மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம், மக்களின் மனங்களை வெல்வதே எமது இலட்சியம்

Spread the love

யாழ்ப்பாண மாவட்ட மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை மேம்பாடு ஆகியவற்றை கட்டி எழுப்பி கொடுக்கின்ற மகத்தான பணிகளில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-

30 வருட கால கசப்பான யுத்தத்துக்கு முன்னர் இந்நாட்டில் தமிழ், சிங்கள மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து உள்ளனர். இனத்தால் வேறுபட்டவர்களாக சித்திரிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும் மொழி, சமயம், கலாசாரம், பண்பாடு, விருந்தோம்பல், பாரம்பரியம், நாகரிகம் என்று வாழ்க்கை முறைமையின் ஒவ்வொரு அம்சத்திலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒன்றுபட்ட தன்மைகள் நின்று நிலவி விரவி காணப்படுகின்றன. இதன் அடையாளமாகவே தமிழ் – சிங்கள புத்தாண்டு இரு இன மக்களாலும் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

துரதிஷ்டவசமாக பிரிவினைவாதம், யுத்தம் ஆகியன தமிழ், சிங்கள மக்களை பிரித்து விட்டபோதிலும் யுத்தத்துக்கு பிந்திய அமைதி சூழல் மீண்டும் இரு இனங்களும் ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம், சாந்தி, சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றுடன் வாழ கூடிய இயல்பு நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி தந்து உள்ளது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான, மன நிறைவான தருணத்தில் யாழ். மாவட்ட மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன்.

யுத்தம் அற்ற இன்றைய அமைதி சூழலில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்கின்ற இலட்சியத்தை நோக்கி இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகின்றது. யுத்தத்தாலும், யுத்தத்தின் எச்சத்தாலும் காயப்பட்டு இருக்கின்ற மக்களின் மனங்களை ஒரு இரவுக்குள் ஆற்றுப்படுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவேதான் தூர நோக்கு, தீர்க்கதரிசனம், இதய சுத்தி ஆகியவற்றுடன் யாழ். மாவட்ட தமிழ் மக்களுக்கான எமது சேவைகளை தொடர்ந்தேச்சையாக மேற்கொண்டு வருவதுடன் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாண்டும் வருகின்றோம். அவ்வகையில்தான் இச்சித்திரைப் புத்தாண்டு பரிசாக பெருந்தொகை நிலத்தை மக்களுக்கு விடுவித்து தந்து உள்ளோம்.

மீண்டும் ஒரு யுத்தம் வர கூடாது என்று எல்லோரையும் போலவே நாமும் பெருவிருப்பம் கொண்டிருக்கின்றோம். அதற்காகவே எமது உடல், உழைப்பு, உயிர் ஆகியவற்றை அர்ப்பணித்து செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். எனவே மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்கள் உறவுகளுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு கற்பித்து கொடுத்து அவர்களை நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன் கொடுக்கின்ற நற்பிரஜைகளாக வளர்த்தெடுங்கள் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி என்கிற விதத்தில் இத்தருணத்தில் விநயமாக கேட்டு கொள்கின்றேன். தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற உறவு பாலமாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் செயற்படும் என்பதையும் இத்தால் கூறி வைக்கின்றேன்.

(Arivu)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*