இன்று நாம் எந்தளவு மடையர்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம்..!

0
262

இலங்கை அரசு ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் இருப்பது யாவரும் அறிந்த விடயமே. இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதனையும் செய்யக்கூடிய நிலையில் தேசிய கட்சிகள் உள்ளன. அவற்றை எமது கட்சிகள் தூய சிந்தனையுடன் பயன்படுத்துகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். நேற்று அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அது இன்றும் தணிந்தபாடில்லை. எமக்குள்ள பாராளுமன்ற பலத்தை நிரூபித்தால், ஒரு வினாடிக்குள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும். இலங்கை பாதுகாப்பு படையினரின் வேலையே பள்ளிவாயல்களை பாதுக்கப்பதாகவே அமையும். நான் இங்கு எமக்கு என்று குறிப்பிடுவது முஸ்லிம்களது பாராளுமன்ற பலத்தையேயாகும்.

இந் நேரத்தில், தமிழர்கள் விடயத்தில் இப்படியான ஏதாவது நிகழுமா? அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு அமையும். அதனை இலங்கை அரசு எவ்வாறு கரிசனை கொண்டு செயற்படும். எமது முஸ்லிம்களினுடைய அரசியல் வியாபாரமாக மாற்றப்பட்டிருப்பதால், அதுவெல்லாம் சாத்தியமில்லை. எமது அரசியல் தலைவர்களிடமிருந்து வீரியமற்ற அறிக்கையையும், உணர்ச்சி சிந்தக் கூடிய வீர வசனங்களையுமே எதிர்பார்க்க முடியும். வேறு செயல் ரீதியான எதனையும் எதிர்பார்க்க முடியாது. எமக்காக அமைச்சுக்களை எல்லாம் தூக்கி வீச முடியுமா? எத்தனை கோடிகளை இழக்க நேரிடும். இவர்களை வேறு யாருமே தெரிவு செய்யவில்லை. நாம் தான் தெரிவு செய்தோம். அக் குற்றத்தையும் நாமே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும்.

இந் நேரத்தில் கூட சிறிதேனும் அச்சமின்றி, பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்போடு, எமக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுகிறதென்றால், நாம் எந்தளவு பலவீனமாக உள்ளோம் என்பதை சிந்தித்து கொள்ளுங்கள். அருகாமையில் உள்ள பாதுகாப்பு படையினரால் களம் விரைய முடியவில்லை. அருகாமையில் இருந்தும், ஏன் தாமதமாக சென்றீர்கள் என்ற கேள்வி எழும் என்பதை அவர்கள் சிந்திக்காமலும் இருந்திருக்க மாட்டார்கள். இவைகள் அனைத்தும் உயர் இட அங்கீகாரத்தோடு, நடந்தேறியது என்பதைத் தான் இந் நிகழ்வு கூறுகிறது. இந் நேரத்தில் கூட, இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடியாது என்றால், எம்மைப் போன்ற வடி கட்டிய முட்டாள் சமூகம் வேறு யாருமே இருக்க முடியாது. இது மிக ஆபத்தான ஒரு செய்தியை எமக்கு கூறுவதை, முஸ்லிம் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும். இவற்றை எதிர்கொள்ளத்தக்க வகையில், முஸ்லிம் சமூகம் கூரியதும், நேரியதுமான விதத்தில் வழி காட்டப்படல் வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here