சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்

Spread the love

(அகமட் எஸ். முகைடீன்)

அம்பாறை நகரத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்களை கடந்த திங்கட்கிழமை இரவு கோரத்தனமாக தாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகள் பெரும் காடைத்தனத்தை அரங்கேற்றி உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அம்பாறைக்கு விஜயம் செய்து மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இவ்வாறான ஒரு நிலமை மீண்டும் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாது என்ற உறுதி மொழியினை பிரதமர் வழங்க வேண்டுமெனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எச்.எம். ஹரீஸ் பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர தொலை நகலில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும். அத்தோடு இந்நாட்டிலுள்ள ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான தாக்குதல் இடம்பெறாமல் இருக்கும்வகையிலான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

அம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுமுள்ளன. அதேபோன்று அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சம்பவம் நடைபெற்ற இரவு நான் உள்ளிட்ட அரசியல் தலைமைகள் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அவர்களினால் உரிய நேரத்திற்கு இக்கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம்.

அம்பாறை நகரில் மிகப் பெரும் படைத்தளங்கள், பொலிஸ் தலமையகங்கள் மற்றும் பெருமளவிலான படைவீரர்கள் காணப்படுகின்றமையினால் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டபோது ஸ்தலத்திற்கு விரைந்து நிலமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இருந்தபோதிலும் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையிட்டு இந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.

இனவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக அசமந்தமாக இருப்பதனால் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரதமர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறி உள்ளார்.

எதிர்காலத்தில் இந்த அரசு முஸ்லிம்கள் விடயத்தில் சரியான நடவடிக்கையினை எடுக்க தவறும் பட்சத்தில் மிக காட்டமான நடவடிக்கையினை நாமெடுக்க நேரிடும். முஸ்லிம் இளைஞர்களையும் மக்களையும் கொதிப்படையச் செய்துள்ள, மிகவும் கண்டிக்கத்தக்க அம்பாறைச் சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட ஏனைய படைத்தரப்புகள் இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையிட்டு மிகவும் அக்கறையுடன் நாம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதோடு மேலும் இந்த விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வின்போது ஒருமித்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆலோசித்து வருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*