சொல்ல முடியாத வலி

0
556

எங்கிருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. வாசிக்கும் மனநிலையிலும் யோசிக்கும் நிலைமையிலும் முஸ்லிம்கள் இருக்கின்றார்களா எனப் புரியவில்லை. ஆற அமர இருந்து சிந்திக்கும் மனப்பக்குவத்துடனும் பொறுமையுடனும் சிங்கள, தமிழ் மக்கள் உள்ளார்களா என்பது கூட நிச்சயமில்லை. எனவே யாருக்காக எழுதுவது எனவும் தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகள் என்ன எழுதி என்ன பயன் என்ற கேள்விகளுக்கும் விடையில்லை.
ஆனால் உலகிலேயே இன்னும் பரிணாம வளர்ச்சி பெறாமல், கூர்ப்படையாமல் இருக்கின்ற ‘கரப்பான்  பூச்சி’ போலவே இனவாதமும் அதை ஆட்டுவிக்கின்ற அரசியல் சக்திகளும் இருக்கின்றன என்பது மட்டும் நன்றாக புலப்படுகின்றது.

எனவேதான் உலகின் பல பாகங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் போலவே இலங்கை முஸ்லிம்களும் இப்போது மிகவும் மனமுடைந்து போயிருக்கின்றனர். இனவாதமும் இன வன்முறைகளும் கட்டுங்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால் சொல்ல முடியாத – வார்த்தைகளுக்குள் அடங்காத வலியையும் சோகத்தையும் காலம் அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றனது. விரக்தியும், எதிர்காலம் பற்றிய பயமும், இருப்பு பற்றிய நிச்சயமின்மையும், பொறுப்புவாய்ந்த தரப்பினர் மீதான நம்பிக்கையீனமும் அவர்களை சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய காலப்பகுதியில் திகண, கண்டி மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களிடம் மட்டுமல்ல நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களிடம் இனவாத ஒடுக்குமுறை பற்றிய ஒரு சோகக் கதை இருக்கின்றது. ஆனால் அதைக் கேட்பதற்குத்தான் ஆட்களில்லை. யார் கதையை யாரிடம் சொல்வது என்பதுதான் அங்குள்ள பிரச்சினை. எனவே, ஓவென பீறிட்டு அழுவதா, சமரசமாகிப் போவதா அல்லது இனவாதத்திற்கு எதிராக துணிச்சலுடன் எழுந்து நிற்பதா என மூன்று தெரிவுகள் முஸ்லிம்களுக்கு முன் இருக்கின்றது.

மலைநாட்டின் சோகம்

மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இன வன்முறைகளும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் எங்கு தொடங்கி, எவ்விதமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதும் அது இப்படியே போனால் எங்கு சென்று முடியும் என்பதும் புத்திசாலித்தனமாக சிந்திக்கின்ற ஆறறிவுள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும்.
அம்பாறையில் ஒரு கொத்துரொட்டியில் முடுக்கிவிடப்பட்ட இனமுறுகல், பின்னர் திகணவில் ஒரு முச்சக்கரவண்டியின் பக்கக் கண்ணாடியாலும் அதன் பின்னரான மரணத்தாலும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு இன்று ஒரு பரந்துபட்ட இனவன்முறையாக போய்க் கொண்டிருக்கின்றது. இதனால் முஸ்லிம்கள்தான் உள ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், இதன் எதிர்விளைவுகள் ஏனைய சமூகங்களையும் மறைமுகமாக பாதித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கலையும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்த காரணமாகியிருக்கின்றது என்பது கவனிப்பிற்குரியது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், திகண பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் முஸ்லிம் இளைஞர்கள் பயணித்த முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடியை சேதமாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அந்த சிங்கள இளைஞனை துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். அந்த சிங்கள இளைஞன் நஷ்ட ஈடாக பணம் கொடுத்த போதும், முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்களின் பின்னர் தாக்கப்பட்ட அந்த இளைஞன் மரணமடைந்ததையடுத்து களநிலைமைகள் சட்டென மாறின. திகண பிரதேசத்தில் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு முறுகல்நிலை உருவானதுடன், இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நாளில் சிங்கள இளைஞர்கள் ஊர்வலமாக வரவுள்ளதால் நிலைமைகள் இன்னும் மோசமடையலாம் என்றும் சொல்லப்பட்டது.

மரணித்த சிங்கள இளைஞன் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமானவர். பள்ளிவாசலுக்கு வருவோருக்கு உதவக் கூடியவராகவும் இருந்திருக்கின்றார். ஆனால் போதையில் இருந்த முஸ்லிம் இளைஞர்களின் கண்ணுக்கு அதுவெல்லாம் தெரியவில்லை. எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம்கள் பக்கத்திலேயே தவறிழைக்கப்பட்டது என்பதை குற்ற உணர்ச்சி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.
யார் செய்தாலும் தவறு தவறுதான் என்பதில் மறுகருத்தில்லை. அப்படிப்பார்த்தால், சில நூறு ரூபாய் பெறுமதியான ஒரு சிறிய விடயத்திற்காக அந்த சிங்கள இளைஞரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இது இரு இனங்களுக்கு இடையிலான உறவில் கீறல் விழச் செய்திருக்கின்றது. எனவே, சம்பந்தபட்ட இளைஞர்கள் 4 பேரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் இதற்காக மிகவும் மனம் வருந்தியதுடன், அந்த இளைஞனின் குடும்பத்திற்கு நிதி உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாட்டையும் மேற்கொண்டனர்.

மிலேச்சத்தனமான தாக்குதல்

இந்த வேளையில்தான் மரண ஊர்வலம் இடம்பெற்றது. தமது பக்கத்தில் தவறு ஏற்பட்டுள்ளதால் மறுதரப்பிற்கு ஆத்திரம் அதிகமாக இருக்கும் என்ற நியாயத்தை உணர்ந்து கொண்ட ரஜவெல்ல, திகண, தெல்தெனிய, தென்னக்கும்பர முஸ்லிம்கள் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய கடைகள், வீடுகளை மூடிவிட்டு, வீடுகளுக்குள் இருந்தனர். ஆனால் என்ன நடந்தது?
சவப் பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றவர்கள் போகும் வழியில் இருந்த முஸ்லிம்களின் எல்லா கடைகள், வீடுகள், வாகனங்களை அடித்து நொருக்கினர், தீயிட்டுக் கொழுத்தினர். பள்ளிவாசல்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி சேதப்படுத்தினர். ‘முஸ்லிம்கள் எல்லோரும் வீடுகளுக்குள் இருங்கள், நாங்கள் மற்றதையெல்லாம் பார்த்துக் கொள்கின்றோம்’ என்று வாக்குறுதி அளித்திருந்த பாதுகாப்பு தரப்பினர் அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்த காடைத்தனங்கள் அரங்கேற்றப்பட்டதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர். வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தால் எவ்வாறு இத்தனை வீடுகளும் கடைகளும் பள்ளிவாசல்களும் நாசமாக்கப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. இதுதான் பின்னர் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த போதும் நடந்தது. முஸ்லிம்கள் எல்லோரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட பின்னர்; வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த வன்முறை சாதராணமாக இடம்பெறவில்லை. 11 கிலோமீற்றர் நீளமான பாதையின் இரு மருங்காகவும் இருந்த முஸ்லிம்களுக்கு உரித்தான பெருமளவு உடமைகள் இனவாதிகளால் எரித்தும் நொருக்கியும் நாசப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, கண்டி நகரை தவிர்த்து கட்டுகஸ்தோட்டை, பேராதனை, அக்குறணை, உள்ளிட்ட நகரங்களில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் நாசமாகின. அதுமட்டுமன்றி, அப்பாவி முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்த வன்முறைத் தீயால் பலியெடுக்கப்பட்டார்.

அரசாங்க புள்ளி விபரங்களின் படி உயிரிழப்புக்கள் தவிர 04 பள்ளிவாசல்களும் 10 வாகனங்களும் 24 வீடுகள் மற்றும் கடைகளும் 11 நபர்களும் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் அழிவுகள் இதை விடப் பன்மடங்கு அதிகம் என்பதை அறிந்து கொள்ள ஏகப்பட்ட அத்தாட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் 20 மேற்பட்ட பள்ளிவாசல்கள் இது வரை தாக்கப்பட்டிருக்கின்றன. 150 இற்கும் அதிகமான வீடுகளும் கடைகளும் வாகனங்களும் சேதமாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா முஸ்லிம் குடியிருப்புக்களும்

பள்ளிவாசல்களும் ஏதோ ஒரு அடிப்படையில் தாக்கப்பட்டுள்ளன அல்லது எரியூ ட்டப்பட்டுள்ளன. அதன்படி, திகண, ஹிஜ்ராபுர, பள்ளேகல, கட்டுகஸ்தோட்டை கெஹல்ல மற்றும் குருணாகல் வீதி, அலதெனிய, யஹலதென்ன, பெனிதெனிய, தென்னக்கும்புர, மெனிக்கின்ன, இலுக்குவத்த, வத்தேகம, எழுகொட, என்ரதென்ன, முறுதலாவ, தெஹியங்க, அக்குரண வெலகட, பேராதனை, எல்பிட்டிய, ஹீப்பிட்டிய, அலியதென்ன, வாரியபொல, ஹலிஒய, யப்பலாவத்த உள்ளடங்கலாக பல பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தணியும் நெருப்பு

இப்போது நிலைமைகள் கொஞ்சம் சுமுக அடைந்திருப்பதாக தோன்றுகின்றது. பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த முறையாக செயற்படவில்லை என்ற விடயத்தை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கின்றது. உண்மையாகவே ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டிருந்த நிலையிலும் இந்நிலைமை ஏற்பட்டிருக்குமானால், அவர்களது கட்டளைகளை யாரோ சிலர் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றுதானே எண்ணத் தோன்றுகின்றது.
கடற்படையினரை இப்போது களத்தில் இறக்கியுள்ளமையும் அதன்பின்னர் பாதுகாப்பு தரப்பினர் முஸ்லிம்களின் குரல்களுக்கு ஓடிவருவதாக சொல்லப்படுகின்றமையும்; ஆறுதலளிப்பதாகும். அதுமட்டுமன்றி, இது, ஜனாதிபதியும்; பிரதமரும் கண்டறிந்த விடயங்கள் மற்றும் அதன்படியான மிகப் பிந்திய நடவடிக்கைகளின் பலன் எனவும் கூறமுடியும்.

ஆனால், இத்தனை நடந்த பிறகும் இனவாத வெறி இன்னும் அடங்கவில்லை என்றே தெரிகின்றது. இப்போதும் இந்த வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாளை இது முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களுக்கு இல்லை. எனவேதான் நிலைமைகளை ஆழ ஊடுருவி புலனாய்வு தன்மையோடு நோக்கி, புத்திசாதூரியமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

திட்டமிட்ட செயல்

கண்டியிலும் அதன் சுற்றயல் பகுதிகளிலும் குறிப்பாகவும் நாட்டின் ஏனைய பாகங்களில் ஆங்காங்கேயும் இடம்பெற்று வருகின்ற சம்பவங்களை ஒரு கோர்வையாக நோக்குகின்ற போது. இது தற்செயல் சம்பவங்களோ, திட்டமிடப்படாமல் நடைபெற்றவை என்றோ கூற முடியாது. மறுபுறத்தில், இது செயன்முறைப்படுத்தப்பட்ட விதத்தைக் கண்டு அரசாங்கமே திகைத்து நிற்பதை காண முடிகின்றது. முஸ்லிம்களால் தாக்கப்பட்ட சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அத்துடன், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும் தேரர்களும் பெயர்குறிப்பிடத்தக்க கடும்போக்காளர்களும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளமை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இந்த இளைஞனின் இறுதிக் கிரியைகளுக்கு வந்தவர்கள் பழிதீர்க்க முற்பட்டதாலேயே இந்த அழிவு ஏற்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், அவ்விளைஞன் மரணிப்பதற்கு முன்னரே இந்த வன்முறை திட்டமிடப்பட்டிருக்கின்றது என்றும், வெளியிடங்களில் இருந்து பஸ்களில் காடையர்கள் அழைத்துவரப்பட்டு களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இப்போது பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக் கொள்வதை காண முடிகின்றது.

கொத்துரொட்டி வாங்கப் போன இடத்தில் கருத்து மோதல் நடைபெறுவதும் விபத்துக்கள் இடம்பெற்ற இடத்தில் கைகலப்பு ஏற்படுவதும் இலங்கைக்கு புதிய சம்பவம் அல்ல. ஆனால், அம்பாறையில் ஒரு போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து பள்ளியையும் கடைகளையும் உடைத்தவர்கள் அது எடுபடாமல் போனதால், அடுத்த கட்டத்திற்கு இதை நகர்த்துவதற்காக இந்த சிங்கள இளைஞனின் மரணத்தை முதலீடாக்கினார்களா என்ற நியாயமான சந்தேகம் இப்போது மேலெழத் தொடங்கியிருக்கின்றது.

ஏனெனில், அம்பாறை, திகண என இரண்டு சம்பவங்களும் பெருப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு சிங்கள இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கி மரணிக்கச் செய்திருந்தாலும் அதனை தண்டிப்பதற்கு சட்டம் இருக்கின்றது. ஆனால் இங்கு; சட்டம் பார்த்துக் கொண்டிருக்க காடையர்கள் பன்மடங்காக பழிதீர்த்திருக்கின்றனர். இன்னும் சரியாகச் சொன்னால், முஸ்லிம்களை தாக்குவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள் எனலாம்.

வழக்கத்திற்கு மாறாக

இதற்கு முன்னர் எத்தனையோ முஸ்லிம்கள் இவ்வாறு அநியாயமாக கொலையுண்டிருக்கின்றார்கள். பழுதடைந்த விமானத்தை வழங்கியதால் அஷ்ரஃப் மரணத்திருக்கின்றார். பள்ளிவாசல் படுகொலைகள் தொடக்கம் வசீம் தாஜூதீன் வரை எத்தனையோ மரணத்திற்கு பிற சமூகத்தவர் காரணமாகியிருக்கின்றார்கள். ஆனால் அதற்காக முஸ்லிம்கள் இவ்விதம் வன்முறையில் ஈடுபடவில்லை. தமிழ் அரசியல் தலைமைகள் கொல்லப்பட்ட போது தமிழர்கள் சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து தாக்கவில்லை.

அதுமட்டுமன்றி, யுத்தகாலத்தில் அரந்தலாவையிலும் இன்னபிற இடங்களிலும் பௌத்த தேரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தலதா மாளிகை, சிறிமகா போதி உட்பட பல இடங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றன. ஒரு ஜனாதிபதி உள்ளடங்கலாக பல சிங்கள தலைமைகள் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் பயந்து நடுங்கிக் கிடந்த சில தேரர்களும், இனவாதிகளும் இன்று சிறு பொடியன்களின் கைகளில் ஆயுதத்தைக் கொடுத்து, முஸ்லிம்களை நோக்கி ஏவி விட்டிருக்கின்றார்கள் என்பது லேசுபட்ட விடயமல்ல.

உலக அரசியல் ஒழுங்குகளின் பின்னணியிலும் இலங்கையில் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட கடந்தகால பட்டறிவுகளின் துணைகொண்டும் இதற்கான பின்புலத்தை, அடிப்படைக் காரணத்தை, இந்த வன்முறைகளின் சூத்திரதாரியை சரியாக கண்டறிய வேண்டிய கடப்பாடு முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கும் பொறுப்புவாய்ந்த அரசாங்கத்திற்கும் இருக்கின்றது. அத்துடன் இது சிறுகுழுவினரால், அந்த இளைஞனின் மரணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தற்செயலான அசம்பாவிதம் என்று நினைத்து வாழாவிருக்கவும் கூடாது.

அனுபப் பட்டறிவு

இலங்கையில் முஸ்லிம்கள்தான் முதன்முதலாக ஒரு இனவாத ஒடுக்குமுறையை சந்தித்தனர். இந்நிலையில், முஸ்லிம்களின் மதத்தலங்களில் கை வைப்பதன் மூலம் உணர்ச்சியை தூண்டிவிடலாம் என்பதும் அந்த எழுச்சியானது ஆட்சி மாற்றத்தையும் கொண்டுவரும் என்பதையும் பெருந்தேசிய சக்திகள் இலங்கையில் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டிருக்கின்றன. எனவே, ஆட்சிமாற்றமொன்றை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் இதை செய்தார்களா என்ற சந்தேகம் இருக்கின்றது. அரசாங்கம் எதிர்கொண்டுள்ள தளம்பலை திசைதிருப்ப அல்லது அதை இன்னும் பெரிதுபடுத்த நினைக்கின்றவர்களின் வேலையா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கிய பிறகு, முஸ்லிம்களின் இன, மத அடையாளத்தை மட்டந்தட்ட நினைக்கின்ற இனவாத அமைப்புக்களினதும் அவர்களுக்கு உதவி வழங்கும் பிராந்திய கடும்போக்கு சக்திகளினதும் திட்டமாக இது இருப்பதற்கு நிறையவே சாத்தியமிருக்கின்றது.

அதேபோல், இந்த வன்முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் அதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக பக்குவப்படாத இளைஞர்கள் திரட்டப்பட்டுள்ளமை, ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனமை, முஸ்லிம்கள் கிழக்கில் இருந்து கண்டிக்கு வந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் கதை புனைகின்றமை, இந்திய ஊடகங்கள் மொட்டைத்தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்றமை போன்றவற்றை நோக்கும்போது, முஸ்லிம்களுக்கு விரோதமான வெளிநாடு ஒன்று இதற்கு பின்னால் நின்றிருக்குமா என்ற கோணத்திலும் இதைநோக்க வேண்டும் என முஸ்லிம் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்களும் இவ்விடயங்கள் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டு;ம். இந்த நாட்டின் சிங்கள, தமிழ் மக்கள் நல்லவர்கள். இத்தனை நடந்து கொண்டிருக்கும் போதும் எத்தனையோ பிக்குகள், சிங்கள மக்கள், விளையாட்டு வீரர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக பேசுகின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது. எனவே தமது பிரதேசத்தில் உள்ள சிங்கள, தமிழ் மக்களையும் அச்சமூகத்தில் நியாயத்திற்காக பேசக் கூடிய ஆளுமைகளையும் இணைத்துக் கொண்டே இந்த இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்த வன்முறைகளின் போது கட்சித்தலைவர்களான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் உள்ளடங்கலாக கணிசமான முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்மால் முடிந்ததை செய்திருக்கின்றனர். பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றனர் – நடுவில் அமர்ந்து போராடியிருக்கின்றனர். இதுவெல்லாம் அவர்களது கடமை என்றாலும் நன்றிக்குரியது.
இதேவேளை, முஸ்லிம்கள் விடயத்தில் பக்கச்சார்பில்லாமல் நடந்து கொண்ட ஜனாதிபதியும் பிரதமரும் அதேபோல், சற்று தாமதித்து என்றாலும் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் உள்ளடங்கலாக பலரை கைது செய்துள்ள பாதுகாப்பு தரப்பினரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆயினும், அம்பாறையில் கொத்துக்குள் கிடந்தது மா உருண்டை எனத் தெரியவந்துவிட்டதால் எப்படி அழிவுகளை திருப்பித்தர முடியாதோ, அதுபோலவே திகண சிங்கள இளைஞனின் மரணமும் கலவரங்களும் நன்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன என்று இனிமேல் விசாரணையில் கண்டறிந்தாலும், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது. அத்துடன் அளுத்கம, ஜிந்தோட்டை, திகண என தொடர்சங்கிலியாக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது முஸ்லிம்களுக்கு பெரும் மனக் காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குத்தான் நிரந்தர மருந்து தடவ வேண்டியிருக்கின்றது.
இதைவிட சொல்வதற்கு வேறொன்றும் இல்லை!

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 11.03.2018)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here