புதிய தேர்தல் முறை தொடர்பில் தற்போது தான் ஜனாதிபதிக்கு ஞானம் பிறந்துள்ளதா..? – நாமல்

0
194

நாங்கள் எப்போதோ தேர்தல் முறையில் பிழை இருப்பதாக கூறியதை, இப்போது தான், ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கண்டு பிடித்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் பிழை இருப்பதான விடயம் மிகவும் தெளிவானது. முன்னர் நான்காயிரமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை, இம் முறை மூலம் எட்டாயிரமாக மாறியிருந்தது. இப்படி இரட்டிப்பாக மாறும் போதே பல பிரச்சினைகள் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை நாங்கள் அந் நேரமே சுட்டிக்காட்டி இருந்தோம். நாங்கள் சுட்டிக்காட்டியதையாவது சிந்தித்திருந்தாலும், இதனை கை விட்டிருப்பார்கள்.

ஜனாதிபதியிடம் எத்தனையோ சட்ட ஆலோசகர்கள் உள்ளனர். இவர்கள் நிச்சயம் இது பற்றிய முன் எச்சரிக்கைகளை வழங்கி இருப்பார்கள். இப்படியான பிரச்சினைகள் வரும் என்பதை முன் கூட்டியே ஜனாதிபதி அறிந்துமிருப்பார்கள். இப்படி பிரச்சினைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தினால், பழைய முறையில் உடனடியாக தேர்தலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தேர்தலை நடாத்தினால், அவர்களின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும். இப்போது அவர்களின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறியுள்ளமை நாடே அறிந்ததே. இதனை தவிர்க்க, அது செய்யலாம், இது செய்யலாம் என்று காலத்தை கடத்தினார்கள். இறுதியில், இதனை சொல்லியே மிக நீண்ட காலத்தை கடத்திவிட்டார்கள். இப்படி காலம் கடத்திய பிறகு, மக்களிடம் இந்த முறையில் பிழை இருப்பதாக கூற முடியாது. மக்கள் எள்ளி நகையாடிவிடுவார்கள்.

சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுவதானால், தங்களது இயலாமையை மறைத்துக்கொள்ளவே, இந்த அரசாங்கம், இந்த தேர்தல் முறையை பயன்படுத்தியது. அதாவது, தங்களது சுயநலத்துக்காக மக்களின் ஜனநாயக உருமைகளில் விளையாட கூட தயங்கவில்லை. இப்போது நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கிடக்கிறது. இது மிகவும் பாரதூரமான செயலாகும். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து, இவ்வாறான விடயங்களில் இருந்து இவ்வரசினர் தவிர்ந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு மக்களும் தகுந்த பாடம் புகட்ட தயாராக வேண்டும். என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here