இருக்கும் மதிப்பையும் இழக்கப்போகும் அரசு

0
264

நல்லாட்சி அரசென அனைவராலும் அழைக்கப்பட்ட அரசு, தற்போது என்ன செய்வதெனத் தெரியாமல் நடு வீதியில் நின்று, திரு திருவென முழித்துக் கொண்டிருக்கின்றது. நல்லாட்சி செய்திருந்தால், ஏன் இந்த நிலை என மக்கள் கேட்கும் கேள்விகள் என் காதில் விழாமலுமில்லை. ஒரு ஜனாதிபதி நல்லாட்சி செய்யக் கருதினாலும், அவரால் அவ்வளவு இலகுவில் நல்லாட்சி செய்துவிட முடியாது. அவ்வாறு தான் நாட்டின் நிலை காணப்படுகிறது. ஒரு அரசை நடத்திச் செல்ல பாராளுமன்றத்தின் ஆதரவு தேவை. குறைந்தது 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இன்றைய நிலையில் இவ்வாறான ஆதரவை பெறுவது சாதாரண வேலை அல்ல. இதனை பெற சில தவறான கொள்கை உடையவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படியானால், எப்படி நல்லாட்சி செய்ய முடியும்? அப்படி நல்லாட்சி செய்ய வேண்டுமாக இருந்தால், பல ஆட்சிக்கால நீண்ட திட்டமிடல்களுடன் பயணிக்க வேண்டும். அவ்வாறல்லாமல் ஜனாதிபதி மாத்திரம் சிறந்தவராக இருந்து நாட்டை பூரணமாக நல் வழியில் கொண்டு செல்ல முடியாது.

இப்போது இலங்கை நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலை காணப்படுகிறது. இதற்கு அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினர் பெரும் வெற்றியை தனதாக்கியதோடு, ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியை சந்தித்திருந்தமையை பிரதான காரணமாக சுட்டிக்காட்டலாம். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவின் பின்னால் சென்றால், சு.கவில் உள்ளவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை, இத் தேர்தலோடு அதிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் உணர்ந்திருந்தனர். அவர்களின் அச்சத்திலுள்ள நியாயத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன ஏற்காமலுமிருக்க முடியாது. இதன் பிறகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சென்றாக வேண்டும். அவ்வாறு செல்கின்ற போதே, தன்னை சுற்றி உள்ள ஓரிரு விசுவாசிகளையாவது அவரால் பாதுகாத்துக்கொள்ள முடியும். அவர், தனது விசுவாசியாக நம்பியிருந்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க போன்றோர் முழுமையான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களாக மாறி, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியாக சுகாவின் தலைவரான மைத்திரிப்பால சிறிசேன உள்ளதால், அதனை சாதகமாக கொண்டு, சு.கவானது ஆட்சியை கைப்பற்றிவோம் என்ற கோசத்தை எழுப்பியிருந்தது. தற்போதைய சூழ் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சு.கவுக்கு ஆதரவளித்தாலும், ஆட்சியை கைப்பற்றுமளவு பாராளுமன்ற ஆசனங்களை பெற முடியாது. இன்றைய பாராளுமன்றத்தில் ஐ.தே.மு 105 ஆசனங்களையும் (இதில் மு.க 7, அ.இ.ம.கா 5 ), சு.க 95 ஆசனங்களையும், த.தே.கூ18 ஆசனங்களையும், ஜே.வி.பி 6 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி 1 ஆசனத்தையும், சுயாதீனமாக 2 ( விஜயதாஸ ராஜபக்ஸ, அத்துரலிய ரத்ன தேரர் ) ஆசனங்களையும் கொண்டுள்ளது. இதில் சு.க தனித்து ஆட்சியமைக்க 18 உறுப்பினர்கள் தேவை. இது ஒரு பெருந் தொகை. ஜே.வி.பி, த.தே.கூ ஒரு போதும் சு.கவை ஆதரிக்க வாய்ப்பில்லை. இந்த கூட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருப்பதே அவர்கள் ஒட்டாமைக்கான காரணம். இம்முறை அதிகமான தமிழ் மக்கள் சு.கவுக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.தே.மு தவிர்ந்து இவர்களால் இரு சுயாதீன உறுப்பினர்களில் விஜயதாஸ ராஜபக்ஸவின் ஆதரவையும் ஈ.பி.டி.பியின் ஆதரவையும் பெற முடியும். இது தவிர்ந்து 16 உறுப்பினர்களில் ஐ.தே.முயில் இருந்தே பெற வேண்டும். இதில் அ.இ.ம.கா சற்று சு.கவின் பக்கம் சார்ந்த கட்சி. சு.க திடமாக ஆட்சியமைக்கும் நிலை இருந்தால், அது மாறலாம். அவ்வாறு மாறினாலும், 11 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். இப்போதைய நிலையில் அர்ஜுன ரணதுங்க போன்ற ஐ.தே.கவில் இருந்து ஓரிரு உறுப்பினர்கள் ஐ.தே.கவின் மீது அதிருப்தியுற்றுள்ள நிலை காணப்படுகிறது. இருந்த போதிலும், அவ் எண்ணிக்கை ஒரு போதும் ஆட்சியமைக்க போதுமானதாக இராது. சு.க பாராளுமன்ற பலத்தை நிரூபிக்க முயன்று, மூக்கை உடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாராளுமன்ற நிலையில் ஐ.தே.முவிற்கு 105 ஆசனங்கள் உள்ளன. அதற்கு வெறுமனே 8 ஆசனங்களே ஆட்சியமைக்க போதுமானதாகும். அதில் இருந்து சு.கவிற்கு ஓரிரு உறுப்பினர்கள் கழன்றாலும், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தே.தே.கூவிடம் பாராளுமன்ற ஆசனம் உள்ளது. இங்குள்ள பிரச்சினை த.தே.கூவின் மக்கள் பலம் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அவர்களால் ஒரே ஒரு சபையில் தான் ஆட்சியமைக்க கூடியளவு ஆசனங்கள் கிடைத்துள்ளது. இனி அவர்களுக்கு விளையாட நேரமில்லை. தமிழ் மக்களது வாய்க்கும் ஏதாவது சுவைக்க போட்டாக வேண்டும். இதற்கு உயர்ந்தளவு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயலும். இப்போது இந்த ஆட்சிக்குள்ள மிகப் பெரும் பலமே தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான். அது கை விரித்தால், அனைத்தும் அம்பேல்..! அவர்களுக்கு ஏதாவது ஒன்று சாத்தியமானாலும், அது முன்னாள் ஜனாதிபதிக்கு பேரின மக்கள் ஆதரவை அதிகரிக்கச் செய்யும். இக் கட்சியில் உள்ள மு.காவுக்கு அ.இ.ம.காவும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் கட்சிகள். ஏதாவது ஒரு விடயத்தில் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தினால், மற்றைய கட்சி பறந்துவிடும். இவ்வாறான பிரச்சினை ஏற்படாமல் நீண்ட நாள் வைத்திருப்பது கடினம்.

இந்த ஸ்திரமற்ற அரசின் இயலாமையை பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களுக்கு இயலுமானவரை சாதித்து கொள்ள முயல்வார்கள். யாரையும் தட்டிக்கேட்க முடியாது. அதட்டினால் மறு பக்கம் பாய்ந்து விடுவார்கள். நாடு கெட்டு குட்டிச் சுவராகிவிடும். “ யானை சேற்றில் புதையுண்டால், சிறு காகமும் குட்டும் செயல் காண்பீர்” என ஓ.எல்லில் படித்த வரிகள் நியாபகம் வருகிறது. அனைவரும் டிமான்ட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அல்லது நாட்டின் நலனை பார்ப்பதா? இப்படியான பிரச்சினைகளை பார்ப்பதா? இரண்டையும் பார்க்க முடியாமல் இவ்வரசு திண்டாடும். அதற்குள் தேர்தல் வந்துவிடும். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினருக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிடும். இந் நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி அணியினர் இந் நாட்டை கைப்பற்றுவாராக இருந்தால், அவர்களாலும் ஒரு ஸ்திரத்தன்மையுடைய ஆட்சியை செய்ய முடியாது. அவர் இந் நேரத்தில் ஏதோ ஒரு வழியில் ஆட்சியை கைப்பற்றினால், அவரது செல்வாக்கு குறைவதற்கான வாய்ப்பே அதிகம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி மனம் வீசிக்கொண்டிருக்கும் இந் நேரத்தில், ஏதாவது ஒரு தேர்தல் வருமாக இருந்தால், அது ஐக்கிய தேசிய கட்சிக்கும் பெரும் பாதகமாக அமையும். இருந்தாலும், பாராளுமன்றத்தை இயங்கவிடாமல் தடுத்து, பாராளுமன்றத்தை கலைப்பதே, ஐக்கிய தேசிய கட்சி, இருக்கும் தங்களது கொஞ்ச நஞ்ச ஆதரவாளர்களையாவது தக்க வைத்துக்கொள்வதற்கான வழியாகும். இந் நேரம் ஐக்கிய தேசிய கட்சியானது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கும். அது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரும் ஆரம்பித்திருப்பார். இதில் எத்தனை தலைகள் உருளப்போகின்றனவோ தெரியவில்லை. இலங்கை மக்கள் மிகவும் அவதானமாக எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2018-02-23

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here