வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் கண்காட்சி

0
285

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம் ~வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் எனும் தொனிப் பொருளிலான கண்காட்சி, விற்பனை மற்றும் சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு செயலக வளாகத்தில்  (22) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேசராஜா, கணக்காளர் டிலானி ரெய்வதன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.கலாதேவன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.நவநிதனி ரமேஸ், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை பிரதேச செயலாளர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

சிரட்டையினாலான பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் வேலுப்பிள்ளை சங்கர் என்ற விசேட திறனாளி ஒருவருக்கு பிரதேச செயலாளரால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் பார்வையற்ற சிமியோன் ராஜா என்பவருக்கு வெள்ளைப்பிரம்பும், பொறியியல் பீட மாணவர் ஒருவருக்கு கல்வி உதவியும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பலர் கிராமிய உற்பத்திப் பொருட்களான இராசவள்ளி, மரவள்ளி, கருவாடு, கீரை, கத்தரி, பாரம்பரிய திண்பண்டங்களை ஆர்வமுடன் வாங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

பிரதேச செயலாளர் தலைமை தாங்கி உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது-

வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் என்ற தொனிப் பொருளிற்கு ஏற்ப பெண்கள் ஆணுக்கு நிகராக இவ்வாறான வருமான மீட்டும் சுயதொழில்களை செய்வதனூடாக குடும்ப பொருளாதாரத்தை மாத்திரமல்ல நாட்டின் பொருளாதாரத்திலும் பாரியளவு செல்வாக்கு செலுத்த முடியும். எனவே பெண்கள் குடும்ப பொருளாதாரத்தை அதிகரிக்க இன்றைய நாளிலே திடசங்கற்பம் பூண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here