“திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும்”

0
165

கண்டி மாவட்டத்தில் திகன, மெனிக்கின்ன, கட்டுகஸ்தோட்ட உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளருமான மொஹமட் றுஸ்வின் தெரிவித்தார்.

திகன கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் கள விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பின்னர் பிரிதொரு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீண்ட கால திட்டத்துக்கு அமையவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இலங்கை முஸ்லிம்களின் பொருhளாதாரத்தின் மீது இனவாதிகள் மேற்கொண்ட மற்றுமொரு தாக்குதலாகும்.

30 வருட கால யுத்தம் நிறைவடைந்த பின்னரே இவ்வாறான செயற்பாடுகள் மேலோங்கியுள்ளன. திகன சம்பவத்திலும் அதிகளவான முஸ்லிம் வியாபார நிலையங்கள் முற்றாகவும் பகுதியளவுத் தீக்கிரையாக்கப்பட்டும் – சேதமாக்கப்பட்டும் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் வியாபாரிகளின் பொருளாதார நிலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பாதிக்கப்பட்ட வீடுகளையும், பள்ளிவாசல்களையும், வியாபார நிலையங்களையும் புனர்நிர்மாணம் செய்தாலும் வியாபார நிலையங்களில் இருந்த பொறுமதியான பல பொருட்கள் கொல்லையடித்தும், தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளன. அதற்கான நட்டஈடுகளும் முறையாக வழங்கப்பட வேண்டும்.

எனினும், அரசாங்கம் முழுமையான நட்டஈட்டினை வழங்கும் என எம்மால் எதிர்பார்க்க முடியாது. எனவே, முஸ்லிம் சமூகம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தின் மூலம் நாங்கள் ஏராளமான படிப்பினைகளை கற்றுக்கொண்டுள்ளோம். இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் சிறுபான்மை மக்கள் வாழ்வதற்கான சூழலை அது உறுதி செய்வதில்லை.
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற சகோதர முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here