அம்பாறை சம்பவத்தின் சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்

0
231

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

அம்பாறை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாயல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சரும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மகிந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் போன்று தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்று வருவது சிறுபான்மை சமூகம் நல்லாட்சி அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலாகும்.

இரவு நேரத்தில் ஜும்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்டு, வாகனங்கள் எரிக்கப்பட்டது. ஆனால் இச்சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இச்சம்பவ இடத்திற்கு எந்த பொலிஸாரும் வருகை தராதது எங்களுக்கும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

எனவே குற்றவாளிகளுக்கு எதிரான மிக விரைவாக பிரதமர் சட்ட நடவடிக்கை எடுத்து முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அரசு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அம்பாறை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டதானது இலங்கையில் ஒரு வன்முறைச் சம்பவத்தை தோற்றுவிக்கும் பாணியில் இந்த செயற்பாட்டை சில காடையர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். இது நல்லாட்சி அரசினால் சிறுபான்மை சமூகத்திற்கு காட்டும் துரோகச் செயலாக மாறியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here