இல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா?

Spread the love

(ஜெம்சித் (ஏ) றகுமான்
மருதமுனை)

எமது நாட்டில் தேசிய சகவாழ்வு இல்லாத போது அதற்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மதங்களுக்கிடையில் நல்லிணக்கமும், தேசிய சகவாழ்வும் இல்லாமல் போனதாகும்.தேசிய சகவாழ்விற்கு என தனியான அமைச்சு உருவாக்கப்பட்டிருந்தாலும் அது பெயரளவில் மட்டுமே அமைச்சாக உள்ளே தவிர நடைமுறையில் தேசிய சகவாழ்விற்கான அமைச்சாக இருந்ததில்லை.மக்களிடையே மத நல்லிணக்கமும், தேசிய சகவாழ்வும் உருவாக்கப்படுமேயானால் இனவாதம் பேசும் ஒருவர் கூட எமது நாட்டில் இருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தேசிய சகவாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மனோ கணேசன் அவர்கள் தேசிய சகவாழ்வினை உருவாக்குவதற்காக எவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளார்? என கேள்வி எழுப்புகின்ற போது விடை கேள்விக் குறியாகவே உள்ளது.தேசிய சக வாழ்வினை எமது நாட்டில் ஏற்படுத்துவ தென்பது இலகுவான காரியமல்ல.தேசிய சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின் அவ் அமைச்சினை பொறுபேற்றிருப்பவர் அர்பணிப்பாக செயலாற்ற வேண்டும்.இன, மத, மொழிகளை கடந்து முழு மூச்சுடன் திறன்பட செயலாற்றினால் மாத்திரமே ஓர் அளவேனும் தேசிய சகவாழ்வை ஏற்படுத்த முடியும். மாறாக அமெரிக்க திரைப்படங்களில் கோட்சூட் களுடன் வலம் வரும் நடிகர்களை போன்று எமது நாட்டில் கோட்சூட் உடன் வலம் வருவதனால் தேசிய சகவாழ்வினை ஏற்படுத்த முடியாது.

தற்போது எமது நாட்டில் இரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் நெரிசலை குறைத்து அவர்களை சகவாழ்விற்கு இட்டு செல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்க வேண்டிய மனோ கணேசன் அவர்கள் அதற்கு எதிர்மாறாக கூறி இருக்கும்“ இலங்கையிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரேபிய தோற்றப்பட்டை நகல் செய்வதை விட வேண்டும்” எனும் கருத்தானது எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போன்று அமைந்துள்ளது.தேசிய சகவாழ்வை நடுநிலையாக நின்று ஏற்படுத்த வேண்டிய அமைச்சரே இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது பழிசுமத்துகின்ற போது தேசிய சகவாழ்வு உருவாவது எந்தளவு சாத்தியமாகும்?

இனவன்முறைகளும், இன நெரிசல்களும் ஏற்படுகின்ற போது தலையை உள்ளே எடுத்து விட்டு நிலமைகள் தனிகின்ற போது தலையை வெளியே எடுத்து நச்சுக் கருத்துகளை கூறுவது எந்த வகையில் நியாயம் என்பதை மனட்சாட்சியை முன்னுறுத்தி அவரே அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.முஸ்லீம்களின் ஆடை ஒன்றும் அரேபிய தோற்றப்பாட்டை நகல் செய்வதல்ல.முஸ்லீம்களாக பிறந்தவர்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் சொல்லி தந்துள்ளது.அங்கம் தெரியும் ஆடைகள் அணிந்துதான் சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என நீங்கள் நினைத்தால் அவ்வாறான சகவாழ்வு எமக்கு தேவை இல்லை.

ஆடை அணிவதிலும், உணவு உண்பதிலும் தான் சகவாழ்வை ஏற்படுத்த முடியும் என அமைச்சர் மனோ கணேசன் நினைத்திருந்தால் தேசிய சகவாழ்வு அமைச்சு அவருக்கு பொருத்தமற்ற அமைச்சாகும்.எமது நாட்டில் இல்லாத தேசிய சகவாழ்விற்கு அமைச்சினை உருவாக்கி, அதனை மனோ கணேசன் போன்றவர்களிடம் ஒப்படைப்தனாலும் எந்தவிதமான ஒரு பயனும் ஏற்படபோவதில்லை.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*