத்திருக்கலாம்.
அதேபோன்று, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கை மஹிந்த அணியினரால் சிங்கள மக்கள் மத்தியில் நன்றாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது. நாங்கள் ‘போராடி மீட்ட நாட்டை இந்த அரசாங்கம் பிரித்துக் கொடுக்கப் பொகின்றார்கள்’ என்ற எதிர்த்தரப்பின் பிரசாரங்கள் கடுமையாக வேலை செய்திருக்கும். இடைக்கால அறிக்கையில் உள்ள சொல்லாடல்கள் சிங்கள மக்களின் சந்தேகங்களுக்கு வலுச் சேர்த்திருக்கும் என்றே கருத முடிகின்றது.

சிறுபான்மை மாற்றம்

சமகாலத்தில், ஆளுந்தரப்பிற்கு சார்பான நிலைப்பாடுடைய சிறுபான்மையின வாக்காளர் தளத்திலும் கடந்த 2 வருடங்களுக்குள் மாறுதல்கள் உருவாகியிருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் நேரடியாக பெருந்தேசியக் கட்சிகளிற்கு கிடைப்பதில்லை என்றாலும், தமிழ் கூட்டமைப்பின் கூடைக்குள் காலகாலமாக விழுந்து கொண்டிருந்த வாக்குகள் இப்போது வேறு வேறு சிறு கூடைகளுக்குள்ளும் விழுந்து, சிதறிப் போயிருக்கின்றமை கவனிப்பிற்குரியது.
மறுபுறத்தில், முஸ்லிம்கள் எதற்காக நல்லாட்சிக்கு ஆதரவளித்தார்களோ அதனை ஆட்சியாளர்கள் செய்து காட்டவில்லை. இனவாதிகளை கூட்டில் பிடித்து அடைப்போம் என்றவர்கள் ஓரளவுக்கு இனவாதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அறிக்கைகள் இன்றும் வெளியாகிக் கொண்டிடுதான் இருக்கின்றன என்பது, இந்த தேர்தலில் சில முஸ்லிம் வாக்காளர்கள் எடுத்த முடிவுகளுக்கு காரணமாகியிருக்கலாம்.

மிக முக்கியமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் வாக்குச் சேகரித்துக் கொடுக்கும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாக்குவங்கிகள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக ஆளும் கட்சிக்கு வாக்குச் சேகரிக்கும் முகவர்களாக செயற்படுகின்ற முஸ்லிம் கட்சிகளின் பழைய உத்திகள் இம்முறை வேலை செய்யவில்லை. கட்சி கீதங்களை ஒலிக்கவிட்டும், வெற்று வீராப்பு பேச்சுக்களை பேசியும் முஸ்லிம்களின் வாக்குகளை சுருட்டும் தந்திரம் பலிக்கவில்லை. இந்தக் காரணத்தினாலும் பிரதான தேசியக் கட்சிகளின் கூடைகள் நிரம்பவில்லை என்பதை மறந்து விடக் கூடாது.
உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு ஆட்சியை மாற்றுவது சாத்தியமல்ல என்றாலும் கூட, தேர்தல் முடிவுகளுக்கு புறம்பாக இருக்கின்ற வேறு சில நிலைவரங்களையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மத்தியில் ஒரு ஆட்சிமாற்றம் ஒன்றை மேற்கொள்ள பகீதரப் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய நிலைவரப்படி ஆட்சி மாற்றம் ‘வரும் ஆனா வராது’ என்றுதான் சொல்ல முடிகின்றது.

ஆடி அடங்கியோர்

எனவே, புதிய தேர்தல் முறைமையின் கீழ் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலால் தேசிய அரசியலில் இவ்வாறான ஒரு ருத்ரதாண்டவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒரு புதுவித அனுபவத்தை இத் தேர்தல் முறைமை ஊடாக பெற்றிருக்கின்றன. இந்த தேர்தல் முறையால் எவ்வாறு மத்தியில் நல்லாட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியாதிருக்கின்றதோ அதுபோலவே, பிரதேச ரீதியாக சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முடியாத ஒரு பெரும் அவதிக்குள் மாட்டிக் கொண்டுள்ளன.
இதனால் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணம் புதிய தேர்தல் முறைமை பற்றிய விளக்கமின்மையாகும். புதிய தேர்தல் முறைமையை சரி கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அதுபற்றி முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. அரசாங்கமோ பொறுப்புவாய்ந்த தரப்பினரோ ஐயமற புதிய தேர்தல் முறைமையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கிடையில் உள்ளுராட்சித் தேர்தல் வந்து விட்டது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பெருமளவிலான வேட்பாளர்களுக்கு கூட இந்த வட்டார – விகிதாசார சமன்பாடு விளங்கியிருக்கவில்லை என்பது, தேர்தல் முடிவு வெளியான பிறகு அவர்களது நடவடிக்கைகளில் தெரிந்தது.

இம்முறை வாக்கெடுப்பு முடிவடைந்து இரண்டரை மணித்தியாலங்களிலேயே உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகள் வட்டார ரீதியாக வெளியாக ஆரம்பித்ததும் வட்டாரங்களை வென்றவர்கள் துள்ளிக் குதித்தார்கள். பட்டாசு கொழுத்தினார்கள். எதிர்த்தரப்பை நையாண்டி செய்தார்கள். அவர்களது பந்தாக்களை பார்த்த போது புரிந்தது, இந்த 60இற்கு 40 சமன்பாடு அவர்களுக்கு விடிந்தால்தான் விளங்கும் என்று.
மறுநாள் விடிந்த பொழுது வட்டார இறுதி முடிவுகளோடு விகிதாசார முடிவுகளும் வெளியானதுடன் ஒவ்வொரு கட்சியும் பெற்றுக் கொண்ட ஆசன எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டது. முன்னர் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டாடியவர்கள், எதிர்தரப்பும் கணிசமான ஆசனங்களைப் பெற்றிருக்கின்றதே என்பதை பார்த்து திகைத்துப் போனார்கள். வட்டாரங்களை வென்றிருந்த போதும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். உண்மையில், புதிய தேர்தல் முறைமை மற்றும் உறுப்பினர் கணிப்பீட்டு சமன்பாடு என்பன பற்றி முன்னமே அறிந்திருந்தால் இந்நிலைமைகள் ஏற்படாது தவிர்த்திருக்க முடியும்.

உணர்த்திய செய்திகள்

இந்த தேர்தல் முடிவுகள் முஸ்லிம் அரசியலில் சிலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்கள் வாழ்கின்ற பெரும்பான்மையான பிரதேசங்களில் தனித்து ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட சில இடங்கள் தவிர பெரும்பாலான சபைகளிலும் இந்நிலைமை காணப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட கட்சி அதிகப்படியான வாக்குகள் அதிகமாகப் பெற்று, பாரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்றைய கட்சி ஆகவும் குறைந்த வாக்குகளைப் பெற்றால் மாத்திரமே இந்த தேர்தல் முறைமையில் அக்கட்சி அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்க முடியும். அதைவிடுத்து சிறுசிறு வாக்கு வித்தியாசத்தில் ஒரு கட்சி அதிகமான வட்டாரங்களை வென்றாலும், விகிதாசார ஒதுக்கீட்டின் ஊடாக அதற்கு சமமான வாக்குகளை மற்றைய அணி பெற்றுக்கொள்ளும். இதனால் கூட்டு ஆட்சி அல்லது தொங்கு ஆட்சியையே நிறுவ வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

அடுத்த விடயம், வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்தும் குறைந்தும் இருந்தாலும், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்பிக்களின் நேரடிக் கவனிப்பின் கீழ் இருந்த உள்ளுராட்சி சபைகளில் பெரும்பான்மைப் பலத்துடனான வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. கிண்ணியா, கல்முனை, நிந்தவூர், ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை, முசலி, சம்மாந்துறை போன்ற உள்ளுராட்சி சபைகள் இதற்கு சில பதச்சோறுகளாகும். இதற்கான காரணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ_ம் கண்டறிய வேண்டியுள்ளது.

இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் நாடுதழுவிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் 159 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது (இந்த எண்ணிக்கையை சரியாக உறுதிப்படுத்த வேண்டியுள்ளது). அது ஒருபுறமிருக்க, கிழக்கு மாகாணத்தில் மேலும் பல களநிலை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, அதிகாரமில்லாதிருந்த ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி இரு சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் பலத்தை பெற்றிருக்கின்றது.
அதேபோல், கிழக்கில் சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் சற்று குறைவடைந்திருப்பதாக தெரிகின்றது. நிந்தவூரிலும் கல்முனையிலும் பிரதியமைச்சர்கள் இருந்தும் சம்மாந்துறையில் ஒரு எம்.பி. இருந்தும் அந்தந்த சபைகளை தனித்து வெல்ல முடியாமல் போயிருக்கின்றது. அவசரமாக அட்டாளைச்சேனைக்கு ஒரு எம்.பி.யை கொடுத்த போதும் 11ஆயிரம் வாக்குகள் மு.கா.வுக்கு (ஐ.தே.கவுக்கு) எதிராக விழுந்துள்ளதுடன் தனியே ஆட்சியமைக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்ததையும் மீறி கணிசமான மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சாய்ந்தமருது விடயத்தில் மு.கா. தலைவர் நடந்து கொண்ட விதம், மூதூர், அட்டாளைச்சேனை, கல்முனையில் அவர் ஆற்றிய காத்திரமற்ற உரைகள் போன்ற விடயங்கள், அக்கட்சிக்கு வாக்களிக்க இருந்தவர்கள் தமது முடிவுகளை வாபஸ்பெற காரணமாகி இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாகவும் மக்கள் காங்கிரஸாகவும் ஐ.தேக.வுடன் இணைந்தும் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் கிழக்கில் அதிகரித்துள்ளதாக தெரிகின்றது. இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் 1 உறுப்பினரை மட்டும் பெற்றிருந்த இக்கட்சிக்கு இம்முறை இம்மாவட்டத்தில் 39 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். பிரதியமைச்சர் இருக்கின்ற ஓட்டமாவடியிலும், அமைச்சர் இருக்கின்ற முசலியிலும் எம்.பி. இருக்கின்ற கிண்ணியாவிலும் தனித்து ஆட்சியமைப்பதில் மக்கள் காங்கிரஸிற்கு சிக்கல் இருந்தாலும் பொதுவாக வடக்கு, கிழக்கிலும் மலையகத்தின் சில பிரதேசங்களிலும் முன்னரை விட அதிகமான உறுப்பினர்களை இக்கட்சி பெற்றிருக்கின்றது என்பது கவனிப்பிற்குரியது.
புள்ளிவிபரங்கள் இப்படி இருந்தாலும், இப்புதிய தேர்தல் முறைமையால் அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டம் உள்ளடங்கலாக பல மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் எந்தவொரு தனிக்கட்சியும் ஆட்சியமைக்க முடியாதிருக்கின்றமை பெரும் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது. இவ்வாறான சபைகளில் இன்னுமொரு கட்சியுடன் சேர்ந்து கூட்டாட்சியை நிறுவுவதா? அல்லது ஒரு தொங்கு ஆட்சியை நடத்துவதா என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிரதான பெருந்தேசியக் கட்சிகளைப் போல முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என எல்லா முஸ்லிம் கட்சிகளுக்கும் ஆட்சியமைக்கும் கனவு இருக்கின்றது. அந்த வகையில், யாருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் நாட்டின் கூட்டாட்சியே ஆட்டம் கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில் பிரதேசங்களிலும் கூட்டாட்சி அமைப்பதாயின் அதற்குமுன் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டுமென தோன்றுகின்றது. அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் தனித்து ஆட்சியை நிறுவும் போது ஏற்படுகின்ற ஸ்திரத்தன்மை கூட்டாட்சியில் நடைமுறைச் சாத்தியமற்றதாக இருப்பதையே காண்கின்றோம்.
அதுபோல உள்ளுராட்சி சபையிலும் தனிப்பலம் இன்றி இன்னுமொரு கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால், அதன்மூலம் ‘உள்ளுராட்சி சபையில் ஆட்சியமைத்தோம’; என்று சந்தோசமாக மார்தட்டிக் கொண்டாலும் அந்த சந்தோசம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் எனத் தெரியாது. எனவே எல்லாவற்றையும் யோசித்தே முஸ்லிம் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை நிறுவ வேண்டியிருக்கின்றது.
‘செய்முறை’ தெரியாது என்பதற்காக, ‘சமன்பாடு’ பிழை எனக் கூறக்கூடாது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 18.02.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here