மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.

0
184

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும் என வாகரை பிரதேசத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி கேணல்.எஸ்.அமரசிறி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆறு மாத சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இலங்கையில் வாழும் நாம் நாட்டுக்காக என்ன பொறுப்புடன் செயற்படுகின்றோம் என்ற ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட்டு நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும்.

நாம் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் என்ன கடமைப்பாடு உள்ளது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். ஒருவர் தன்னைப் பாதுகாக்கும் பிரஜையாக மாறினால் நாட்டையும் பாதுகாக்கின்ற பிரஜையாக மாற்றிக் கொள்ள முடியும்.

நீங்கள் பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளீர்கள். ஆனாலும் நாட்டின் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, விழுமியங்கள் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய எனது நினைப்பாடாகும். அவ்வாறு கற்றுக் கொண்டால் நாட்டின் நல்ல பிரஜையாக செயற்பட முடியும்.

இளைஞர், யுவதிகளின் கடமையாக பெற்றோர்களை, ஆசான்களை கௌரவப்படுத்துவது முக்கிய கடமையாகும். அதேபோன்று சமூகம் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களை கண்ணியப்படுத்துவது, அதனை கடைப்பிடிப்பதுடன், உற்றார் உறவினர்களின் மனங்களை புண்படுத்தாது வாழ வேண்டும்.

கல்வி மற்றும் விழிப்புணர்வுகளை நல்ல முறையில் கற்று தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு நல்ல பிரஜையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். அத்தோடு நாம் அனைவரும் கற்பனையின் மூலம் நமது எதிர்காலத்தை நோக்கி செயற்பட்டால் முன்னேற முடியும் என்றார்.

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் ரி.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி தலைவர் எஸ்.ராஜேந்திரன், 23ம் இராணுவ பிரிவின் சிவில் உத்தியோகத்தர் எல்.கே.அமுணுகம, வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பன்டார, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இசாக், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here