வாகரைப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கை அதிகரிப்பு.

0
259

(எம்.எம்.முர்ஷித்)

வாகரைப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கை அதிகரித்து காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும், வாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் செவ்வாய்கிழமை செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த காலத்தில் வாகரைப் பிரதேசத்தில் மதுபானம் ஸ்தாபிப்பதை தடை செய்து வந்தோம். ஆனால் மதுபானசாலை இல்லா விட்டாலும் கசிப்பு உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே சட்டவிரோத மதுபாவனை மற்றும் கசிப்பு உற்பத்தி நடைபெறுகின்றது. கிராம பொது அமைப்புக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எத்தனை பேரை கைது செய்தோம் என்று பொலிஸார் தகவல் வழங்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டால் வாகரைப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி எல்லா இடமும் அதிகரிக்கும். எனவே இதில் பொது அமைப்புக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

வாகரைப் பிரதேசத்தில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும். அத்தோடு கிரிமிச்சை கஜீவத்தை சந்தியில் மீதமாகவுள்ள மரமுந்திரிகைக்கு சொந்தமான காணியை மரமுந்திரிகை கூட்டுத்தானம் தங்களது பெயருக்கு மாற்ற முன்வர வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் அக்காணியும் வேறு தேவைகள் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டு விடலாம்.

வாகரைப் பிரதேசத்தில் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் உட்பட இன்னும் சில பகுதிகளில் தபால் சேவை மந்த கதியில் காணப்படுகின்றது. எனவே இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அக்கிராமத்தில் கல்வி கற்ற இருவர்களை பதில் கடமைக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

வாகரைப் பிரதேசத்தில் வீதிப் போக்குரவத்துக்கு தடையாக காணப்படும் கட்டாக் காலி மாடுகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுவதுடன், முதல் கட்டமாக வாகரைப் பிரதேச சபையின் ஒலி பெருக்கி மூலம் கட்டாக்காலி மாடுகளை பிடித்தால் தண்டம் அறிவிடப்படும் என்று அறிவித்தல் வழங்க வேண்டும். அதனை மீறிச் செயற்பட்டால் கட்டாக்காலி மாடுகளை கைது செய்யுங்கள் என்றார்.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வாகரைப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.அ.அமலினி, செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், திணைக்கள அதிகாரிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here