ஹக்கீமுக்கு குறைந்தது, றிஷாதுக்கு கூடியது

0
237

( ஹபீல் எம்.சுஹைர் )

இலங்கை முஸ்லிம் அரசியலில் அமைச்சர் றிஷாதுக்கும், அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான போட்டி உச்ச நிலையை அடைந்துள்ளது. இத் தேர்தலோடு அமைச்சர் ஹக்கீமின் அரசியல் அரட்டை முடிவுக்கு கொண்டு வரப்படும் நிலை இருந்தும், அதனை அமைச்சர் றிஷாத் தவற விட்டுவிட்டார் என்றே கூற வேண்டும். இருந்த போதிலும், அவர் எங்கும் தோல்வியை சந்திக்கவில்லை. மு.காவுக்கு நிகரான சக்தியாக மாறியுள்ளார். மு.காவின் இதயமான அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிஷாதை போன்று, அமைச்சர் அதாவுல்லாஹ் பலமான அமைச்சராகவும், ஒரு கட்சியை வழி நடாத்திச் சென்ற போதும், அவரால் அக்கரைப்பற்றை தாண்ட முடியவில்லை. இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கணிசமான உறுப்பினர்களை மு.கா பெற்றிருந்தது. இது இனியும் ஹக்கீம் வழுக்கையை தடவிக்கொண்டு இருக்க முடியாது என்ற செய்தியை கூறுகிறது.

நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய ஊர்களில், மு.கா பெற்ற எண்ணிக்கையான ஆசனங்களையும் பெற்றிருந்தது. நிந்தவூரில் பிரதி அமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினரை எதிர்த்தே பெற்றிருந்தது. சம்மாந்துறையில் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் இருக்கத்தக்க நிலையில் இந்த வெற்றியை பெற்றுள்ளது. இது தவிர்ந்து அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதி அமைச்சும், பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மு.காவுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றுள்ளமையை, அது வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். நான் இவற்றில் மூலம் குறிப்பிட வருவது, அமைச்சர் றிஷாத் மு.காவினால் அழிக்க முடியாத பலமான நிலையை அடைந்துவிட்டார் என்பதையேயாகும்.

இது ஹக்கீம் காங்கிரசினரின் தூக்கத்தை தொலைக்கச் செய்துள்ளது. அமைச்சர் ஹக்கீமின் கனவிலும் அமைச்சர் றிஷாதே வந்துகொண்டிருப்பார். இப்போது அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாதை வீழ்த்த வேண்டும். அது கனவிலும் சாத்தியமில்லை. அவர்களுக்குள்ள சந்தோசம் என்ன தெரியுமா? அமைச்சர் றிஷாத் நாளை கைது செய்யப்படுவார் போன்ற செய்தியை பரப்புவார்கள். ஏதாவது அமைச்சரவை மாற்றம் வந்துவிட்டால், அமைச்சர் றிஷாதின் அமைச்சு மாறப்போகின்றது என்ற செய்தியை பரப்புவார்கள். கடந்த முறைக்கு முந்திய முறை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் றிஷாதுக்கு தபால் அமைச்சு கிடைக்கப்போவதாக கூறியிருந்தார்கள். இம்முறை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஏதோ ஒரு பலம்குன்றிய அமைச்சு கிடைக்கப்போவதாக கூறியிருந்தார்கள். இப்படி கூறுவதில் ஹக்கீம் காங்கிரசினருக்கு ஒரு சந்தோசம். அண்மைக்காலமாக அரசியலில் எந்தவிதமான சந்தோசங்களையும் பெறாத மு.காவினருக்கு, இதுவே ஒரு தற்காலிக சந்தோசம். இவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானேயாக வேண்டும்.

இதில் சில அரசியல் காய்நகர்த்தல்களும் உள்ளன. மு.காவின் போராளிகளுக்கு இவ்வாறான தற்காலிக சந்தோசங்களையாவது வழங்காது போனால், அவர்களின் கட்சியுடனான பிணைப்பு அறுந்துவிடும். அவர்களை மனோ நிலை ரீதியாக தைரியப்படுத்தலுக்கு, இது உதவும் . இம்முறை தப்பித்து கொண்டார், அடுத்த முறை மாட்டுவார் என்று ஹக்கீம் காங்கிரசினர் மனதை தைரியப்படுத்திக்கொள்வார்கள். இவ்வாறான செய்திகளை அமைச்சர் ஹக்கீமின் ஊடகப்பிரிவுக்கு நெருக்கமானவர்களும் பகிர்வதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயமானது அமைச்சர் ஹக்கீம் அணியினரால் திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்படுவதையும், அவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் அறிந்துகொள்ள முடிகிறது. அமைச்சர் ஹக்கீமை நம்பி அமைச்சர் றிஷாதை, அவருக்குள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு இழந்துகொள்ள மாட்டார்கள்.

அமைச்சர் றிஷாதுக்குள்ள பெரும் பலம் அவரது அமைச்சேயாகும். அதனை பிடுங்கினால், தனக்குள்ள சவாலின் ஒரு சிறு சதவீதம் குறைந்துவிடும். அதற்கு அவர் முயற்சித்திருப்பார். பாவம் அமைச்சர் ஹக்கீம், அவரிடம் மாயக்கல்லி மலை சிலை அகற்றல், கல்முனை வேலை வாய்ப்பு பணியகத்தை மீள கொண்டுவரல் போன்ற வாக்குறுதிகளைப் போன்று, அமைச்சர் றிஷாதின் அமைச்சு பறி போகப்போகிறதென மகிழ்ந்திருப்பார். இறுதியில் வழமையைப் போன்று ஏமாற்றமே எஞ்சியிருக்கும், ஆனால், கேட்டால் சாணக்கியம் என்பார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவரது மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போன்று அவரது விசேட பாதுகாப்பு இன்று நீக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் தேசிய கட்சிகளிடம் அமைச்சர் ஹக்கீம் செல்லாக்காசாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இப்போதெல்லாம் தேசிய கட்சிகள், எதிர்காலம் அமைச்சர் ரிஷாதுக்கே உள்ளது என்பதை அறிந்து அமைச்சர் றிஷாதை, தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்சி எடுப்பதாக தேசிய அரசியால் தகவல்கள் கூறுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here