தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..?

0
439

தற்போது இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான தேசிய சக வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் போது தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனுடைய செயற்பாடு எவ்வாறு அமைந்திருந்தது என்றால், யாரிடமும் எந்த பதிலும் இருக்காது. தற்போதைய சூழ் நிலையில் பாதுகாப்பு அமைச்சு, சட்ட ஒழுங்கு அமைச்சு, தேசிய சகவாழ்வு அமைச்சு ஆகியவையே பிரதான தேவைப்பாடுடையவைகள். இதில் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசனை தவிர ஏனைய இரு அமைச்சுக்களை சுமந்துள்ளவர்களும், ஏதோ செய்கிறோம் என்ற வகையிலாவது, ஏதோ செய்து கொண்டிருந்தனர். தேசிய சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசனோ தனக்கும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமுமில்லாத வகையில் இருந்தார். இந் நிலையில் தேசிய சக வாழ்வை கட்டியெழுப்ப முயற்சிக்காதவர், இதன் பிறகும் எதுவும் செய்யப்போவதில்லை. இப்படியானவர் இலங்கை நாட்டு மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான அமைச்சான , தேசிய சகவாழ்வு அமைச்சுக்கு எந்த வகையிலும் பொருத்தமானவரல்ல.

இனங்களுக்கிடையில் சக வாழ்வை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இதற்கு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் அவசியமானவை. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது குறுகிய கால திட்டங்கள் செயற்படுத்தப்படல் வேண்டும். அப்படி எந்த திட்டங்களும் இவ்வரசிடம் இருந்ததாக இல்லை. இதற்கான முழுப் பொறுப்பையும் தேசிய சக வாழ்வு அமைச்சர் என்ற வகையில் மனோ கணேசனே பொறுப்பெடுக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், இந் நிலையில் தேசிய சக வாழ்வை ஏற்படுத்த முடியாமையையிட்டு, தனது அமைச்சிலிருந்து மனோ கணேசன் இராஜினாமா செய்ய வேண்டும். தற்போதைய சூழ் நிலையில் மனோ கணேசன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் நின்றிருக்க வேண்டிய ஒரு அமைச்சர். மன்னிக்க வேண்டும், அவர் அதிகமாக கோட், சூட் அணிபவரல்லவா? இவர் தமிழ் மதத்தை சேர்ந்தவர் என்பதால், இரு மதத்தை சேர்ந்தவர்களுக்குமிடையில் மத்தியஸ்தம் வகிக்க மிகவும் பொருத்தமானவர். ஆனால், அமைச்சர் மனோ கணேசனோ வெளியில் தனது தலையை கூட காட்டியிருக்கவில்லை. இவர்களை போன்று வாயால் வடை சுட்டு, கையால் நடனமாடும் சிலரை, இந்த அரசு நம்பியிருந்தமையே, இந்த அரசின் தோல்விக்கான முதற் காரணமாகும்.

இப்போது வெளியில் தலை காட்டி “ இலங்கையிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரேபிய தோற்றப்பட்டை நகல் செய்தவதை விட வேண்டும்” என்கிறார். இவரது இக் கூற்றை இன்றைய சூழ் நிலைகளை வைத்து சிந்திக்கும் போது, இலங்கை முஸ்லிம்களும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட காரணமாகவுள்ளனர் என கூறுவதை அறிந்துகொள்ள முடியும். இலங்கை முஸ்லிம்கள் எந்தெந்த விடயங்களில் அரேபிய தோற்றப்பாட்டை நகல் செய்து, பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளார்கள் என்பதை மனோ கணேசன் தெளிவு படுத்த வேண்டும். இன்று உங்களவர்கள் பலர் அணிந்து செல்லும், மானத்தை காற்றில் பறக்க விடும் ஆடைகள் போன்று அணிந்து தான், ஏனைய இணங்களோடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு முஸ்லிம்கள் தயாரில்லை. எங்கள் மார்க்கத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்து மற்றும் ஹராம், ஹலால் பாராது உண்டு, உடுத்து, செய்து தான், இன நல்லுறவை நிரூபிக்க வேண்டுமாக இருந்தால், அதற்கும் எந்த முஸ்லிமும் தயாரில்லை.

மனோ கணேசன் ஒன்றை மாத்திரம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உயிருக்கு அஞ்சி மார்க்கத்தை விட்டுக்கொடுப்பவன் முஸ்லிமல்ல. முடிந்தால், முஸ்லிம் சமூகம் மீது ஒரு கேவலமான குற்றச்சாட்டை சுமத்தி, திருந்துங்கள் என கூற முடியுமா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here