படிப்பினை பெறுவோம்.

0
324

அண்மைக்காலமாக எம்மீது திணிக்கப்பட்டு, திட்டமிட்டு அரங்கேறும் செயற்பாடுகளில் இருந்து சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்வோம்.

நமது பலம் ஈமான்!! நமது பலம் பொருளாதாரம்!! இந்த யதார்த்தத்தை உணர்ந்ததாலே வியாபாரங்களையும் பள்ளிகளையும் அழித்து நம்மை பலவீனப்படுத்த சதிநடக்கின்றது.நமது பலவீனம் அரசியல் ரீதியாக உணரப்பட்டுள்ளது.

1-நமது ஈமானை சுத்தப்படுத்திக் கொள்வோம்.வட்டி, சூது, குடி, விபச்சாரம் மற்றும் ஹராமான விடயங்கள் நமது ஈமானியத்தை பலவீனப்படுத்தி உள்ளது.இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி மார்க்க நெறிகளுக்குள் வாழ்வோம்.

2-சகோதரத்துவத்தை பலப்படுத்துவோம்.கடந்தகால கசப்பான உணர்வுகள் மூலம் நமது உணர்வுகள் இறுக்கமாக பினைக்கப்பட்டுள்ளது.நமது உறவுகளுக்காக காட்டிய பங்களிப்பு நமக்குள் நிலவிய வேறுபாடுகளை உடைத்து எறிந்துள்ளது.இதன் மூலம் நமக்குள் ஒற்றுமையான சமூக கட்டமைப்பை பலப்படுத்துவோம்.

3-நம்மை மார்க்க ரீதியாக வழிநடத்த வேண்டிய உலமாசபை தோல்விகண்டுள்ளது.ஆகவே மார்க்க மற்றும் கல்விமான்களை உள்ளடக்கியதாக அதிகாரமிக்க உலமாசபையை உருவாக்குவோம் அல்லது இருக்கின்ற சபையை மறுசீரமைப்போம்.

4-அரசியல் ரீதியாக பலகோணங்களில் சமூகத்தை துண்டாடிய முஸ்லீம் தலமைகளுக்கு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது.ஆகவே சகல முஸ்லீம் அரசியல் தலமைகளையும் பொதுவான வேளைத் திட்டத்தில் செற்படுவதற்கான முஸ்லீம் கூட்டமைப்பை உருவாக்குவோம்.

5-மாற்றுமதச் சகோதரர்களுக்கு நமது மதத்தின் மீதுள்ள தவறான கருத்துக்களை இல்லாது செய்கின்ற நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்போம்.இஸ்லாம் மார்க்கத்தின் மீது கண்ணியமும் நல்ல அபிப்பிராயமும் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

6-நாம் பிறந்த நாட்டிற்கும் அதன் இறமைக்கும் விசுவாசமாக இருப்போம்.நமது விசுவாசத்தை மாற்றுமதச் சகோதர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான நம்பிக்கையை கட்டியெழுப்புவோம்.

ஆகவே பதற்றநிலை ஓரளவு சீராக்கப்பட்டாலும், சிலகாலங்களுக்குப் பின்னர் வேறு வடிவத்தில் பூதமாக வரலாம்.ஏனெனில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகங்களை மோதவிட்டு அரசியலை நகர்த்துவது கலாச்சாரமாக மாறிவிட்டது.

இன்று நமதுமக்களை பிரச்சனைக்குரிய சமூகமாக வைத்திருக்க வேண்டிய தேவை பலருக்கு உள்ளது.ஆதலால் எமது சமூகத்தைச் சேர்ந்த சில காட்டிக் கொடுக்கின்ற துரோகிகளை சமூகத்தின் காவலராக பேசவைத்துள்ளனர்.சகோதரர்களே நமது உணர்ச்சிகளை தூண்டி சிங்கள மக்களுடன் முரண்பட்ட சமூகமாக மாற்றுவதற்கான சதி அரங்கேறிவருகிறது. இதற்காக சிங்களமும் தமிழும் பேச்கூடிய சில வியாபாரிகள் சந்தைக்கு வந்துள்ளனர்.

மிக நிதானமாக இருக்க வேண்டும்.தானும் பிள்ளைகளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சமூகத்திற்காக இந்தக் கோமாளிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.இவர்களுக்கு பிரச்சனை தொடர்ந்து இருக்க வேண்டும்.

முகங்களை்காட்டாமல் Whatsapp மூலமாக சமூகத்தில் உருவாகியுள்ள பிரச்சனையை பிக்சைக்காரன் புண்ணாக வைத்திருக்க சிலர் முனைகின்றனர்.தயவு செய்து பழைய பதிவுகள் மற்றும் தவறான பதிவுகளை வெளியிட்டு சமூக முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம்.

நாம் சிறுபான்மையினராக வாழ்கிறோம்.நமக்கான உரிமைகளை கோஷங்களாலோ, வன்முறைகளாலோஇபழிவாங்கல் மூலமோ அடைய முடியாது.நமக்குள் இன்று பிரச்சனையை கொழுந்து விட்டு வைத்திருக்க பலரும் விரும்புகின்றனர்.

ஆகவே முதலில்  Facebook,Whatsapp group மூலமாக கிரிக்கட் வர்ணணையாளர்களும், ஜோசியர்களும் சமூகத்தை சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.வெளிநாடுகளிலும், நாட்டில் நான்கு சுவருக்குள் ஒழிந்திருந்து உணர்ச்சிவசமான கருத்துக்களை வெளியிடுவோர் கைதுசெய்யப்படவேண்டும்.

சமூகத்தில் உண்டாகியுள்ள அசம்பாவிதங்களையும், முரண்பாடுகளையும் நல்லிணக்க செயற்பாடுகள் மூலமே தீர்க்க முடியும்.மாறாக உணர்ச்சிகரமான செயற்பாடுகளால் எதையும் சாதிக்க முடியாது.நாம் சிரியா, ஈராக் மற்றும் சவுதியில் இருப்பது போல சிலர் நினைக்கின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிகநிதானமாக செயற்பட வேண்டும்.நம்மை சீண்டிப் பார்க்க காத்திருக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கு கடிவாளத்தை நாங்களே வழங்கக் கூடாது.

வெளிநாடுகளிவும், பூட்டிய அறைகளுக்குள்ளும் இருந்து குரல் அனுப்புவர்கள் சட்டரீதியாக அல்லது உலமசபை ஊடாக பிரச்சனைகளை அணுகுவதற்கு முகங்களை காட்டி முன்வரவேண்டும்.வெறுமனே பழைய கதைகளையும், ஒரே கதைகளையும் தோண்டித் தோண்டி சமூகத்தை வன்முறையாக்கவோ அல்லது வன்முறையாக காட்டவோ வேண்டாம்.

அதிகமான முஸ்லீம்கள் சிங்கள மக்களுடன் நெருக்கமாக வாழ்கின்றனர்.கிழக்கில் ஓரிரு பிரதேசங்களைத் தவிர அதிகநான பிரதேசங்களில் சிங்கள மக்களுடனே வாழ்கின்றனர்.பக்கத்து வீடு, தொழில் புரியும் இடம், பிரயாணம் செய்யும் பகுதி, பாடசாளை, வைத்தியசாலை, நீதிமன்றம், பொலிஸ் நிலையம் போன்ற பலவிதமான நாளாந்த வாழ்க்கை வட்டத்தை சிங்கள மக்களுடனே இணைந்து செயற்படுத்த வேண்டி உள்ளது.ஆகவே நாம் மிகவும் நிதானமாக நிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் 75% மானவர்கள் வடக்கில் தனியாகவும் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர்.

நாம் 75% கு மேல் பரவலாக பெரும்பான்மை மக்களுடனே வாழ்கிறோம்.ஆகவே சிலவிட்டுக் கொடுப்புகளுடன் நமது கலாச்சார மற்றும் தனித்துவங்களை பாதுகாத்து வாழவேண்டும்.

ஆகவே சமூகத்தில் பிரச்சனையை புண்ணாக வைத்து புத்திசாலிளாக வேண்டாம்.அன்று அதாத்சாலி போன்று இன்று சிலர் வீராப்பு பேசுகின்றனர்.சமூகத்தின் பிரச்சனையை களத்தில் நின்று பார்க்க வேண்டும்.நமது மக்கள் நாளை அந்த பெரும்பான்மை சமூகத்துடனே வாழவேண்டும்.

உலமாக்களையும், சமூக ஆர்வலர்களையும் தகாதவார்த்தைகளால் பேசுவதை நிறுத்த வேண்டும்.இன்று வீராப்பு பேசுகின்றவர்களுக்கு முகநூளில்  Like  அதிகம் வரலாம், ஆனால் சமூகம் காட்டிக் கொடுக்கப்படுகிறது.சிங்கள இனவாதிகளை விமர்சிக்கின்ற நாம், நமக்குள் இனவாதம் பேசுபவர்களையும் எதிர்க்க வேண்டும்.

நாட்டில் உலமாக்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலமைகள் தற்போதைய பிரச்சனையை கையாள்வதில் மிகநிதானமாக களத்தில் செற்படுகின்றனர்.இதில் பலகுறைபாடுகள் உள்ளது.நாம் இவர்களுடன் பேசி இவர்களை சீரமைப்போம்.

இந்தியா தமிழ் மக்களுக்கு அடைக்களம் வழங்கி, விமானம் மூலம் உணவு வழங்கியது.இன்று வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் உழைத்து, இலங்கை அரசுக்கு கடன் வழங்கும் நிலையில் உள்ளனர்.

வடக்கில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லீமுக்கு ஒரு முஸ்லீம் நாடு 100ரூபாகூட வழங்கவில்லை. நமக்கு வெளிநாடுகளின் உதவியோ, பலமோ இல்லை.நமது சமூகம் மத்திய கிழக்கில் வேளைமுடித்து ஊருக்கே வரவேண்டும்.ஊருக்குள் சிங்கள மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ இணைந்து வாழவேண்டும்.சிந்தியுங்கள்…தீயை மூட்ட வேண்டாம்….சமூகத்தை வன்முறையாளர்களாக மாற்ற வேண்டாம்.படித்தவர்கள் என்பதற்காக எடுக்கின்ற திடீர் முடிவுகள் நமது சமூகம் நீண்டகாலம் அமைதியாக வாழவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

வெட்ட வேண்டும், குத்தவேண்டும் என்று குப்பாடு பேடுபவர்களே.வெளிநாட்டில் உங்கள் உழைப்பு விட்டுவிட்டு மற்றும் குடும்பங்களை அழைத்து ஊருக்கு போகமுடியுமா?? கொழும்பு தனியார் ஆங்கிலப் பாடசாளைகளில் பிள்ளைகளைச் சேர்த்த சிலர் அரைகுறை தமிழ், மற்றும் சிங்கள மொழியில் வீரசனம் சிவாஜியாக பேசுகின்றனர்.ஆயிரக்கணக்கான முஸ்லீம் பிள்ளைகள் சிங்களப் பாடசாளைகளில் கல்விகற்பது தெரியுமா?அங்கே உங்கள் பிள்ளைகளை அனுப்புவீர்களா?

ஊரில் உள்ளவர்களின் அடுத்த நாள் வயிற்றுப் பிளைப்புக்கு, நிம்மதியான தூக்கத்திற்கு உங்களவு வீராப்பு பேச்சு பதிலை வழங்காது.ஆகவே இப்படியாக கருத்து வெளியிடுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம்.

வெளியுலகில் இருந்து கொண்டு களத்தில் உள்ள யதார்த்தத்தை உணரமுடியாது.நமது உறவுகள் நிம்மதியாக வழவேண்டும்.வெறுமனே குரலை உயர்த்தி சமூகத்தை வீதிக்கு கொண்டுவர வேண்டாம்.ஏற்கனவே வடக்கில் இருந்து வெளியற்றப்பட்ட சமூகம் இன்றும் அநாதைகளாகவே உள்ளது.சிந்தித்து செயற்பட வேண்டும்.அடிமைகளாக வாழவேண்டிய அவசியமில்லை.ஆனால் தேசிய ஒருங்கிணைப்புடன் வாழவேண்டும்.

நாம் இந்த நாட்டின் விசுவாசிகள்..சிங்கள் மக்களில் ஒருசிரு குழுவினராவ் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு முழுச் சமூகத்தையும் பகைக்க முடியாது.நமது எதிர்ப்புகளையும், பதிலையும் உரிய வகையில் வழங்க வேண்டும்.

நமக்குள் இனிபிரிவினையும், பிளவுகளும் வேண்டாம்.மார்க்கத்தில் சுன்னாக்காகவும், அரசியல் தேவைகளுக்காகவும் பிரிந்து நிற்கிறோம்.இதுதான் நமது எதிரிகளுக்கு பலமாக உள்ளது.சிந்தித்து செயற்படுவதற்கான சந்தர்ப்பமாக தற்போதைய நிகழ்வுகளை மாற்றியமைப்போம்.

Fahmy Mohamed-UK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here