வாழைச்சேனை புணானையில் சொகுசு பஸ் தீக்கிரை

Spread the love

கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள புணானை காட்டுப் பகுதியில் வைத்து ஓடிக்கொண்டிருந்த பஸ்சுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளைத் துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று 9.30 மணியளவில் புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன் கூட்டிய ஆசனப்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றி வருவதற்காக பொலொன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்த வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பஸ்ஸைப் பின் தொடர்ந்து வந்த நால்வர் பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தலைமறைவாகியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் தீவைக்கப்பட்ட சமயம் பஸ்ஸிலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார (வயது 30) மற்றும் அவரது உதவியாளரும் நடத்துனருமான வாழைச்சேனையைச் சேர்ந்த எம். முஹம்மத் (வயது 25) ஆகியோர் தப்பித்துக் கொண்ட நிலையில் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*