சிறிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல – எம். எச். ஏ. ஹலீம்

0
279

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எட்டு இலட்சம் வாக்குகளால் தோல்வியடைந்துள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 57 இலட்சம் வாக்குகளைப் பெற்றவர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 41 இலட்சம் வாக்குகளையே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. உண்மையிலேயே அவருக்கு இருந்த செல்வாக்கு பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அரசாங்கம் தோற்கடிக்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கிடைத்த மக்கள் ஆணை மேலும் பலமடைந்துள்ளது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

சிறிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இதற்காக மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் இன்னுமொரு தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறும் எவையும் நடக்கப் போவதில்லை. ஊழல் மோசடியில்லாமல் நாட்டை முன்னேற்றம் வேண்டும் என்றால் நல்லாட்சி அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் நாங்கள் விட்ட குறையை நிவர்த்தி செய்து நேர்த்தியான அரசியல் பயணத்தை நோக்கிச் செல்ல உறுதி பூண்டுள்ளோம்.
கடந்த 25 வருடங்களாக பொது ஜன ஐக்கிய சுதந்திர முன்னணியனி கைவசம் இருந்த அக்குரணை பிரதேச சபையின் ஆட்சியை இம்முறை நாங்கள் கைப்பற்றியிருக்கின்றோம். இந்த வெற்றிக்காக வாக்களித்த அக்குறணைப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இதில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளை பூஜாப்பிட்டிய பிரதேச சபையில் பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட இரு கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆசனம் சரி சமானாக இருக்கின்றது. ஹரிஸ்பத்துவ பிரதேச சபை எங்களை விட்டுச் சென்றாலும் அப்பிரதேசத்து மக்கள் எதிர்பார்த்து நிற்கின்ற அபிவிருத்திப் பணிகளை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கின்றோம்.

அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்திற்காக இந்நாட்டு மக்களிடத்தில் இனவாதத்தை உருவாக்கி ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வேற்றி காண முயற்சிக்கின்றனர். இத்தகையவர்களை நிராகரித்து எதிர்காலத்தில மக்கள் எதிர்பார்த்து நிற்கின்ற நல்லாட்சியை உத்வேகத்துடன் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here