கானல் நீராகுமா கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சி – ஜுனைட் நளீமி

0
321

புதிய உள்ளுராட்ச்சி மன்ற தேர்தல் முறைமையினால் கிழக்கில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல பிரதேச சபைகளை இலக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி பல பிரதே சபைகளை கைநழுவ விட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கட்சி பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றும் நிலை இல்லாத போதும் கல்குடா தொகுதியில் எதிர்பாராத வெற்றியினை பெற்றுள்ளதை கடந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினை மிக நீண்ட காலங்களுக்குப்பின்னர் சிரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்த சுயேட்ச்சை அணியினர் பெரும்பாண்மை வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை முஸ்லீம் காங்கிரஸ் சார்பிலான வாக்கு வங்கி அதிகரித்துள்ளதுடன் அளிக்கப்பட்ட 15890 வாக்குகளில் மக்கள் காங்கிரசின் தவிசாளரும், பிரதி அமைச்சருமாகிய கௌரவ அமீர் அலி அவர்களின் அணியினரால் வெறுமனே 6471 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தமை தேசியத்தில் காங்கிரஸ் தலைவரைப்பொறுத்தவரை சற்று இனிப்பான செய்தியாகவே அமைந்திருக்கும் என்பதில் கடந்தகால பனிப்போர் நிகழ்வுகள் சுட்டி நிற்கும். இம்முறை சிரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 8 ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் பெற்றபோதும் ஏனைய கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளியில் சிரீலங்கா சுதந்திர கட்சி-01, தமிழர் விடுதலைக்கூட்டணி- 01, தமிழரசுக்கட்சி -01 என ஆசனங்கள் காணப்படுகின்றன இதேவேளை காங்கிரஸ் ஆட்சியமைக்க இரண்டு மேலதிக ஆசனங்களும் மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைக்க மூன்று ஆசனங்களும் தேவைப்பாட்டாக உள்ளது. இந்தவகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழரசுக்கட்சி என்பன சிரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றபோதும் சுதந்திரக்கட்சியின் தீர்மான சக்தியாக கௌரவ அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் காணப்படுவதாலும், அமைச்சர் அமீரலிக்கும் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான புரிந்துணர்வு அரசியல் நடவடிக்கைளை நோக்குகின்றபோது கோட்பாட்டு ரீதியில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டி அமைச்சர் அமீரலியின் கட்ச்சிக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சிக்கும், சிரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் காட்ச்சிக்குமிடையிலான தற்போதைய முறுகல் நிலை சுதந்திர கட்சி காங்கிரஸ் ஆட்சியமைக்க வழிவகுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புக்கள் உள்ளது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையினை கைப்பற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் பிரதேச சபையினை காங்கிரஸ் அமைக்குமாயின் அதுவே அமைச்சர் அமீரலியின் எதிர்கால மாகாண, பாராளுமன்ற அரசியலுக்கு பாரிய சவாலாக அமையும். எனவே ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளைவிட அதிக ஆசனங்ளைக்கைப்பற்றியுள்ள காங்கிரஸ் சார்பு சுயேச்சை அணியின் கூட்டினை உடைத்து சில உறுப்பினர்களை தமது பேரம்பேசும் சக்திமூலம் உள்வாங்குவதில் அதிக கவனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

சுயேட்சைக்குழு பிரிந்து உறுப்பினர்கள் தனியாக இயங்க வாய்ப்புக்கள் உள்ளதா
சுயேச்சிக்குழுவினைப்பொறுத்தவரை வேற்புமனு தாக்களுக்கு முன்னராக வேட்பாளர்களிடையே எவ்வித ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டதாக தகவல் இல்லை. எனவே வெற்றியடைந்த அங்கத்தவர்கள் சுயாதீனமாக இயங்கும் அதிகாரம் தேர்தல் சட்டமூலத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. (தேசியப்பட்டியல் இதற்கு விதி விலக்கானதாகும்). சுயேட்சைக்குழுவினை தேர்தல் காலப்பகுதியிலும், தேர்தலுக்குப்பின்னரும் வழிநடாத்துவதற்கு தேசிய தலைமை தனது பங்களிப்பினை செய்ய முற்பட்டபோதும் உள்ளூர் தலைமை சரியாக தனது பங்களிப்பினை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உறுப்பினர்களிடையேயேயும் இம்மாற்றத்தினை கொண்டுவர பாடுபட்ட போராளிகளிடத்திலும் பொதுவாக காணப்படுகின்றது மறுப்பதற்கில்லை.

தேர்தல் காலங்களிலும் விடுமுறை அரசியல் போன்று தலைநகரை மையப்படுத்தி கள நிலையில் மேய்ப்பார் இல்லாத வெற்றிடத்தை தொகுதி அமைப்பாளர் ஏற்படுத்தியதாக கள நிலை செயலணி உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் தேர்தலில் கிடைக்கப்பெற்ற வெற்றியானது தனிநபர் செல்வாக்கினை மையப்படுத்தியுள்ளதினை காணமுடிகின்றது. காவத்தமுனை, தியாவட்டவான், ஓட்டம்வாடி – பீ/ 02, மீறாவோடை கிழக்கு போன்ற வட்டாரங்கள் அமைச்சரின் கோட்டையாக கருத்தப்பட்டவை. ஆனால் சுயேட்சைக்குழுவின் உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கினை கொண்டே வெற்றியடைந்துள்ளனர் என்பதனை யாவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சிலர் இவ்வட்டாரங்களில் தமது சுவரொட்டிகள், வெளியீடுகளில் தலைவர் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தை மாத்திரமே பயன்படுத்தி இருந்தனர். தமது பொதுக்கூட்டங்களிலோ அல்லது குழுக்கூட்டங்களிலோ உள்ளூர் அமைப்பாளர்கள் இல்லாமலே தமது பிரச்சாரங்களை அதிகம் மேற்கொண்டனர். ‘கட்சி தலைமையிடம் தாங்கள் களத்தில் இருப்பதாக கூறிக்கொண்டு எமது தொலைபேசி அழைப்புக்களை கூட பதிலளிக்காத குறைந்தது என்ன நடக்கின்றது எனக்கோராத உள்ளுர் அமைப்பாளர்கள் தொடர்ந்தும் கட்சியினை எவ்வாறு வழிநடத்தப்போகின்றனர்’ என கேள்வி எழுப்பும் ஒரு வேட்பாளர் தலைமைக்கு இருந்த அக்கறை கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு இல்லாமல் போனது விசனத்துக்குரியது என ஆதங்கத்தை தெரிவிக்கின்றார்.

திரண்ட வெண்ணையும் தாழியை உடைக்கும் உள்ளூர் அமைப்பாளரும்.

தேர்தல் முடிந்த கையோடு காங்கிரஸுக்கான அங்கீகாரம் கோறளைப்பற்று மேற்கில் கிடைக்கப்பட்டதான ஒரு சமிக்ஜை காணப்பட்டத்தினை உணரமுடிகின்றது. கட்சியின் எதிர்கால அரசியலை தக்கவைப்பதற்கான நல்லதொரு சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் உறுப்பினர்களிடையே தவிசாளர் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை கையாள்வதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு இருந்த அக்கறை உள்ளுர் அமைப்பாளருக்கு இருக்கவில்லை என கவலை தெரிவிக்கும் மூத்த கட்சியின் போராளி இப்பிரச்சினை சுலபமாக தீர்க்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடுகின்றார். உள்ளூர் அமைப்பாளர் இதுவரை உறுப்பினர்கள் அனைவரையும் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், முன்னாள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் உயர்பீட உறுப்பினர்களை ஒன்றுகூட்டி மக்கள் மன்றத்தில் அழகிய தீர்வினை பெற்றிருக்க முடியும் என்ற கருத்து போராளிகள் மத்தியில் எழுந்துள்ளது என குறிப்பிடுகின்றார்.

இம்மாற்றத்தினை மேற்கொள்ள அரசியல் வியூகங்கள் அமைத்து செயற்பட்ட அனைத்து செயற்பாட்டாளர்களும் ஒரே மேசையில் அமரவைத்து கலந்தாலோசிக்க உள்ளூர் அமைப்பாளர் தவறியுள்ளமை மீண்டும் வேறு ஒரு அமைப்பாளரை தேர்வு செய்து கட்சியினை வழிநடாத்துவதற்கான தேவையினை ஏற்படுத்தியுள்ளதாக தேர்தல் செயலணியின் முக்கிய செயற்பாட்டாளர் கருத்து தெரிவிக்கின்றார். தமது உத்தியோக பூர்வ முகநூலினூடாகவும் அமைப்பாளருக்கான மடலை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் காங்கிரசின் காய்நகர்த்தல்களும் எதிர்பார்ப்பும்.

அமைச்சர் அமீரலியினைப்பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் ‘உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு’ என்பதுபோல் சுயேச்சை அணியினருக்கிடையிலான கருத்து முரண்பாட்டை இலாவகமாக காய்நகர்த்திவிட்டு தூண்டிலுடன் காத்திருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது அணிக்குள்ளும் தவிசாளர் போட்டி காணப்பட்டாலும் கட்சி என்றரீதியில் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் தம் கைவசம் காணப்படுவதால் இவ்விடயம் விஸ்வ ரூபம் எடுக்க வாய்ப்பாக அமையாது. ஆனால் சில சுயேச்சை அங்கத்தவர்களிடம் மறைமுக பேரம் பேசல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதல் பிரேரணையாக பிரதேச செயலகப்பிரிவில் இருந்து பிரிக்கப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவினையும் மீளப்பெற வழக்கு தொடரல் என்ற அம்சம் சபையில் சமர்ப்பிக்கப்படும்போது அதற்கு கூட்டணி தமிழ்க்கட்சிகள் தமது ஆதரவினை வழங்காது. இச்சந்தர்ப்பத்தை மையமாக கொண்டு இரண்டு காங்கிரசுகளும் இணைய வேண்டும் என்ற கோசம் உருவாக்கப்பட்டு ஏற்கனவே தாம் பேசி முடித்த உறுப்பினரை அல்லது உறுப்பினர் சிலரை தமது கட்சியோடு இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் நிகழ்ச்சிநிரலும் நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மக்கள் ஆணையும் எதிர்பார்ப்புக்களும்

இம்முறை கல்குடாவின் அரசியல் நிலைமையினை நோக்கும்போது மக்கள் ஓரளவு சுயாதீனமாக சில முடிவுகளை எடுத்துள்ளனர் என்பதனை அவதானிக்க முடிகின்றது. ஓரளவு பொருத்தமானவர்களை பூரணமாக இல்லாவிட்டாலும் ஓரளவு தெரிவு செய்துள்ளனர். கல்விப்பின்னணி, செயற்திறன், புதிய சிந்தனை, மாற்று அரசியலுக்கான சிந்தனை, இரண்டாம் கட்ட தலைமையினை உருவாக்குவதில் இடைக்காலத்தில் ஏற்பட்ட வெற்றிடம் என பல அம்சங்கள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.

இத்தகைய ஏதிர்பார்ப்புக்களின் முடிவாகவே சுயேட்ச்சைக்குழுவிக்கான அங்கீகாரத்தினை மக்கள் வழங்கியுள்ளனர் என அவதானிகள் கருத்து தேர்விக்கின்றனர். இந்நிலையில் பதவி, சுய இலாபங்களுக்காக கட்சி தாவுதல் என்ற விடயம் தற்காலிக இலாபங்களை வழங்கினாலும் மக்கள் மன்றத்தில் எதிர்கால அரசியலுக்கு சாவுமணியாக அமையுமென மேலும் தெரிவிக்கின்றனர். தீர்வாக கல்குடா அரசியலில் தலைமை அண்மைக்காலமாக விசேட கவனம் செலுத்தி பல்வேறு வகிபாகத்தினை செய்து வருகின்ற தருணத்தில் இத்தகைய குளறுபடிகளை நீக்க மூத்த கட்சியின் செயற்பாட்டாளர்களதும், புத்தி ஜீவிகளதும் விருப்புக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் அமைய புதிய பல மாற்றங்களுடன் கட்சி நடவடிக்கையினை உரிய நபர்களது கையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிலைத்து நிற்கும் கட்சி அரசியலுக்கான மைல்கல்லாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here