யாருடன் சேர்ந்தால் இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்க முடியுமோ அவர்களுடன் சேரக் கூடிய வாய்ப்பு உள்ளது – ஹாறூன் ஸஹ்வி

0
183

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) & எம்.ஐ.அஸ்பாக்   

இலஞ்ச ஊழற்ற சபையை யார் உருவாக்குவார்களோ அவர்களின் பக்கம் நாம் சேர்ந்து ஆட்சியமைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றோம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையில் போட்டியிட்டு விகிதார பட்டியல் மூலம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டமை தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஓட்டமாவடி பிரதேச சபையில் ஒரு ஆசனமும், வாழைச்சேனை பிரதேச சபையில் இரண்டு ஆசனங்களுமாக விகிதாசார பட்டியல் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச சபையில் எந்தக்கட்சி ஆட்சியமைக்கப் போகின்ற விடயம் தற்போது பேச்சு பொருளாக காணப்படுகின்றது.

யாருடன் சேர்ந்தால் இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்க முடியுமோ அவர்களுடன் சேரக் கூடிய வாய்ப்பு உள்ளது. இலங்கையில் இதுவரை காலமும் இலஞ்ச ஊழலுடன் கூடிய பிரதேச சபை ஆட்சிதான் நடைபெற்றது என்று அரசியல் உயர் பீடங்கள் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஏனெனில் தேர்தலின் போது இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்குவோம் என்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்குவோம் என்று கூறி மக்களிடத்தில் வாக்குகளை பெற்று இங்கு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் யாருடன் இணைந்து கொண்டால் கல்குடாத் தொகுதியை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது பற்றியும், இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை வழி நடத்தலாம் என்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

கல்குடாத் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யாருடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்ற உறுதிப்பாட்டை இதுவரையும் வழங்கவில்லை. ஆனால் சில கட்சிகளின் ஆதரவாளர்கள் பொய்யான பிரச்சாரங்களை இணையத்தளங்கள் மூலம் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

கல்குடாப் தொகுதியில் இலஞ்ச ஊழற்ற ஆட்சி மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாங்கள் செயற்பட இருக்கின்றோம். தமிழ் முஸ்லிம் பகுதியிலுள்ள எமது கட்சியின் அமைப்பாளர்களுடன் பேசி தீர்மானம் எடுப்போம்.

அந்த வகையில் கல்குடாத் தொகுதி அபிவிருத்தி, போதைப் பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை மீட்க எவ்வாறு வேலைவாய்ப்பு வழங்க முடியும். எமது இனத்தில் இட ஒதுக்கீடு, உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் எவ்வாறு கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். வேலைகளை விற்கின்ற கலாச்சாரங்களை ஒழிக்க வேண்டும் என்று நடவடிக்கை மேற்கொள்கின்றோம்.

தேர்தல் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எந்தவித இலஞ்சங்களும் வழங்காமல் தேர்தலை நாங்கள் நடாத்தி உள்ளோம். அதன் மூலம் கிடைத்த வெற்றிதான் ஓட்டமாவடி பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது. அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் எங்களிடமும், கட்சி தலைமைப் பீடத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

ஆனால் இவ்விடயமாக நாங்கள் எந்தவித பதிலும் இதுவரை வழங்கவில்லை. ஆனால் எதிர்வரும் 25ம் திகதியளவில் எந்தக் கட்சியினருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் தகவல்களை வழங்குவோம் என்றார்.

இவ் ஊடக சந்திப்பில் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ்.அஸ்வர், இணைப்பாளர் ஏ.எல்.எம்.சனூஸ், மத்திய குழு செயலாளர் பாறூக் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here