ஷஃபான் நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோம்

0
1008

எம்.ஐ அன்வர் (ஸலபி)

இஸ்லாமிய வருட கலண்டரில் ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அற்கு அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். அந்தவகையில் ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இம்மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. ஆகவே
இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லைஇ என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

மற்றுமொரு அறிவிப்பில்,

நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என வந்துள்ளது.

பிறிதொரு அறிவிப்பில்

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும், அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நஸஈ).

ஷஃபான் மாதம் முழுவதும், அம்மாத்தின் அதிகமான நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என வந்துள்ள மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும், அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்கும்படி பணிக்கப்பட்டதன் தத்துவம் பற்றி உஸாமா (ரலி) இவ்வாறு அறிவிக்கின்றார்கள்

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத்)

மக்கள் அசிரத்தையாக இருக்கும் ஷஃபான் மாதம் சிறப்பு வாய்ந்தது. அடியார்கள் செய்யக் கூடிய அமல்கள் அம்மாதத்தில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் எடுத்துக் காட்டப்படும் பொழுது, நோன்பும் கூட இருந்தால் தன் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது என மேற்படி ஹதீஸ் எமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி ஷஃபான் மாத நோன்பு ரமழான் மாத நோன்பிற்கான சிறந்ததோர் பயிற்சியாகவும் அமைகிறது. இயல்பிலேயே – திடீரென ஏற்படும் உடல், உள ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை. ஆனால் அதை முன்கூட்டியே ஒரு பயிற்சியாககக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகிறது. எனவே தான் பசி, தாகம், இச்சை போன்றவற்றை அடக்கி ஷஃபான் மாத நோன்பை கஷ்டமாகக் கருதாது இலகுவாக நோற்று விடுவான். இந்த வகையில் ஷஃபான் நோன்பு, ரமழான் நோன்பிற்கான பயிற்சியாக அமைகிறது.

ஷஃபான் மாதத்தில் எந்தளவு நோன்பு நோற்க முடியுமோ அந்தளது நோற்பது நபிவழியாக இருக்கிறது. மாறாக, 15 ம் நாள் தான் சிறப்பான நாள், அதுவே பராஅத் துடைய நாள், அன்று நோற்கும் நோன்பு மட்டுமே சிறப்பானது எனக் கூறுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணானது.

பராஅத் இரவும், வணக்கங்களும்

ஷஃ’பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துஆக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ஆம் நாளை, ‘ஷப்-ஏ-பராஅத்’ எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.
இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அதிம் அழுத்தம் கொடுத்துப் போதித்துச் சென்ற ஷஃபான் மாத நோன்புகள் இன்று புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் காட்டித் தராத பராஅத் நோன்பும், அதில் புரியப்படும் சில வணக்கங்களும் சுன்னாவின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருவதாகும்.

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவே பராஅத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ சூட்டியதற்கு சரியான சான்றெதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).

இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுவதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இமாம்களான அஹ்மத் (ரஹ்), இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ (ரஹ்) தமது அல்மௌழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் மிக மோசமான, வெறுக்கத்தக்க இரு பித்அத்களாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

பராஅத் இரவு சிறப்பு வாய்ந்தது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை எனக் கூறுவோர் தமது கருத்துக்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அவர்களின் மூலம் அபூ ஸயீத் பின்தார் என்பவரின் வாயிலாக இன்பு அஸாகீர் அவர்கள் தமது தரீகுத் திமஷ்க் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அபூ ஸஈத் பின்தார் என்பவரும் இப்றாஹீம் பின் அபீ யஹ்யா என்பவரும் பொய்யர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வறிவிப்பு முஸ்னத் பிர்தௌஸ், பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதன் அனைத்துத் தொடரிலும் கோளாறுகள் காணப்படுவதாக ஹதீஸ்கலை அறிஞர் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இவ்வறிவிப்பு மறுக்கப்படக் கூடியதாகும்.

பராஅத் என்றொரு இரவு இல்லை. அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என இவ்வளவு தெளிவுபடுத்தப்பட்டபின்னரும், அந்த இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் ஸுறா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயுள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனக் கூறுவது எவ்வளவு தவறானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட பயன்கள் மூன்று விதமான உத்தரவாதங்கள் ஆகும். இத்தகைய உத்தரவாதங்களை அல்லாஹ்வோ, அவனது தூதரோதான் வழங்க முடியும். அவ்விருவரில் ஒருவர் வழங்குவதானால் அது அல்குர்ஆனிலோ அல் ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்று யாஸீன் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவுறுத்தியதற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

ஆயுளை நீடிப்பதும், ரிஸ்க்கை விஸ்தீரனமாக்குவதும், பாவங்களை மன்னிப்பதும் அல்லாஹ் செய்ய வேண்டியவைகளாகும். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி இத்தகைய உத்தரவாதங்களை மனிதர்கள் வழங்குவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையீடு செய்வது ஆகும்.

ஷவ்வால் ஆறு நோன்புகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத, எந்த விதமான உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும்.

எனவே, ஷஃபானின் 15 ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here