தேசிய தலைமைக்கான போட்டியும் பந்தாடப்படுகின்ற முஸ்லீம் சமூகமும்

0
236

(பாரூக் ஷிஹான்) 

யுத்தம் முடிவிற்க்குப் பின்னர் இலங்கையில் குறிவைத்து தாக்கப்படுகின்ற சிறுபான்மை இனமாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். உதாரணமாக அளுத்கமை தொட்டு அம்பாறை வரை அரங்கேற்றப்பட்டிருக்கின்ற திட்டமிட்ட தாக்குதல்களை சொல்லலாம்.

உண்மையில் இவ்வாறான தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண்கின்ற விடயத்தில் கடந்த மஹிந்த அரசாங்கமும் சரி தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் சரி தோல்வி கண்டிருப்பது கண்கூடு. விடயம் இவ்வாறிருக்க இவ்வாறான திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற நாசகார நடவடிக்கைகளுக் கெதிராக முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளாக களத்துக்கு விஜயம் செய்து பார்வையிடுதல், பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசி உரையாடல், அரசாங்க அதிபரோடு நேரடிக்கலந்துறையாடல், சனாதிபதி பிரதமரோடு பேச்சு என்பன போன்ற நடவடிக்கைகளை தத்தம் கட்சியினை முன்னிருத்தி வைக்கின்றார்களே தவிர அனைத்து தலைமைகளும் ஒன்றாக இணைந்து ஒரே குரலில் பிரயோகிக்கின்ற அலுத்தம் என்பது அளுத்கமை தொடக்கம் இன்று வரை பிரயோகிக்கப்படவில்லை என்ற உண்மையினை அவ் அரசியல் தலைவர்களும் சரி அவ் அரசியல் தலைவருகளுக்காக சமூகவலைத்தளங்களில் அவர்களை ஹீரோவாக்கி எழுதுகின்ற கூலி எழுத்தாளர்களும் சரி ஏற்றே ஆக வேண்டும்.

அது மாத்திரமின்றி முஸ்லிம் தலைமைத்துவங்களுக்கிடையிலான போட்டியின் பாதகமான விளைவினை முஸ்லிம் சமூகம் பலமடங்காக அனுபவிக்க இருக்கிறது என்ற உண்மையினையும் அவர்கள் ஏற்றே ஆகவேண்டும். இவர்களது அரசியலின் வன்டவாளம் அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு இன்று வரை வழங்கபடாமலிருக்கின்ற விடயத்தில் படம்போட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது. இவ் தலைமைகள் கையாளாகா பொம்மைகள் என்ற உண்மை கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட மாகாண சபை திருத்த பிரேரணை யின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இத்தலைமைகளின் நோக்கம் அவரவர் கட்சியின் வளர்ச்சியும் பதவிகளை பாதுகாப்புக்கான தந்துரோபாயமுமே என்ற உண்மை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவர்களை இவர்கள் இவர்களை அவர்கள் என வசைபாடித்திரிந்து சமூக பிளவினை ஏற்படுத்திய விடயத்தில் அம்பலமாகி இருக்கிறது. இவர்களது அரசியல் இன விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய இளைஞர் சமுதாயத்தை பேஸ்புக் போராளிகளாக மாற்றியிருக்கிறது. இவர்களது அரசியல் சமூகம் சார்ந்து செயற்பட வேண்டிய புத்திஜீவிகளை புத்திபேதலித்தவர்கள் என்ற ரீதியில் பார்க்க வைத்திருக்கின்றது.

உரிமைக்கோஷத்துடன் வந்த கட்சி உரிமைக்காக குரல் கொடுக்க கூடிய எத்தனை இளம் பிரதிநிதிகளை உருவாக்கி இருக்கின்றீர்கள் என்று கேற்கிறோம்? உரிமைக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட கட்சி அதன் பாதைமாறி பயணிப்பதாக கூறி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிகளை தலைவர்களாக கொண்ட கட்சி மற்ற கட்சியினை விமர்சிப்பதை விட்டு உரிமை தொடர்பாக உங்களது கட்சியின் நிலைப்பாட்டை எப்போது அறிவிப்பீர்கள் என்று கேற்கிறோம்? வீணாக உங்களது பிளவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த எத்தனிக்கின்ற பெரும் பான்மை சக்திகளுக்கு ஏன் மேலும் மேலும் தீனி போடுவதாக உங்களது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டே போகின்றீர்கள் என்று வினவுகிறோம்? உங்களது அதிகார போட்டியின் விளைவாக முஸ்லீம் சமூகம் துவம்சம் செய்யப்படுவதை அறிந்தும் அறியாதவர்களாக ஏன் இன்னும் நடிக்கின்றீர்கள்? உங்களால் இனவாதத்தை ஒழிக்க முடியாதென்பது எங்களுக்கு தெரியும் என்றாலும் ஏன் எம் சமூகத்தின் பிளவுக்கு காரணமாக உங்களது அரசியலை செய்ய முனைகிறீர்கள்? நீங்கள் செய்த சாதனையெல்லாம் எல்லாம் ஈமானையும் இறைபக்தியையும் மூலதனமாக கொண்டு செய்து காட்ட வேண்டிய அரசியலை பணத்தினை மூலதனமாக்கி செய்து காட்டியது மட்டும் தான்.

அது மட்டுமே இன்றைய முஸ்லீம் சமூக அரசியலின் முன்னேற்றம். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நீங்கள் யாராவது தேசியத்தலைவர்களாக முடி சூடிக்கொள்ளுங்கள். ஆனால் உங்களது தேசிய தலைமைப் பதவிக்கான போட்டி இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களின் அழிவுக்கு காரணமாகலாம். ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் அடியாட்களை இன்னும் பல அறிக்கைகளை ” பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு உயிரை துச்சமாக மதித்து எமது தேசியத்தலைவர் விஜயம், குற்றவாளிகளை கைத்து செய்வதை துரிதப்படுத்துமாறு தேசியத்தலைவர் பணிப்பு ” என்ற அடிப்படையில் எழுத வேண்டியிருக்கிறது.

ஆயத்தமாகவே வைத்துக் கொள்ளுங்கள் அம்முக நூல் கோழை எழுத்தாளர்களை. அன்பின் இளம் சகோதரர்களே, உலமாக்களே புத்திஜீவிகளே முஸ்லிம் அரசியல் வாதிகளால் பிளவுப்பட்டு போய்க்கிடக்கின்ற சமூகமாக எமது சமூகம் மாறியிருக்கின்ற உண்மையினை ஏற்று அவ் அரசியல் தலைமைகளை செப்பனிடுகின்றவர்களாக நாம் மாறுவதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளை இத்தசாப்தத்தில் நாம் முன்னெடுக்காவிட்டால் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் என்பது எட்டாக்கனியாக மாறுகின்ற நேரம் வெகு தொலைவில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here